எகிப்துக்கு எதிரான ரஷ்யாவின் வெற்றி நியாயமானதல்ல

ஜூன் 19 ஆம் தேதி நடந்த மூன்றாவது போட்டியில் ரஷ்யாவும், எகிப்தும் மோதின. இந்த இரண்டு அணிகளும் சம பலம் வாய்ந்தவையாகவும், மல்லுக்கு நிற்பது போலவும்தான் களத்தில் மோதின.

துவக்கத்தில் இருந்தே 2 நிமிடங்களுக்கு ஒரு கோல் போஸ்ட் என்பதுபோல் மாறி, மாறி இரு அணிகளும் கோல் போடுவதற்கு முயன்று கொண்டேயிருந்தன. இருவரின் கோல் கணக்குகளும் கடைசி நிமிடத்தில் மாறிவிட.. கோல்கள் தவறிப் போய்க் கொண்டேயிருந்தன. ஆனால் இவர்கள் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை மட்டும் நிறுத்தவே இல்லை.

இடைவேளை வரையிலும் 22 நிமிடங்கள் ரஷ்ய கோல் பகுதியிலும், 22 நிமிடங்கள் எகிப்து கோல் பகுதியிலும் பந்து பறந்து கொண்டிருந்தது. எல்லாம் இடைவேளை வரைக்கும்தான்.

உள்ளே போய் என்ன ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வந்தார்களோ தெரியவில்லை.. வந்த 2-வது நிமிடத்திலேயே ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அடித்த பந்து எகிப்து வீரர் Ahmed Fathy –ன் முழங்காலில் பட்டு தானாகவே கோல் கம்பத்திற்குள் போய் உட்கார்ந்து கொண்டது.

இது இந்த டோர்ணமெண்ட்டில் நடந்த 5-வது சேம் சைடு கோல் என்கிறது புள்ளி விவரம். பாவமாகிப் போனார்கள் எகிப்து வீரர்கள்.

இதற்குப் பிறகு இன்னும் உக்கிரமானது போர்க்களம். இரு தரப்புமே பந்தை துரத்திக் கொண்டிருந்தார்கள். பந்துகள்தான் பாவம் இவர்களது கால்களில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் எகிப்தின் கோல் பகுதிக்குள் ஊடுறுவிய ரஷ்ய வீரர்கள் தொடர்ச்சியாக 3 நிமிடங்கள் அந்தப் பகுதியிலேயே பந்தை உருட்டு, உருட்டென்று உருட்டியெடுத்தார்கள். கடைசியாக முடியாமல் போய் ஒரு எகிப்து வீரர், பந்தின் மீது படுத்தே விட.. அதற்குப் பிறகுதான் அந்த முயற்சியைக் கை விட்டனர்.

காட்டுத்தனமாக மோத ஆரம்பித்தன் விளைவாக 57-வது நிமிடத்தில் எகிப்து வீரர் Trezeguet மஞ்சள் அட்டையை பரிசாகப் பெற்றார்.

59-வது நிமிடத்தில் இன்னொரு கோலை அழகாக சாத்தினார்கள் ரஷ்ய வீரர்கள். Denis Cheryshev என்ற ரஷ்ய வீரர் எப்படி இந்தக் கோலை உள்ளே தள்ளினார் என்பது எகிப்தின் கோல் கீப்பருக்கே புரியவில்லை. அப்படி பட்டென்று முடிந்தது அந்த கோல்.

இந்த அதிர்ச்சியை ஜீரணிப்பதற்குள் அடுத்த கோலையும் போட்டுச் சாத்தியது ரஷ்ய அணி.

ஆனால் இந்த முறை மிக, மிக வித்தியாசமான, அதேசமயம் ஆச்சரியமானதும்கூட..

பந்தை கஷ்டப்பட்டு உருட்டிக் கொண்டு வரவில்லை. திட்டமிட்டு பாஸிங் செய்யவில்லை. பத்து செகண்டுகளில் கோலடித்து அனைவரையும் பரவசப்படுத்தினார்கள் ரஷ்ய வீரர்கள்.

ரஷ்யாவின் கோல் கீப்பர் தனது கோல் போஸ்ட் பகுதியில் இருந்து பந்தை உதைத்து வானத்தில் அனுப்பி வைத்தார். அந்த பந்து அழகாக உருண்டு, உருண்டு எகிப்தின் கோல் போஸ்ட்டில் நின்று கொண்டிருந்த Artem Dzyuba என்ற ரஷ்ய வீரரின் நெஞ்சில் வந்து விழுந்தது.

தன் நெஞ்சில் விழுந்த பந்தை கீழே தள்ளிய அவர் சட்டென்று திரும்பி நேராக இருந்த கோல் போஸ்ட்டுக்குள் அந்தப் பந்தை தள்ளிவிட்டார். முடிந்தது.. ஒரு கோல்..!

