கண்கண்ட கடவுள் அம்பேத்கர் – சிறப்புக் கட்டுரை

கடவுள் என்னும் சொல்லுக்கு அகராதி கூறும் பொருள் தெய்வம், இறைவன். திருக்குறளில் பன்னீராயிரம் சொற்களைப் பயன்படுத்தியுள்ள திருவள்ளுவர் ஓரிடத்திலும் ‘கடவுள்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த வில்லை. காரணம் கடவுள் இல்லை என்னும் கருத்து அவருக்கு இருந்திருக்கலாம். இறைவன் என்னும் சொல்லை ஐந்து குறட்பாக்களில் பயன்படுத்துகிறார். தெய்வம் என்னும் சொல்லை ஆறு குறட்பாக்களில் பயன்படுத்துகிறார். தெய்வத்துக்கு அவர் கூறும் விளக்கம்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்: 50)

இறைவனுக்கு அவர் கூறும் இலக்கணம்:

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் (குறள்: 388)

இவ்விரு குறள்களுக்கு ஏற்பவும், இன்னும் பலநூறு குறள்களுக்கு ஒப்பவும் வாழ்ந்து மறைந்தவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பலகோடி மக்களை வாழவைத்த தெய்வமிவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி கோடானு கோடி இந்திய மக்களை முறைசெய்து காப்பாற்றிய இறைவன் இவர். ஆக அகராதியின் அர்த்தப்படி இறைவனாகவும் தெய்வமாகவும் திகழும் இவர் கடவுள் ஆகிறார்.

மற்ற கடவுள்களை நாம் கண்ணால் கண்டதில்லை. அண்ணல் அம்பேத்கரை நாம் கண்ணால் கண்டுள்ளோம், இவர் பேச்சைக் கேட்டுள்ளோம், இவர் எழுதிய அறிவுரைகளை – அறவுரைகளை நூற்றுக்கணக்கான நூல்கள் மூலம் படித்தறிகிறோம். எஜுகேட்-அஜிடேட்-ஆர்கனைஸ் (Educate – Agitate – Organise) கற்நி-கிளர்ந்தெழு-கூடிவாழ் என்னும் தாரக மந்திரம் ஓரினத்திற்கானதல்ல. உலக மக்களுக்கானது. உலக மக்களெல்லாம் கல்வியறிவு பெற்று, மனதளவில் கிளர்ந்தெழுந்தால் சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு சகோதரர்களாக ஒன்றிணைவார்கள் என்பதே இவரின் எதிர்பார்ப்பு. கண்ணால் கண்ட இவரை கடவுளாகக் கருத மனம் ஒப்பவில்லை, அப்படித்தானே?

புத்தரும், ஏசுவும், நபிகளும், டாக்டர் அம்பேத்கரும் அவதாரங்களல்ல. மனிதராகப் பிறந்து வாழ்ந்து மக்களை வாழவைத்து மறைந்த மனித தெய்வங்களே! நம்மை வாழவைத்த அம்பேத்கரை கடவுளாக வணங்குவோம்!

அவதாரங்களுக்கு அம்மா அப்பா கிடையாது. அவர்களின் பிறப்பெல்லாம் கற்பனைக் கதைகளே! அதனுள் போக விரும்பவில்லை. கற்பனைக் கதைகளைப் புனைந்து புராணங்களாக எழுதி வைத்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களும், அவர்களின் அடிவருடிகளுமே. கற்பனைக் கதைகளின் கதாநாயகர்களை கடவுளாக உருவகித்து கல்லில் சிலைகளாகச் செதுக்கி வைத்தார்கள் சிற்பிகள். படங்களாக வரைந்து வைத்தார்கள் ஓவியர்கள். பாடல்களாகப் பாடி வைத்தார்கள் புலவர்கள், ஊரெங்கும் ஓடி ஓடி ஆடிப் பாடிப் பரப்பினார்கள் தெருக்கூத்தாடிகள். எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்காக! தெருக்கூத்தைப் பார்த்த மக்கள்…

கடவுள் உலகைக் காப்பாற்றுகிறார், தங்களையும் காப்பாற்றுவார் என நம்புகிறார்கள். மரத்தடிக் கடவுளையும் வணங்கி ஆடு மாடுகளை பலியிடுகிறார்கள். மாபெரும் கோயில்களையும் சுற்றி வந்து உண்டியலில் ஆயிரம் இலட்சம் என்று காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்களில் யாரும் ஏழை எளியோருக்கு, வறுமையில் வாடுவோருக்கு, பசியால் துடிப்போருக்கு உணவளிப்பணில்லை. பணம் தருவதில்லை. கோயில் பார்ப்பனர்கள் உண்டு மகிழ கோயில் உண்டியல்களில் நகைகளையும் பணத்தையும் கொட்டுகிறார்கள். கடவுள் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையே!

கடவுள் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர். இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், எரிமலைக் குமுறல், கடல் கொந்தளிப்பு, சூறாவளி, சுனாமி போன்றவற்றிலிருந்து மக்களை கடவுள் காப்பாற்றுவதில்லை. கடவுள் சிலைகளே இச்சீற்றங்களுக்குள்ளாகி புதைந்து போவதும் அடித்துச் செல்லப்படுவதையும் காண்கிறோம்.

