தமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்?

தமிழர்களிடம் இருக்கும் தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி குறித்து
தமிழ்த்தேசியப்_பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியிருப்பதாவது……

தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின் தெலுங்கர் எதிர்ப்பை நாம் ஏற்க வேண்டியதில்லை.

ஆனால் அவர்களுக்கு அவ்வாறான எதிர்ப்புணர்ச்சி ஏற்படக் காரணங்கள் யாவை என்று ஆராய வேண்டும்..
காரணங்களே இல்லாமல், இந்த எதிர்ப்புணர்ச்சி உருவாகவில்லை!

சற்றொப்ப நானூறு ஆண்டுகளாகத் தெலுங்கு மன்னர்கள்
தமிழ்நாட்டைப் பிடித்து அதன் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்கள். அதனால் பெரும் பெரும் நிலக்கிழார்களாகவும், சமீன்தார்களாகவும் பாளையப்பட்டு ஆட்சியாளர்களாகவும் தெலுங்கர்கள் உருவானார்கள்.

விசயநகரத் தளபதிகள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு தெலுங்கும் சமற்கிருதமும் கோலோச்சின. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழிசை புறக்கணிக்கப்பட்டு, தெலுங்கிசை தமிழ்நாட்டுக் “கச்சேரிகளை” ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

திருவையாற்றில் நடக்கும் தியாகராசர் இசை விழாவில் தண்டபாணி தேசிகர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார் என்பதற்காக – அவர் பாடி முடித்த பின் அம்மேடையைக் கழுவித் “தூய்மை”ப்படுத்தினார்கள் பிராமணர்கள்! பெங்களூருவில்
இசை நிகழ்ச்சியில் எம்.எஸ். சுப்புலட்சுமி தமிழிலும் பாடினார் என்பதற்காகக் கன்னடர்கள் கல்லெறிந்தார்கள்.

தெலுங்கு பேசுவோரில் உள்ள மேல் சாதியாரும் பிராமணர்களும் தமிழ்நாட்டின் ஆளும் வர்க்கமாக _- ஆளும் “இனமாக” விளங்கினார்கள்.

பிரித்தானியக் காலனி ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டபோது, அது உருவாக்கிய மாகாணப் பிரிவினையில், இன்றுள்ள முழு ஆந்திரப்பிரதேசமும் சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டது. தமிழர் எண்ணிக்கைக்குச் சமமாகத் தெலுங்கர் எண்ணிக்கையும் இருந்தது.

இந்தப் பின்னணியில் தெலுங்கரான பிட்டி. தியாகராயர் தலைமையில் நீதிக்கட்சி சென்னையில் தொடங்கப்பட்டது. ஆந்திரத்தின் சமீன்தார்கள், நிலக்கிழார்கள்தான் நீதிக்கட்சியில் மேலாதிக்கம் செலுத்தினர். பிரித்தானிய அரசு நடத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

சுப்பராயலு ரெட்டியார் என்ற தெலுங்கர் சென்னை மாகாணத்தில் 1920 இல் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் முதலமைச்சர் ஆனார்..
அடுத்து, பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் என்று நீதிக்கட்சி முதலமைச்சர்கள் தெலுங்கர்கள்!

ஆந்திரம் பிரியாத நிலையில் 1946 – 1947இல் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக்காரர் தங்குத்தி பிரகாசம் முதலமைச்சர்!

விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் காங்கிரசு முதல் அமைச்சர்களாக – தமிழ்நாட்டைச் சேர்ந்த தெலுங்கு பேசும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா!

தி.க.வினரும் தி.மு.க.வினரும் தமிழர் இன அடையாளத்தை மறைக்கும் வகையில், “திராவிடர்” என்ற ஆரியச்சார்பான ஓர் இன அடையாளத்தைத் தமிழர்கள் மேல் சுமத்தினார்கள்.

இன்றுவரை முழுமையாகத் தமிழர் இன அடையாளத்தை மீட்க முடியாமல், திராவிடச் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களும் சேர்ந்தது திராவிட நாடு என்று
தி.க., தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்; எழுதினார்கள்! ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் “திராவிடர்” என்ற பேச்சே கிடையாது!

