அருண் ஜெட்லி மறைவு – பிரதமர் வரவில்லை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.

திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார். ஜேட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்தனர்.

இந்நிலையில், ஜேட்லி இன்று (ஆகஸ்ட் 24) பிற்பகல் 12.07 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அருண் ஜேட்லியின் இறுதிச்சடங்குகள் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. ஜேட்லி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் வரமுடியவில்லை.

ஆனால், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘‘அருண் ஜேட்லி அரசியல் சாதனையாளர், மிகச்சிறந்த அறிவாளி, சட்ட நிபுணர். இவை அனைத்தையம் விடவும் நகைச்சுவை உணர்வும், ஈர்ப்பும் கொண்ட தலைவர். அவரது மறைவு என்னை மிகவும் வேதனை படுத்துகிறது. மதிப்பு மிக்க ஒரு நண்பரை இழந்து விட்டேன்.

பல ஆண்டுகளாக அவருடன் பழக கிடைத்த வாய்ப்பு பேரும் பேரு. நுண்ணிய அறிவும், பிரச்சினைகளை புரிந்து கொள்ளுதலும் வெகு சிலருக்கே வாய்க்க பெறும். அத்தகைய தன்மை கொண்டவர் அருண் ஜேட்லி’’ எனக் கூறியுள்ளார்.

இதனிடையே அருண் ஜேட்லியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வர வேண்டாம், மிக முக்கியமான சுற்றுப் பயணம் என்பதால் திட்டமிட்டபடி பயணத்தை தொடருமாறு அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அருண்ஜேட்லியின் இறுதி நிகழ்வுக்கு மோடி வருவது உறுதியில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

Leave a Response