கோயில்களில்கூட கடவுள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில்லை. திருடர்கள் சிலைகளைத் திருடும்போதும், நகைகளைக் கொள்ளையிடும் போதும் தடுப்பதுமில்லை, தண்டிப்பதுமில்லை. தன்னையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத கடவுள்கள் தங்களைக் காப்பாற்றும் என்று மக்கள் நம்புகிறார்கள். கடவுளால் எல்லாம் முடியுமென்றால் கோவில்களுக்கு கதவுகள் எதற்கு? கதவுகளில் பெரிய பெரிய பூட்டுகள் எதற்கு? உண்டியல் பூட்டுகளில் அரக்கு ‘சீல்’ முத்திரை எதற்கு? துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் எதற்கு?

இந்துக் கடவுள்களின் கரங்களில் எல்லாம் ஆயுதங்கள் உள்ளன. அவ்வாயுதங்களால் இலட்சக்கணக்கான மக்களை – போர்வீரர்களைக் கொன்றதாக புராணங்களில் உள்ளன. ஒரு சாராரைக் கொன்று மற்றொரு சாராரை பாதுகாக்கும் ஓரவஞ்சனையாளர் கடவுளாக முடியுமா? தீயோரை அழித்து நல்லவர்களைப் பாதுகாப்பவர் கடவுள் என்றால் கொலை செய்யும் கொடியவர்களை, கோயிலில் கொள்ளையிடும் திருடர்களைத் தங்கள் ஆயுதங்களால் தண்டிக்காதது, துண்டிக்காதது ஏன்? ஏனென்றால் அது கல், சிலையாக வடிக்கப்பட்ட சக்தியற்ற கல் – என்கிறார்கள் பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள்!

அறிவுக் கடவுள் அம்பேத்கர் மக்களைக் காப்பதற்காக தன் கரங்களில் கொடிய ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. அறிவாயுதம்-எழுதுகோல்-பேனா மட்டுமே வைத்திருந்தார். இவர் அவதாரமில்லை. கற்பனைக் கட்டுக்கதை கடவுள் இல்லை; எனவேதான் இவருக்கு அப்பா அம்மா உற்றார் உறவினர்கள் இருந்தார்கள்.

இவருடைய தந்தையின் பெயர் இராம்ஜி சக்பால், இராணுவ வீரர், தாயார் பீமாபாய், இப்பெற்றோருக்கு 14வது கடைக்குட்டி மகனாகப் பிறந்தவர்தான் அம்பேத்கர். 1891 ஏப்ரல் 14ஆம் நாளில் பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்தப் பெயர் பீமாராவ். பள்ளியில் ஆசிரியர் பதிவு செய்த பெயர் பீமாராவ் அம்பேத்கர். அதுவே பீ.ஆர். அம்பேத்கர் எனவும் டாக்டர் அம்பேத்கர் எனவும், பாபாசாகேப் அம்பேத்கர் எனவும் பிற்காலத்தில் புகழ்பெற்றது. ‘ஜெய்பீம்’ என எல்லோர் நெஞ்சிலும் நிலைபெற்றது. ‘ஜெய்பீம்’ என்றால் அம்பேத்கர் புகழ் வாழ்க! அவர் கொள்கைகள் வெல்க! என்பதாகும். ‘ஜெய்ஹிந்த்’ – ‘ஹிந்துத்துவா வாழ்க’ என்பதுபோல்!

தீண்டப்படாத ‘மகார்’ இனத்தில் பிறந்ததால் பள்ளியில் படித்திட இவரை அனுமதித்திடவில்லை. தந்தையார் இராணுவத்தில் சுபேதார் மேஜராகவும், இராணுவப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றியமையால் பிரிட்டீஷ் அதிகாரிகளின் பரிந்துரையால் வகுப்பின் வாயிலில் அமர்ந்து படிக்க வாய்ப்பு கிட்டியது. அந்த அளவுக்கு சாதி ஏற்றத்தாழ்வு இந்தியாவில் அந்நாளில் கொடிகட்டிப் பறந்தது. தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் படிக்கக் கூடாது, பணம் சேர்க்கக் கூடாது, அடிமை வேலைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்னும் மநுநீதிச் சட்டம் வெகு மக்களை வாட்டி வதைத்தது. இதைத் தன் வாழ்நாளில் வெட்டி எறிய வேண்டும், தான் படும் துன்பம் தன் சமுதாயம் படக்கூடாது என உள்ளத்தில் உறுதி பூண்டார். பொறுமையோடும், பொறுப்போடும் தன் அண்ணன் பலராமோடு வகுப்பறை வாயிலில் அமர்ந்து சொல்லொணா சாதிக் கொடுமைகளுக்கிடையில் கல்வி கற்றிடலானார்.

