தமிழகத்துக்குக் கேடு செய்யும் மோடிக்கு எதிராகப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 05.12.2018 காலை தஞ்சை – பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்.

அக்கூட்டத்தில், மேக்கேத்தாட்டில் அணை கட்ட அனுமதி வழங்கியுள்ள நரேந்திர மோடி அரசைக் கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டனப் பேரணி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் 67 ஆ.மி.க. (TMC) கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கம் கட்டிக்கொள்ள இந்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் திட்ட மதிப்பீடு ரூபாய் 5,912 கோடி! இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குரிய தொழில்நுட்ப ஆய்வறிக்கை தயாரித்து அனுப்புமாறு இந்திய அரசின் நடுவண் தண்ணீர் ஆணையம் கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேக்கேதாட்டு நீர்த்தேக்கத்திற்கு மிச்சநீர் நீர்த்தேக்கம் என்று கர்நாடக அரசு பெயரிட்டுள்ளது. இதன் உண்மையான பொருள் வெள்ளப்பெருக்கில் கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் மிச்ச நீரும் மேட்டூர் அணைக்கு வராமல் தடுக்கும் நீர்த்தேக்கம் என்பதாகும்.

காவிரித் தீர்ப்பாயம் 05.02.2007 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கும் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பிற்கும் நேர் எதிராக, கர்நாடக அரசு புதிய நீர்த்தேக்கம் கட்டி தமிழ்நாட்டிற்கு வரும் மிச்ச நீரையும் தடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அந்த சட்டவிரோதச் செயலுக்கு – மக்கள் விரோதச் செயலுக்கு இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நரேந்திர மோடிக்கும் அவரது அலுவலகத்திற்கும் தெரியாமல் நடுவண் தண்ணீர் ஆணையம் மேக்கேதாட்டு அணை கட்டுமான ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி இருக்காது!

ஆனால் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு சட்டப்பேரவையும், மேக்கேதாட்டில் அணைகட்ட கர்டநாடகத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று தொடர்ந்து இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதங்களும் தீர்மானங்களும் அனுப்பியுள்ளன.

முதலமைச்சர் செயலலிதா கடந்த 02.09.2013 அன்றும், முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 12.11.2014 அன்றும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார்கள்.

மேக்கேதாட்டில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை 05.12.2014 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, அதை மோடி அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதற்கு முன்பாகத் தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது (I.A.No. 20/2014).

பின்னர் முதல்வர் பொறுப்பிலிருந்த ஓ.பன்னீர்செல்வம் 21.03.2015 அன்று நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி, மேக்கே தாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 04.09.2018 அன்று தலைமை அமைச்சர் மோடிக்குக் கடிதம் எழுதி, கர்நாடகம் மேக்கேத்தாட்டு அணை தொழில்நுட்ப ஆய்வறிக்கை தயாரிக்க நடுவண் தண்ணீர் ஆணையம் அனுமதி தரக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க தமிழ்நாட்டு உழவர் அமைப்புகளும் கட்சிகளும் மேக்கேதாட்டில் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன.

பல்வேறு உழவர் மற்றும் அரசியல் இயக்கங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டு வரும் காவிரி உரிமை மீட்புக்குழு, கர்நாடக எல்லையிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேன்கனிக்கோட்டை யிலிருந்து 07.03.2015 அன்று மேக்கேத்தாட்டில் சென்று மறியல் நடத்த ஐந்தாயிரம் பேர் கொண்ட அணிவகுப்பு நடையை மேற்கொண்டது. தமிழ்நாடு எல்லைக்கு அருகே தமிழ்நாடு காவல்துறை 5 ஆயிரம் பேரையும் கைது செய்தது. கணிசமான அளவில் பெண்களும் கைது செய்யப்பட்டார்கள்.

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், ஐந்தாம் தொகுப்பில் (Vol. V XI 0- வது பிரிவு “மேல்பாசன மாநிலம் கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு அட்டவணையில் ஒதுக்கியுள்ள தண்ணீரின் அளவைப்பாதிக்கும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது” என்கிறது. அதில் XVIII – வது பிரிவு – நான்கு மாநிலங்களும் ஒரு மனதாகச் சம்மதித்தால் புதிய பாசன ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்” என்கிறது. இந்தப் பகுதிகளை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.

நரேந்திர மோடி அரசு எந்தச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்கவில்லை. தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையும் துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டு, கர்நாடகத்தின் சட்டவிரோத அணைக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

நடுவண் தண்ணீர் ஆணையம் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுத்தபின் தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசும், அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும் தெரிவிக்கும் கண்டனங்களுக்கு இந்திய அரசு விளக்கம் அளிக்கக்கூட முன் வரவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 03.12.2014 அன்று கூடிய போது, மேக்கேதாட்டுக்கு நடுவண் தண்ணீர் ஆணையம் ஆய்வறிக்கை அனுமதி கொடுத்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் செய்த விவாதத்திற்குப் பூசிமெழுகித்தான் அதன் தலைவர் மசூத் உசேன் விடை அளித்தார். நடுவண் தண்ணீர் ஆணையம் வழங்கிய அனுமதி சட்டப்படி செல்லாது என்று அவர் கூறவில்லை.

இந்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை, தமிழ் மக்களை – இனப்பாகுபாட்டோடு பார்த்து வஞ்சித்து வருகிறது. ஒதுக்கி வைக்கப்பட்ட இனமாக (Apartheid) தமிழர்களை நடத்தி வருகிறது. இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் இந்த இன ஒதுக்கல் கொள்கையைத் தமிழ்நாட்டிற்கு எதிராகக் கடைபிடிக்கின்றன.

இந்த அவல நிலையில் தமிழ்நாட்டு மக்கள் – இருபது மாவட்ட மக்களுக்குக் குடிநீராகவும் 12 மாவட்டங்களில் 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீராகவும் உள்ள காவிரி என்ற உயிர் நீர் உரிமையைக் காக்கவும் மீட்கவும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழு, முதல் கட்டமாக வருகின்ற 18.12.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சையில் இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலையும், நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டுக்கு செய்துள்ள துரோகத்தையும் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணியின் முடிவில், இந்திய அரசின் நடுவண் தண்ணீர் ஆணையம் கர்நாடகத்திற்குக் கொடுத்துள்ள மேக்கேத்தாட்டு அணைக்கான அனுமதியை முழுமையாகக் கைவிட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்படும்!

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொண்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு உணர்வை வெளிப்படுத்துமாறு காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response