சாகித்ய அகாதமி விருது நாதசுரக்கலைஞர்களுக்கான அங்கீகாரம் – எஸ்.ரா நெகிழ்ச்சி

இலக்கியப் படைப்புகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாதமி விருது.

மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாதமி நிறுவனத்தால் 1955 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ், மலையாளம், ஆங்கிலம் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது தில்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனத்தில் நேற்று (டிசம்பர் 5,2018) அறிவிக்கப்பட்டது.

7 கவிதை புத்தகங்கள், 6 நாவல்கள், 6 சிறுகதை புத்தகங்கள், 3 விமர்சனங்கள் மற்றும் 2 கட்டுரைகள் ஆகியனவற்றை இயக்கிய 24 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி செயலாளர் சீனிவாசராவ் விருதுகளை அறிவித்தார்.

இவற்றில், தமிழ் மொழியில் சிறந்த படைப்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நூலில் எஸ்.ராமகிருஷ்ணன், கரிசல் பூமியில் தலைமுறை தலைமுறையாக வாழும் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக எழுதி இருக்கிறார்.

இவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா, விஷால் நடித்த சண்டக்கோழி, மாதவன் நடித்த ரன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 சனவரி மாதம் 29 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும்.

இந்த விருது ரூ.1 இலட்சம் ரொக்கமும், தாமிரப் பட்டயமும் கொண்டது.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், தற்போது சென்னையில் வசிக்கிறார். சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சாகித்ய அகாதமி விருது பெற்றது குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எனது 25 ஆண்டு கால எழுத்துப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இதனைக் கருதுகிறேன்.

மதுரை, கோவில்பட்டி, சாத்தூர் என கரிசல் மண் சூழ்ந்த பூமியில் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் நாவலாகப் படைத்தேன்.

கோவில் திருவிழாக்கள் உட்பட எத்தனையோ விழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களை பார்த்திருப்போம். ஆனால் மங்கல ஒலி எழுப்பும் அவர்களின் வாழ்க்கை எத்தனை துயரங்களும், துன்பங்களும் சூழ்ந்தது என்பதை யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த நாவல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

நாதஸ்வரக் கலைஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக தங்களது வித்தையை அழிந்து போகாமல் காத்து வருகிறார்கள். கலையை அழிக்காமல் காத்து வரும் இவர்களின் வாழ்வியல் பாதாளத்திலேயே இருக்கிறது. நாதஸ்வரக் கலையை போற்றும் விதமாகவும், நாதஸ்வரக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். இந்த விருது ஒட்டுமொத்த நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரம் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response