கற்க கசடறக் கற்பவை கற்றநின்
பிற்க அதற்குத் தக (குறள் : 391)

என்னும் குறள் மொழிக்கேற்ப கற்றார். கசடறக் கற்றார், மரத்தடியிலும், தெரு விளக்கிலும் படித்து, பள்ளியில் கல்லூரியில் தேர்வு பெற்ற யிவர் அமெரிக்காவிலும், இலண்டனிலும், ஜெர்மனியிலும் உயர் கல்வி கற்று உலக அறிஞர்களால் புகழப்பட்டார். பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், சட்டவியல், தத்துவம், மாந்தவியல், அறிவியல் ஆகியவற்றை குற்றமறக் கற்றார். தேர்வுகள் பெற்றார். எம்.ஏ., எம்.எஸ்.சி., டி.எஸ்.சி., பி.எச்.டி., டி.லிட்., எல்.எல்.டி., பார்-அட்-லா இப்படி பட்டங்கள் பல பெற்று உலக அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

படிப்பாளியாக மட்டுமில்லாமல் பல அறிவு ஆராய்ச்சி வரலாற்று நூல்களை எழுதி பல டாக்டர் பட்டங்களைப் பெற்றார். பரோடா மன்னர் சயாஜிராவ் செய்க்வார்டு மற்றும் கோல்காபூர் சிற்றரசர் சாகு சத்ரபதியின் பண உதவிகளால் அம்பேத்கரால் உயர் கல்வி கற்க முடிந்தது. தாழ்த்தப்பட்டவரானாலும் வாய்ப்பு வழங்கப்பட்டால் கல்வி அறிவில் இமயத்தின் உச்சியைத் தொடுவான் என நிரூபித்து தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெருமையை நிலைநாட்டிய சமுதாயக் கடவுள் ஆனார்.

சரஸ்வதியை கல்விக் கடவுள் என்கிறார்கள். அவள் எந்த பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றாள், எத்தனை பாட நூல்கள், அறிவு நூல்கள் எழுதி மாணவர்களுக்கு அறிவுப் புகட்டினாள் என்பதை ஆரியர்கள் கூறவில்லை. வினாயகர்-பிள்ளையார் நிலையும் இஃதே. குளக்கரையில், அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார் எந்தப் பள்ளியில் படித்தார் என்பது தெரியவில்லை. கடவுள்களைப் பற்றி அகவல்கள்-பாடல்கள்-புராணங்களை மனிதர்கள் எழுதியுள்ளார்களே தவிர கடவுள்கள் எந்த அறநூலும் அறிவு நூலும் எழுதியதாக ஆதாரங்களில்லை, பள்ளிகள் கல்லூரிகள் கட்டியதாகச் சான்றுகள் இல்லை.

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா” எனப் பள்ளிப் பிள்ளைகளுக்கு, பிஞ்சு மனங்களிலே லஞ்சம் கொடுத்துக் கல்வியைப் பெறக் கூறுவதால்தான் காலமெல்லாம் அவன் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் அவல நிலைக்கு உள்ளாகிறான், அறிவை இழக்கிறான், தன் ஆற்றலை இழக்கிறான், கல் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுத் தன் கடமையை மறக்கிறான். அறிவுக் கடவுள் அம்பேத்கர் தன் அறிவாற்றலால் படித்துயர்ந்து சித்தார்த்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். அனைவரையும் கல்வி கற்றிடக் கூறினார்.

வெள்ளைத் தாமரையில் வெள்ளை உடையோடு சரஸ்வதியை அமரவைத்தும் செந்தாமரையில் சிவப்புப் புடவையோடு லட்சுமியை நிற்க வைத்தும் கல்விக் கடவுள், செல்வக் கடவுள் என்று கூறி வணங்குகிறார்கள் இந்து மத ஆரியர்கள். ஆனால் பெண்களை மநுநீதிச் சட்டப்படி அடிமைகளாகவே நடத்துகிறார்கள். படிக்க விடுவதில்லை, பத்து வயதுச் சிறுமியை பல்லில்லாத எழுபது வயது கிழவனுக்கு பாணிக்கிரகணம் (திருமணம்) செய்துவைக்கிறார்கள். அந்தக் கணவன்-கிழவன் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டால் அந்தக் கிழவனை எரிக்கும் தீயிலேயே அந்தச் சிறுமியையும் தள்ளி எரிக்கிறார்கள். சரஸ்வதியும் லட்சுமியும் தடுக்க வரவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி இதையெல்லாம் தடுத்தவர் டாக்டர் அம்பேத்கர். இவரை கல்விக் கடவுள் என்றால் மிகையாகாது.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் (குறள் : 388)

‘என்னை விட என் நாடு பெரிது, என் நாட்டை விட என் சமுதாயமே பெரிது’ – என்ற அம்பேத்கர் தன் இன மக்களை – தீண்டப்படாதார் என ஒதுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும், படிக்கவைக்க வேண்டும், அவர்களுக்கு பணவுதவி பெற்றுத்தர வேண்டும், மநு அநீதியால் நான்காம் ஐந்தாம் வருணமாகத் துன்புறும், சூத்திரர்களையும் (‘சூத்திரர்கள் என்றால் தெவடியாப்பசங்க’னு அர்த்தம், பாதத்துலே பொறந்தவங்கறான் பாப்பான், ஆதி திராவிடர்கள் என்றால் அப்பனுக்கும், அம்மாவுக்கும் பொறக்க வேண்டிய எடத்துலே பொறக்க வேண்டிய முறையில பொறந்தவங்க’ என்றும் எழுதியும் பேசியும் உள்ளார் தந்தை பெரியார்) தீண்டப்படாதவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ண உறுதியோடு இந்தியா திரும்பினார்.

