தேர்தல் முடிவுகள் – மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி கருத்து

மக்களவை, தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிக இடங்களிலும், இடைத்தேர்தலில் 13 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை வகித்து வருகிறது.

முன்னிலை நிலவரங்களுக்கு மத்தியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த வெற்றியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், களத்தில் இறங்கும் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அதன்படி இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். இப்போது ஒரே ஒரு கவலைதான். அது, கலைஞர் இந்த வெற்றியைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான்.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இன்னும் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என சதி வேலை செய்வார்கள். அதை முறியடித்து வெற்றிபெற வேண்டும்” எனக் கூறினார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இந்திய அளவில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பல மாநிலங்களில் 2014 தேர்தலைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் சரிவை செய்துள்ளது. 50 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

இந்தத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த முறை அமேதி தொகுதி காங்கிரசுக் கட்சிக்கு தோல்வியைப் பரிசளித்துள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, மோடிக்கும், பா.ஜ.க-வுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்பியுள்ளனர். மக்களின் முடிவை வரவேற்கிறோம். மக்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்றேன் அது தற்போது நடந்துள்ளது.

எனவே, மக்களின் இந்த முடிவுக்குச் சாயம் பூச விரும்பவில்லை. எது தவறாகப் போனது என்பதை விவாதிக்கும் நேரமும் இதுவல்ல. அமேதியில் என்னை வீழ்த்திய ஸ்மிரிதி இரானிக்கு வாழ்த்துகள். அமேதி மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரசார் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. நாம் கடுமையாகப் போரிட வேண்டும். கடின உழைப்பை அளிக்க வேண்டும் என்றார்.

Leave a Response