ஐபிஎல் – கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்

ஐபிஎல், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் தவான்-சாஹா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கம் தந்தது.

தவான் 34 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்திருந்த நிலையிலும் குல்தீப் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதேபோல் சாஹா 35 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தை சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கார்த்திக்கின் அசத்தல் ஸ்டம்பிங்கால் பெவிலியன் திரும்பினார்.

ஆல் ரவுண்டர் ஷகீப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். 18 ஓவர்களில் 138 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ரஷீத் கான் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 34 ரன்கள் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் 2 விக்கெட்டுகளையும், நரேன், சாவ்லா, பிரசீத் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் லின்-நரேன் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நரேன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நிதீஷ் ரானா லின் உடன் சேர்ந்து அதிரடியில் இறங்க கொல்கத்தா அணி முதல் 6 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தது.

22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதீஷ் ரானா துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். உத்தப்பாவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டாகி ஏமாற்றினார். பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 ரன்கள் எடுத்து ஷகீப் பந்தில் ஸ்டாம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து ஆடி வந்த கிறிஸ் லின் 48 ரன்கள் எடுத்து ரஷீத் கானின் அசத்தல் கூகுலியில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ரசல் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷீத் கான் பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சொதப்பியதால் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

போட்டியில் ஆல்-ரவுண்டராக அசத்திய ரஷீத் கான் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். பேட்டிங்கில் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 34 ரன்கள் விளாசியதுடன், பந்துவீச்சிலும் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தாண்டு சென்னை அணியுடன் ஐதராபாத் அணி 3 முறை மோதி மூன்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 27-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Leave a Response