டாக்டர் அம்பேத்கர் தம் மக்களை மறந்திருந்தால் சாதி வேறுபாடு நோக்காத அமெரிக்கா இலண்டன் ஜெர்மனியில் ஒரு வெள்ளைத் தோல் அழகியை மணந்துகொண்டு அந்நாட்டுக் குடிமகனாகி நீதித் துறையிலோ, கல்வித் துறையிலோ, அரசியலிலோ அன்றே ஒபாமாபோல் ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்திருக்க முடியும். அல்லது தன் மனைவி மக்களோடு அயல்நாடுகளில் தங்கி சுகபோக வாழ்வு வாழ்ந்திருக்க முடியும். அதை இவர் செய்யவில்லை. இராஜீவ் காந்தியைப்போல் ஓர் இத்தாலியப் பெண்ணை இவர் இந்தியாவுக்கு அழைத்துவந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தவில்லை.

ஆனால் இன்று இவர் எழுதிய சட்டம் மூலமாக கல்வி உதவிகள் பெற்று படிப்பிலும், பதவியிலும், அரசியலிலும் உயர்ந்து உன்னத நிலையில் உள்ளோர் தம் தாய் தந்தையர் – உற்றார் உறவினர்களைத் தவிக்கவிட்டு வேற்றுமதப் பெண்களை, உயர் சாதிப் பெண்களை மணந்துகொண்டு, மதம் மாறி சாதி மறைத்தும், தான் நிறந்த சாதியை இழித்துப் பேசியும் போலி வாழ்க்கை வாழ்கிறார்கள் செய்ந்நன்றி கொன்ற சண்டாளர்கள். டாக்டர் அம்பேத்கரைப் போல், தந்தை பெரியாரைப்போல் மாற்று சாதிப் பெண்களை மணந்து சாதியொழிப்பில் ஈடுபடலாம். ஆனால் உயர்சாதிப் பெண்ணை மணந்துக் கொண்டு அவர்களுக்குள் ஒருவராகி தான் பிறந்த சாதியை இழித்துப் பேசும் நாய்குணம் கொண்டோரை நடுத்தெருவில் நிற்கவைத்து அடையாளம் காட்டவேண்டும்.

விரோதியை விட துரோகி மோசமானவன், சாதிச் சலுகைகளில் படித்து, சாதிக்கு உதவாது மறைந்து வாழும் பச்சோந்திகளை இணையதளத்தில் படங்களோடு வெளியிட்டு பலர் அறிய அவமானப்படுத்த வேண்டும். தன் முன்னோரான ஆரியப் பார்ப்பனர்கள், சாதி பிரித்து கொடுமைகள் செய்ததற்காகப் பிராயச்சித்தம் தேடிட கர்நாடகாவில் தலித்துகளை நிற்கவைத்து அவர்கள் பாதங்களைக் கழுவி வணங்கிய பேராசிரியர் டாக்டர் என்.எஸ்.ராமசாமி தம்பதியர் போன்றாரைப் போற்றவேண்டும்.

துன்பத்தில் துயருறும் ஒருவனிடம் வஞ்சகன் ஒருவன் “கோடி வீட்டுக் கோடீஸ்வரரைப் போய்ப் பார், அவர் உனக்கு ஆயிரம் ரூபாய் தருவார். அதை வைத்து நீ பிழைத்துக்கொள்” என்கிறான். அதை நம்பி அந்த வறுமையாளன் நாள் தவறாமல் கோடீஸ்வரன் வீட்டுக்குச் சென்று பணம் தருவார் என தவம் கிடந்தான். பெயரளவில் கோடீஸ்வரனான அந்த ‘டம்பாச்சாரி’ தருகிறேன் தருகிறேன் எனக் கூறி அன்றாடம் வரவழைத்து அலைக்கழித்தான்.

நாள்தோறும் வந்துப்போகும் அந்த நலிவுற்றவனைக் கண்ட நல்லுள்ளம் படைத்த அடுத்த வீட்டுக்காரர் வறியவனை அழைத்து வந்துப் போகும் காரணத்தைக் கேட்டார். வறியவன் காரணத்தைக் கூறினான். கருணை உள்ளங் கொண்ட அவர் அவன் கேட்காமலே தன் வீட்டுக்குள் சென்று ஒரு பத்தாயிரம் ரூபாயை எடுத்து வந்து அவரிடம் கொடுத்து, “இதை வைத்து ஏதேனும் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள். வசதி வந்தபின் இதைத் திருப்பித் தந்தால் போதும், மற்றவருக்கு கொடுத்துதவ பயன்படும்” என்று கூறி கொடுத்தனுப்பினார்.

பூரித்துப்போன அவன் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து தன் இல்லம் சென்றான். தனக்கு வழிகாட்டிய வஞ்சகரிடம் விவரத்தைக் கூறினான். அவனோ “இது கடவுள் செயல், கோடீஸ்வர் கூறித்தான் பத்தாயிரம் ரூபாயை உனக்கு பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்துள்ளார்” எனப் புளுகி வைத்தான். அதை அந்த வறியவன் நம்பினான். பணம் கொடுத்தவரை மறந்துவிட்டான். கடவுள் கொடுத்ததாகவே நம்பினான். அவ்வப்போது வஞ்சகனுக்கு கற்பூர தீபதூப ஆராதனைக் காட்டுவதுபோல் கையூட்டுக் கொடுத்து வந்தான்.