அந்தக் கூச்சல் தமிழ் மண்ணில் மட்டுமே ஒலிக்கிறது.

ஆந்திர நடிகர் “தெலுங்கு தேசம்” என்றுதான் கட்சி தொடங்கினார்.
புதிதாகத் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய நடிகர் விசயகாந்தோ,
திராவிடப் பெயரைத் தம் கட்சிக்கு வைத்தார். விசயகாந்த் தாய்மொழி தெலுங்கு என்பதால் நாம் அவரை அயலாராகப் பார்க்கவில்லை.

ஆனால் அவர் உளவியல் எப்படிச் செயல்படுகிறது, தெலுங்கு தேசம் தொடங்கிய நடிகர் என்.டி. இராமாராவ் உளவியல் எப்படிச் செயல்பட்டது என்று தமிழ் இளைஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

தெலுங்கு தேசம் என்ற பெயர் ஆந்திரம், தெலுங்கான மாநிலங்களுக்கு மிகப் பொருத்தமான பெயர் என்பதில் நமக்கு மாறுபாடில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்குப் பொருத்தமற்ற – தமிழை மறைக்கக் கூடிய திராவிடப் பெயரை மீண்டும் மீண்டும் சூட்டுகிறார்களே என்ற வருத்தமான மனநிலை நமக்கு உருவாகிறது.

தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலமைச்சர்களாக வருகிறார்கள்.

இப்பொழுது கூட கன்னட நாட்டு ரஜினிகாந்த் முதலமைச்சராக
முன் வருகிறார்.

ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் மாநில அளவிலான அரசியல் தலைவராக, முதலமைச்சராக
ஏன் ஒரு தொழிற்சங்கத் தலைவராகக் கூட தமிழர்கள் வரமுடியவில்லையே எனத் தமிழ் இளைஞர்கள்
எண்ணிப் பார்க்கிறார்கள்.

இன்றும் தமிழ்நாட்டில் திராவிடத்தை அதிகமாக வலியுறுத்துவோர்
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தாம் என்ற
கருத்து நிலவுகிறது.

கடந்த ஆண்டு தெலுங்கு மாநிலங்கள் மாநாடு சென்னையில் நடந்தது. அதில் தமிழ்நாடும் தெலுங்கு மாநிலம் என்றும், தமிழ்நாட்டில் தெலுங்கை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

வெங்கையா நாயுடுவின் சிறப்புரையுடன், தமிழிசையின் துரோக உரையுடன் இம்மாநாடு நடைபெற்றது. அதில், தெலுங்கு மொழியை வளர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விட்டார் வெங்கையா நாயுடு!

அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்தது. இம்மாநாட்டிற்கு முந்தைய ஆண்டில் தெலுங்கு மாநாட்டைச் சென்னையில் நடத்தினார்கள். அதிலும் வெங்கையா கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வாழும் தெலுங்கு மக்கள் முந்நூறு நானூறு ஆண்டுகளாக இம் மண்ணில் வாழ்ந்து, இம்மண்ணின் மக்களாகி, தமிழைத் தங்களின் இன்னொரு தாய்மொழியாகவே நேசிக்கும் உளவியல் கொண்டுள்ளார்கள்.

ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வணிகம் செய்ய வந்து குடியேறியவர்கள், அதிகாரியாக வந்து குடியேறியவர்கள், வேலை நிமித்தம் வந்து குடியேறியவர்கள், தமிழ்நாட்டையும் ஆந்திரத்தையும் இரட்டைத் தாயகமாகக் கொண்டவர்கள். அவர்களில் பலர் இன்னும்
அதே_உளவியலில் இருக்கிறார்கள்.

மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த “சென்னைவாசிகள்” இவர்கள்தாம்!

