தமிழ்ப்பண்பாட்டின் அங்கம் பனைமரம், அதைக் காக்க யாழ் அரசு முயற்சி.

பனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக ஜுலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்….

தமிழ்மக்களின் இயற்கைச் சூழலிலும், பண்பாட்டுச் சூழலிலும், பொருளாதார மேம்பாட்டிலும் பிரதான இடத்தைப் பெற்றிருந்த பனை வளம் தற்போது அதிகம் கவனிக்கப்படாத ஒரு இயற்கை வளமாக உள்ளது. எமது பனைவளம் போர்க் காலத்தில் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. பதுங்கு குழிகளை அமைப்பதற்கும், காப்பரண்களை அமைப்பதற்கும் இலட்சக்கணக்கான பனை மரங்கள் தறித்து வீழ்த்தப்பட்டதோடு, பல்குழல் எறிகணை வீச்சுகளாலும் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளன.

போருக்குப் பின்னரும் பனை மரங்கள் அனுமதியின்றிப் பெருமளவுக்கு அழிக்கப்படுகின்றன. இது இயற்கைச் சூழலின் சமநிலையை, குறிப்பாக காட்டு வளம் இல்லாத யாழ் குடாநாட்டின் சூழலைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது.

தமிழ்மக்களின் பண்பாட்டைப் ‘பனைப் பண்பாடு’என்று சொல்லும் அளவுக்கு உணவு முதல் உறையுள் வரை எமது வாழ்வியலில் பிரதான இடம் பிடித்துவந்த பனைவளம் தற்போது எமக்கு அந்நியமான ஒரு வளமாக மாறியுள்ளது.

பனைப் பொருட்களின் பயன்பாடு அருகிவருவதன் காரணமாக, இப்பனை வளத்தைத் தொழில் மூலாதாரமாகப் பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு பனை வளத்தைப் பெருக்கவும், நவீன காலத்துக்கு ஏற்பப் பனைப் பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும், இதன்மூலம் பனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் அறிஞர்களினதும் பொதுமக்களினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தாலகாவலர் அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களின் நினைவு தினமான ஜுலை 22ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வடமாகாண விவசாய அமைச்சு பனை அபிவிருத்திச் சபையுடனும், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுடனும் வேறு பொருத்தமான அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Response