வசதி வந்தப்பிறகும் பணம் கொடுத்தவரை அவன் சென்று காணவில்லை. கண்டால் பத்தாயிரம் ரூபாயைத் திருப்பிக் கேட்டு விடுவாரோ என்ற பயம். ‘நல்ல நிலையில் இருக்கிறேன்’ எனக் கூறி நன்றி சொல்லவும் அவன் செல்லவில்லை. இதுதான் இன்றைய பிலை. உருவகக் கதையின் உள்ளர்த்தம் புரிந்திருக்கும். புரிந்துகொள்ள முடியாத மரமண்டைகளுக்காகக் கூறுகிறேன். அந்தக் கோடீஸ்வரன் தான் கடவுள், அவனைப் பார்க்கச் சொல்லி அனுப்பிய வஞ்சகன்தான் புரோகிதப் பார்ப்பனன். நாள்தோறும் நடையாய் நடந்த வறியவன்தான் செட்யூல்டு இனத்தவன். அவன் கேட்காமலே பத்தாயிரம் ரூபாய் கொடுத்துப் பிழைத்துக்கொள் என வழி காட்டியவர்தான் கடவுள் அம்பேத்கர்.

கொடுக்காதவனை கொடுப்பான் என நம்பி ஓடும் கூட்டம்தான் செட்யூல்டு இனக் கூட்டம். சட்டத்தின் வாயிலாக அனைத்தும் கொடுத்த கடவுள் அம்பேத்கரை அவரால் வாழ்வு பெற்று, பட்டம் பதவி பெற்று, அரசியலில் உயர்வு பெற்ற செய்நன்றி கொன்ற செட்யூல்டு இனமக்களே இவரை அலட்சியப்படுத்துகின்றனர். இவரால் இதுவரை வாழ்வு – வசதி – பொருளாதார ஏற்றம் காணாத தலித் மக்கள் இவரைப் போற்றி வணங்கி புகழ்பாடி வருகிறார்கள். வாழவைத்த கடவுளை கோயில் கட்டி வணங்குவோம்.

தொழிலாளர் கடவுள்
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே கடவுள் அம்பேத்கர் கருணை காட்டினார். மற்ற மக்கள் நலனில் அவர் அக்கறை செலுத்தவில்லை என இந்திய மக்களில் பெரும்பாலானோர் பேசுகிறார்கள். இந்திய நாட்டு விடுதலைக்காக – தேச விடுதலைக்காக காந்தி மகான் போராடியதைப் போல இந்திய நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவே கடவுள் அம்பேத்கர் வெள்ளையனிடம் வாதாடினார். வெள்ளையனும் மனமொப்பி அதனைச் செய்தான். சைமன் கமிஷனுக்கு தாக்கீது தந்தார். வட்டமேசை மாநாடுகள் மூன்றிலும் வாதாடினார். இந்தியாவில் பார்ப்பனியத்தாலும், பண முதலைகளாலும், அதாவது பிராமணத் தத்துவங்களாலும் முதலாளி வர்க்கத்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒதுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை ஆதாரங்களோடு வெளியிட்டு ஆங்கிலேய அரசைச் சாடினார். புலிக் குகைக்குள்ளேயே புலியை எதிர்த்த மாவீரரானார்.

டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கைகளில் நியாயமிருந்ததால் ஆங்கிலேயர் அரசு ஆத்திரப்படாமல் அலட்சியப்படுத்தாமல் அடிபணிந்தது. முதல் வட்டமேசை மாநாடு முடிவில் இந்திய மக்களின் – மக்களாட்சியின் நிலை குறித்து விவாதிக்க ஒன்பது குழுக்களை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. ஒன்பது குழுக்களில் டாக்டர் அம்பேத்கர் கூட்டாட்சிக் குழு தவிர்த்த மற்ற எட்டுக் குழுக்களிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அவருடைய கருத்துகளை அறிவிக்க, தீர்மானங்களைத் தயாரித்தளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார். அக்குழுக்கள் அனைத்திலும் இவர் முன்வைத்தக் கருத்துகளை, மக்கள் நலன் குறித்த தீர்மானங்களை இலண்டனில் அறிஞர் பெருமக்களும், பத்திரிகைகளும், அரசியல் வித்தகர்களும் டாக்டர் அம்பேத்கரின் அறிவாற்றலைப் புகழ்ந்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கான கால்கோல் நிகழ்வாக – அடிப்படை அறிவாற்றலாக இந்நிகழ்வுகள் அமைந்தது. 19.1.1931-ல் முதல் வட்டமேசை மாநாடு முடிவுற்றது. 27.2.1931ல் அவர் பம்பாய் வந்தடைந்தார். மகத்தான வரவேற்பு டாக்டர் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ ஊமைகளின் தலைவன், ‘பகிஷ்கரித் பாரத்’, ஜனதா போன்ற பத்திரிகைகளை நடத்தி பார்ப்பனீயத்தால் வெகு மக்கள் படும் துன்பங்களை விரிவாக விளக்கினார். இதுவே தந்தை பெரியாரின் காந்திய எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது.