இப்போது இந்திய ஏகாதிபத்தியவாதிகள் – தமிழ்நாட்டில் தமிழ் இன விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் வளர்ந்து விடாமல் தடுப்பதற்காகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களைப் பிரித்துவிடும் சூழ்ச்சியில் – தமிழ்த் தேசியத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் பெரு முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

அதற்கான பொறுப்பாளர்களாக வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை அமர்த்தியுள்ளார்கள். அவ்வப்போது ஆந்திராவைச் சேர்ந்தவர்களை ஆளுநராகவும் அனுப்புகிறார்கள். பிறந்த இனத்திற்கு இரண்டகம் செய்து பதவி பெறும் துரோகிகளாகப் பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை சௌந்திரராசன் போன்றோர் செயல்படுகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்த்தேசியத்தை ஏற்றுள்ள இளைஞர்களில் ஒருசாரார் தெலுங்கர் – எதிர்ப்பை முதன்மைப்படுத்துகிறார்கள் என்ற நடப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் வலுச்சேர்க்க நல்கிட்ட அறிவுத்துறைப் பங்களிப்பையும், இயக்க வழிப்பட்ட பங்களிப்பையும் பார்க்க வேண்டும். தமிழ் அறிஞர்களாக, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களாக, ஈழ விடுதலைப் போராட்டத்தில் மெய்யுணர்வோடு பங்கேற்றவர்களாக, அதற்காகத் தன்னையே எரித்துக் கொண்டவர்களாக, இன்று தமிழ்வழிக் கல்விப் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்களாக, தமிழ்த்தேசியத்தின் செயல்வீரர்களாக, தெலுங்கை மரபுவழித் தாய்மொழி யாகக் கொண்டவர்கள்

நம் முன்னே நிற்கிறார்கள். அவர்கள் எல்லாம் “தந்திரமாகச்” செயல்படுகிறார்கள், போலியாகச் செயல்படுகிறார்கள் என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் செயலாக அமையும்! அவர்கள் உண்மை யாகவே செயல்படுகிறார்கள்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தெலுங்கைத் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக்கவோ, கல்வி மொழியாக்கவோ கோரவில்லை. அவ்வாறு கோரும்படி இந்திய ஏகாதிபத்தியவாதிகளும் சென்னைப் பகுதியில் குடியேறி வாழும் தெலுங்கு வணிகர்களும், அதிகாரப் பிரிவினரும் அம்மக்களைத் தூண்டுகிறார்கள். நம்முடைய அணுகுமுறை அந்தத் தூண்டுதலுக்குத் தூபம் போட்டதாக அமையக் கூடாது!

தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்களுக்கிடையே தாய்மொழியில் பேசிக் கொள்வதை நாம் எதிர்க்கக் கூடாது. அதை அவர்களின் தகுதிக் குறைவாகக் கருதக் கூடாது. தாய் மொழியில் பேசாதே என்று சொல்வது மிகக் கொடிய மனித உரிமைப் பறிப்பாகும்!

நடைமுறை உண்மை என்னவெனில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களில் பலர்க்குத் தெலுங்கே தெரியாது என்பதுதான்! ‘நயினா, அவ்வா’ என்ற சொற்களைத் தவிர வேறு தெலுங்குச் சொற்கள் அவர்களுக்குத் தெரியாது. குடும்பங்களில் அவர்கள் தமிழில்தான் பேசிக் கொள்கிறார்கள். இந்த வளர்ச்சிதான் தன்னியல்புப்படுத்தும் (Assimilation) வளர்ச்சி!

நம் இளைஞர்களில் சிலர் குறுக்கிட்டு அவர்களைத் தமிழர்கள் அல்லர் என்று கூறினால், அவர்கள் தெலுங்கைத் தேடும் நிலை உருவாகும்!

தமிழிலிருந்து பிரிந்தது தெலுங்கு; அவர்கள் தங்களின் மூலத் தாய்மொழிக்குத் திரும்புவது சரியானதுதான்! அதேவேளை தெலுங்கில் பேசக் கூடாது, தெலுங்கைப் படிக்கக் கூடாது என்று யாரும் அவர்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது!”

இவ்வாறு பெ.மணியரசன் கூறியுள்ளார்.

Leave a Response