எத்தனை முறை கைது செய்தாலும் தொடர்ந்து போராடுவேன் – சிறை வாயிலில் வேல்முருகன் உறுதி

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வேல்முருகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிணை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது. நாகர்கோவிலில் தங்கி இருந்து தினமும் காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வேல்முருகன் நேற்று மாலை புழல் சிறையில் இருந்து விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களை நாசமாக்கும் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் தொடர்ந்து போராடுவேன். பிரதமர் மோடி சென்னை வந்தபோது ‘கோ பேக் மோடி’ என்ற பெயரில் போராட்டம் நடத்தியதால் மத்திய அரசு தூண்டுதலின் பேரில் மாநில அரசு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

திண்டுக்கலில் டாஸ்மாக் வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக எனது கட்சிக்காரர்களை நான் சிறையில் இருந்தே தூண்டியதாக குற்றம் சாட்டினார்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை ஜெயிலில் அடைத்தபோது வன்முறை செயல்களில் ஈடுபட்ட அவர்களது கட்சியை சேர்ந்த எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எத்தனை மோடி, எத்தனை எடப்பாடி என் மீது வழக்கு தொடுத்தாலும் அதனை சட்டரீதியாக சந்திப்பேன்.

நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது எனக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response