தீண்டப்படாத மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையோடு தொழிலாளர்கள் மற்றும் மகளிர் பிரச்சினைகளை டாக்டர் அம்பேத்கர் முன்னெடுத்தார். தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறினார் “தொழிலாளர்களுக்கு இரண்டு பகைவர்கள் இருக்கிறார்கள், அந்த இரு பகைவர்களையும் எதிர்த்துப் போராட வேண்டியது தொழிலாளர்களின் கடமையாகும். பிராமணத் தத்துவமும், முதலாளி வர்க்கமுமே அந்த இரு பகைவர்கள்”

பிராமணிய கொள்கைகளில் சுதந்திரம், சமத்துவம், மனிதநேயம் இல்லை. இக்கொள்கையால் பிராமணர்கள் நம்முடைய சரிசம சமூக உரிமைகளை மறுக்கின்றார்கள். இக்கோட்பாடுகளின் முன்னோடிகள் பிராமணர்கள் என்றால், மற்ற சாதியினரும் இக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள். அதனால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்) முன்னேற்றம் தடைப்படுகிறது.

“முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் பிராமணீயத்தையும் நாம் எதிர்த்துப் போராடவேண்டும். பிராமணீயம் என்பது முதலாளித்துவத்துக்கு வல்லமை சேர்க்கும் மிகப் பெரிய இராட்சதன். இதனை அழிக்காமல் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியாது. எனவே நாம் இவற்றை எதிர்த்துப் போராட வேண்டும்”- என்றார்.

டாக்டர் அம்பேத்கர் முதன் முதலில் தொடங்கிய கட்சியின் பெயரே சுதந்திர தொழிலாளர் கட்சி என்பதாகும். சாதி கட்சியல்ல அவர் தொடங்கியது. அடுத்து அவர் தொடங்கியது இந்திய குடியரசு கட்சி. இதுவும் இந்திய மக்கள் அனைவரும் பங்கேற்றுப் போட்டியிடும் கட்சியே, சாதிக் கட்சியல்ல. இதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியதே உத்தரப் பிரதேசத்தை ஆளும் மாயாவதியின் (கன்சிராம்) பகுஜன் சமாஜ் கட்சி. இக்கட்சியின் தேர்தல் சின்னம்கூட அம்பேத்கர் தேர்வு செய்த யானைச் சின்னமே ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் வட்டமேசை மாநாடுகளில் வாதாடியதன் பலனாக அரசியலில் வாக்களிக்கும் உரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் பிரிட்டீஷ் அரசால் 1935ஆம் ஆண்டில் ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. 17.2.1937ல் பம்பாய் மாகாண சட்டசபைத் தேர்தலில் சுதந்திர தொழிலாளர் கட்சியினர் போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் 15 இடங்கள் ஒதுக்கீடு இடங்கள். பம்பாய் மாகாண சட்டசபையில் டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் பிரச்சினைகளையும், பெண்களின் உரிமைப் பிரச்சினைகளையும், தாழ்த்தப் பட்டோர் பிரச்சினைகளையும் தொடர்ந்து வலியுறுத்திப் பேசினார்.

1942 ஜூலை மாதம் முதல் 1946 ஜூன் மாதம் வரை நான்காண்டுகள் வைஸ்ராய் மந்திரி சபையில் தொழிலாளர் அமைச்சராக நியமனம் பெற்றார் டாக்டர் அம்பேத்கர். மகாத்மா காந்தி கூறியோ, பண்டிதர் ஜவகர்லால் நேரு பரிந்துரை செய்தோ இப்பதவியை டாக்டர் அம்பேத்கர் பெறவில்லை. சைமன் கமிஷனுக்குத் தந்த இந்திய மக்கள் நிலை குறித்த விவர அறிக்கை மற்றும் மூன்று வட்டமேசை மாநாடுகளில் – எட்டுக் குழுக்களில் வழங்கிய அறிக்கைகள், பத்திரிகைகளில் வெளியிட்ட பொருளாதார சட்டச் சிக்கல்கள் குறித்த விளக்கங்கள், சுதந்திர தொழிலாளர் கட்சிப் பிரதிநிதியாக அவர் பம்பாய் சட்டமன்றத்தில் பேசிய வழங்கிய ஆதாரபூர்வமான புள்ளி விவரங்கள் அடிப்படையில் டாக்டர் அம்பேத்கரின் ஆற்றலை அறிந்தே ஆங்கிலேய அரசு அவரை வைஸ்ராய் மந்திரி சபையில் தொழிலாளர் அமைச்சராக நியமனம் செய்தது.

இவ்வாறேதான் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றதும் அவருடைய அபரிமிதமான சட்ட அறிவாற்றலின் காரணமாகவே! பல நாட்டு அரசியல் சட்டங்களை அவர் ஆழக் கற்றிருந்தமையாலேயே! ஏதோ காந்தி கூறி மந்திரி பதவி தந்தார்கள், பண்டிதர் நேரு பரிந்துரை செய்து சட்ட அமைச்சர் பதவியை தந்தார்கள் என்பதெல்லாம் டாக்டர் அம்பேத்கரை குறைத்து மதிப்பிடும் குறை மதியாளர்களின் பொய்ப் பிரச்சாரங்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு டாக்டர் அம்பேத்கரையொத்த அறிவாற்றல் மிக்கோர் அந்நாளில் இல்லை. ஏன் இந்நாளிலும் இல்லை. டாக்டர் அம்பேத்கர் நத்திச் சென்று சட்ட அமைச்சர் பதவியை ஏற்கவில்லை. தன்மானத்தை இழக்காமல், தன் அறிவை ஆற்றலை முன்வைத்தமையால் தான் காங்கிரஸ் மந்திரி சபையில், காங்கிரஸ் அல்லாத ஒருவராக – நாலணா செலுத்தி உறுப்பினராகாத ஓர் அமைச்சராக அங்கம் வகித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை தனியொருவராக எழுதித் தந்தார் மற்றவர் எழுத முடியாமல் ஓடி ஒளிந்ததால்?!