ரஷ்ய வீரர்களாலேயே இந்த கோலை நம்ப முடியவில்லை. ஸ்டேடியமே அதிர்ந்துவிட்டது. தங்களது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் இந்த ஆனந்த கோலை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.

இதற்குப் பின்பு நடந்ததெல்லாம் அநியாயம்.. அழிச்சாட்டியம்.. இரு தரப்புமே கை கலப்புவரையிலும் சென்றுவிட்டார்கள்.

அதிலும் ரஷ்ய வீரர்கள் கொஞ்சம் அதிகமாகவே பனியனை பிடித்திழுப்பது.. தூக்கிப் போட்டு கீழே மிதிப்பது.. கையைப் பிடித்திழுத்து விடுவது,க காலை மிதிப்பது என்று பகிரங்கமாகவே ரவுடித்தனங்களை செய்து அதிர்ச்சியாக்கினார்கள்.

இதில் ஒரு சம்பவத்தை மட்டுமே அம்பயர் நேரில் பார்த்துவிட்டதால், வேறு வழியில்லாமல் எகிப்து அணிக்கு பெனால்டி ஷாட்டுக்கு அனுமதியளித்தார். இந்த பெனால்டி ஷாட்டை தப்பில்லாமல் செய்தார் எகிப்து வீரர் Mohamed Salah. இதன் பின்பு 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது ரஷ்யா.

இதன் பின்பும் ரஷ்ய வீரர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. உண்மையாகப் பார்த்தால் தொடர்ச்சியாக 6 பெனால்டி ஷாட்டுகள் எகிப்து அணிக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி ரகளை செய்தார்கள் ரஷ்ய வீரர்கள். பாவம் எகிப்து வீரர்கள்.

போராடி, போராடி களைத்துப் போனார்கள் எகிப்து வீரர்கள். அவர்கள் அடித்த பல ஷாட்டுகள் குறி தவறின. சிலவைகளை கோல் கீப்பர் பிடித்தார்.

மற்றவைகளை அருகில் போவதற்குள் முறைகேடாக ரஷ்ய வீரர்கள் பிடித்துக் கீழே தள்ளி முடித்தார்கள். பாவந்தான்..!

கடைசி முயற்சிக்கும் இதேபோன்று ‘நலங்கு’ நடக்க Fedor Smolov என்ற ரஷ்ய வீரருக்கு மஞ்சளட்டை காண்பித்து நடுவர் தனது நடுநிலைமையைக் காட்டிக் கொண்டார்.

கடைசியாக 4 நிமிட எக்ஸ்ட்ரா நேரத்தில்கூட ரஷ்ய வீரர்கள், எகிப்து வீரர்களை துவம்சம் செய்துவிட.. வேறு வழியில்லாமல் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சுமந்து கொண்டு வெளியேறியது எகிப்து அணி.

இன்றைய போட்டியில் குறிப்பிடத்தக்க அம்சம் இரண்டு அணிகளின் மேனேஜர்கள்தான். ரஷ்ய அணியின் மேனேஜர் துவக்கத்தில் இருந்தே ‘கவுரவம்’ பாரிஸ்டர் சிவாஜியை போல் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.. ‘போடா’.. ’போடா..’ என்று கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.

எகிப்து அணியின் மேனேஜர் ‘புதிய பறவை’ எம்.ஆர்.ராதாவை போல அப்படியொரு அங்க சேஷ்டைகளைக் காண்பித்து தனது வீரர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் லைன் அம்பயரே இவரை எச்சரிக்க வேண்டியதாகிவிட்டது.

இடைவேளைக்கு பின்பு கோல்கள் விழுந்தவுடன் ரஷ்யாவின் ‘பாரிஸ்டர்’ சிவாஜி ‘பாவ மன்னிப்பு’ சிவாஜியாக உருமாறி அன்பே சிவமாகி இருந்தார்.

அந்தப் பக்கம் ‘புதிய பறவை’ எம்.ஆர்.ராதா, ‘பெற்றால்தான் பிள்ளையா’ எம்.ஆர்.ராதாவாக மாறி பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார். பாவம்.. கடைசிவரையிலும் இவருக்கு ஏதாவது ஆகிரக் கூடாதே முருகா என்று என்னையவே வேண்டிக் கொள்ள வைத்துவிட்டார். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு மைதானத்தில் சிறப்பு..!

எப்படியிருந்தாலும் இன்றைய போட்டியில் ஜெயித்திருக்க வேண்டியவர்கள் உண்மையில் எகிப்து வீரர்களே..!

– சரவணன்

Leave a Response