
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 19 ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆகிய அணிகள் மோதின.
இப்போட்டியில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இவ்வெற்றிக்கு கிறிஸ் கெய்ல், 63 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் வீழ்த்த முடியாமல் 104 நாட் அவுட் என்று இருந்ததே முக்கிய காரணம்.
ஆனால் கடந்த சனவரியில், வீரர்களுக்கான ஏலம் நடந்தபோது இவர் நிலை என்ன தெரியுமா?
பேட்ஸ்மேன்கள் வரிசையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களும், அதிக சிக்சர்களும், அதிக சதங்களும் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படுபவரும் ஆன கிறிஸ் கெய்லின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த கிறிஸ் கெய்லை, அந்த அணி தக்க வைக்கவில்லை. விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்பராஸ் கான் ஆகியோரை தக்க வைத்திருந்தது.
முதல் நாள் முக்கியமான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற அவரை எந்த அணி உரிமையாளர்களும் எடுக்கவில்லை. இரண்டு மூன்று சுற்றுகள் வந்த போதிலும் அவரை யாரும் எடுக்கவில்லை. 2-வது நாளில் ஏலம் முடிவடைவதற்கு முன் மீண்டும் ஒருமுறை ஏலத்திற்கு வந்தார்.
அப்போது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் சீசன் 2018-ல் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.
38 வயதாகும் கிறிஸ் கெய்ல் 323 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20 சதங்கள், 67 அரைசதங்களுடன் 11068 ரன்கள் குவித்துள்ளார். இதில் 819 சிக்சர்களும், 835 பவுண்டரிகளும் அடங்கும்.
அவரையொத்த வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டபோது இவர் போனால் போகிறதென்று அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர்தான் பஞ்சாப் அணியின் இரண்டுவெற்றிகளுக்குக் காரணமாகியிருக்கிறார்.