இந்நாள் அமைச்சர்கள்போல் அவர் அந்நாளில் கோடி கோடியாகக் கொடுத்து யார் யார் காலையோ பிடித்து அமைச்சராகவில்லை. சட்டம் எழுதி முடித்தப் பின்னரும் பதவியில் ஒட்டிக் கொண்டிராமல் ‘இந்து மசோதா சட்டம்’ என்னும், இந்து மதத்தில் பெண்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் சட்டத்துக்கு எதிரானதொரு சட்டத்தை பழமை விரும்பிகள், ராஜேந்திரபிரசாத், ராஜகோபாலாச்சாரி, வல்லபாய்படேல் போன்ற பெண்ணுரிமைக்கு எதிரான ஆணாதிக்க வெறியர்களால் தோற்கடிக்கப்பட்டமையால் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார் டாக்டர் அம்பேத்கர்!!

20.7.1942ல் இந்தியாவின் தொழிலாளர் துறை அமைச்சராக வைஸ்ராய் மந்திரி சபையில் பதவி ஏற்ற அவர் ஒரே மாதத்தில் ஆகஸ்டு 7ஆம் தேதி, முதன் முதலில் தொழிலாளர் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டினார். உலகில் எந்த நாடும் செய்யாத இந்தச் சிறப்புமிக்கச் செயலை கடவுள் அம்பேத்கர் செய்தார். ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் பத்து மணிநேரம் பன்னிரண்டு மணி நேரம் என்று உழைத்து உருக்குலைந்த தொழிலாளர்களின் நிலை குறித்து அரசு தரப்பிலும், முதலாளிகள் தரப்பிலும், தொழிலாளர்கள் தரப்பிலும் பேசவைத்து – டாக்டர் அம்பேத்கர் தன் கருத்துகளையும் விரிவாக எடுத்துக் கூறி ஒரு நாளில் எட்டு மணி நேர வேலை என்றும், மூன்று ‘ஷிப்டு’ முறையையும் கொண்டு வந்து தொழிலாளர்களின் (தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல – பார்ப்பனர் முதல் அனைத்து சாதி – மத – பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கும், பெண் தொழிலாளர்களுக்கும்) வேலை பளுவைக் குறைத்தார். புதிதாக வேலைவாய்ப்புக்கு வழிவகுத்தார். முதலாளிகளுக்கு மூன்று ஷிப்டு பணியால் மூன்று மடங்கு லாபம் பெற வழிவகுத்தார்.

கையடக்க நூலான ‘கடவுள் அம்பேத்கர்’ என்னும் இந்நூலில் விரிவாகக் கூறவியலாமையால் சுருக்கமாகத் தொகுக்கிறேன். அகவிலைப்படி (Dearness Allowance), தொழிலாளர் நல காப்பீடு திட்டம் (Labour Welfare Funds), நிலக்கரி-மைக்கா சுரங்கத் தொழிலாளர் நலத்திட்டம் (1944), மருத்துவச் செலவை திரும்பப் பெறும் சட்டம் (1943), மாநில தொழிலாளர் காப்பீட்டு சட்டம் (E.S.I), ஏப்ரல் 19, 1948ல் சட்டமாக்கினார். வைப்பு நிதிச் சட்டம் (Providant fund Act), தேசிய வேலைவாய்ப்பு அலுவலகம் (Employment Exchange), மகளிர் மகப்பேறு கால சட்டம் (Maternity Benifit for Woman Labour Bill), பெண்கள், குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம், தொழிற்சங்கங்களுக்கு கட்டாயம் அங்கீகாரம் அளிக்கும் சட்ட மசோதா ஆகியவை கடவுள் அம்பேத்கரால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் – பெண்கள் – குழந்தைத் தொழிலாளர் வாழ்வாதாரச் சட்டங்கள் ஆகும். இது ஒரு சாதிக்கு மட்டுமான சட்டமல்ல, பார்ப்பனர் முதல் இந்திய மக்கள் அனைவருக்குமே கடவுள் அம்பேத்கர் கேட்காமலே அளித்த வரங்களாகும்.

தந்தை பெரியாரின் திசை மாற்றிய கடவுள் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கரை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார்தான் என்று கூறுவோர் பலருண்டு. தந்தை பெரியார் ராமசாமி 17.09.1879ல் பிறக்கிறார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 14.04.1891-ல் பிறக்கிறார். பெரியார் ஈ.வெ.ரா. பதினோரு ஆண்டுகள் ஆறு மாதங்கள் இருபத்திரெண்டு நாட்கள் முன்னவர். இருவருமே மக்களை நல்வழிப்படுத்தத் தங்கள் வாழ்நாளில் போராடியவர்கள். ஆனால் இருவரின் போராட்டக் காலங்களில் யார் முன்னோடி என்றால் கடவுள் அம்பேத்கரே!! பிந்திப் பிறந்து முந்தி மறைந்தவரும் டாக்டர் அம்பேத்கரே! அவர் மறைந்தது 06.12.1956ல். தந்தை பெரியார் மறைந்தது 24.12.1973-ல். பெரியார் கூடுதலாக வாழ்ந்த காலம்… 17 ஆண்டுகள், 18 நாட்கள். பெரியார் வாழ்ந்தது 94 ஆண்டுகள் 3 மாதங்கள், 7 நாட்கள். டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்தது 65 ஆண்டுகள், 7 மாதங்கள், 22 நாட்கள்.

