பாஜகவின் பிடியிலிருந்து நழுவும் ரஜினி

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு முன்னால் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி மோடி என்ற தனிமனிதருக்குக் கிடைத்த வெற்றி. மக்களை கவரக்கூடிய தலைவரால்தான் கட்சிக்கு வெற்றி. அப்படி கவரக்கூடிய தலைவராக மோடி உள்ளார்.

நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி, வாஜ்பாய்க்கு பிறகு ஈர்க்கக் கூடிய தலைவராக மோடி உள்ளார். தலைவரை முன்னிறுத்தித்தான் வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான மனநிலை நிலவியது. அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடையக் காரணம். தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை. ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது. ஆளும்கட்சியை போல, எதிர்க்கட்சியும் முக்கியம் என்பதால், ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது.

கோதாவரி – கிருஷ்ணா நதிகள் இணைக்கப்படும் என நிதின் கட்காரி கூறியது பாராட்டுக்குரியது. மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள்

இவ்வாறு ரஜினி கூறினார்.

மோடியைப் பாராட்டிவிட்டு தமிழகத்தில் அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் தவறு என்று சொல்லியிருப்பதோடு மோடியின் சிம்மசொப்பனமாக இருக்கும் ராகுலுக்கு ஆதரவாகவும் பேசியிருப்பதால் பாஜகவின் பிடியியிலிருந்து நழுவ முயல்கிறார் ரஜினி என்கிற கருத்து வருகிறது.

Leave a Response