பிறக்கையிலேயே அம்பேத்கருக்குப் பிரச்சனை தொடங்கிவிடுகிறது. தீண்டப்படாத மகர் இனத்தில் பிறந்தவர் என்பதால். ஈ.வெ. இராமசாமிக்கு அது இல்லை. பணக்கார குடும்பத்தில் உயர்குடியில் கன்னடிய நாயக்கர் இனத்தில் பிறந்தவர் அவர். அனைத்து வசதிகளிருந்தும் ஐந்தாம் வகுப்புக்குமேல் ஈ.வெ.ரா. படிக்கவில்லை. விளையாட்டுப் பிள்ளை. அம்பேத்கர் நிலை அதுவல்ல. வகுப்பின் உள் அனுமதிக்கப்படாமல் வாயிலில் அமர்ந்துப் படித்தும், தெரு விளக்கிலும் பூங்காக்களிலும் படித்தும் பலரிடம் பணவுதவிப் பெற்றும் அமெரிக்கா, இலண்டன், ஜெர்மனி எனச் சென்று பட்டங்கள் பல பெற்று உலக அறிஞர்கள் பலருள் ஒருவராகிறார்.

ஈ.வெ.ரா.வுக்கு 19 வயதில் (1898-ல்) தடபுடலாக திருமணம் நடக்கிறது. நாகம்மையை மணக்கிறார். அம்பேத்கருக்கு 16 வயதில் (1906-ல்) திருமணம் நடக்கிறது. இராமாபாயை மணக்கிறார். திருமண மண்டபம் எது தெரியுமா? பம்பாய் பைகுளா மீன் மார்க்கெட், இரவு கடை முடிந்து சென்ற பின்னர் அவ்விடத்தைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு மீன் விற்கும் மேடையில் அமர்த்தப்பட்டு அம்பேத்கர் ராமாபாய்க்கு தாலி கட்டுகிறார். அம்பேத்கர், மனைவியைப் பிரிந்துச் சென்று அயல்நாடுகளில் கல்வி பயில்கிறார். அங்கு அவரை நாடிவரும் பெண்களிடமும் அவர் நாட்டங் கொள்ளவில்லை.

ஈ.வெ.ரா. பணக்கார மைனராக நண்பர்களோடு தாசி வீடுகளில் தஞ்சம் புகுகிறார். தந்தை திட்டினார் என்பதால் வீட்டை வெறுத்து காசிக்குச் செல்கிறார். காசியில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக நெய்ச்சோறு பரிமாறப்படுகிறது. பார்ப்பனர் அல்லாதாருக்கு பழஞ்சோறு போடவும் ஆளில்லை. பசிக்கொடுமை, பார்ப்பனர்கள் சாப்பிட்டு வீசிய வாழை யிலையில் மிச்சமுள்ளதை வழித்து உண்கிறார். பிரச்சனையே ஈ.வெ.ரா.வுக்கு அப்போதுதான் தெரிகிறது. பார்ப்பனர்கள் மீது பகை கொள்கிறார். தந்தையார் தேடி வந்து ஈ.வெ.ரா.வை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

பட்டதாரியாக அமெரிக்காவிலிருந்து திரும்பிய அம்பேத்கர் கல்விக்காக பட்டக் கடனை அடைப்பதற்காக பரோடா அரசில் உயர் பொறுப்பு ஏற்கிறார். பரோடாவில் தங்கிட வீடு தர மறுக்கின்றனர். உணவு விடுதிகளிலும் சாதியின் காரணமாக அறைகள் தர மறுக்கின்றனர். அலுவலகத்தில் ‘ஆபிஸ் பியூன்’ கூட அலட்சியப்படுத்தி ஆணவமாக ‘பைலை’ வீசி எறிகிறான். சாதிக் கொடுமைகள் தாளாமல் அம்பேத்கர் வீடு திரும்புகிறார், தந்தை மரணமடைகிறார். மேலும் உயர் படிப்பு படிப்பதற்காக அம்பேத்கர் இலண்டன் செல்கிறார்.

ஈ.வெ.ரா.வின் நிலை அதுவல்ல. 5ஆம் வகுப்பே படித்திருந்தாலும் அவர் ஈரோடு வட்டம் தேவஸ்தானக் கமிட்டித் தலைவராகவும், ஈரோடு நகர சபைத் தலைவராகவும், ஈரோடு கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், வியாபாரச் சங்கத் தலைவராகவும், இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனராகவும், ரீடிங் ரூம் செக்கரட்ரியாகவும், பழைய மாணவர் சங்க செக்கரட்ரியாகவும், ஹைஸ்கூல் போர்டு செக்கரட்ரியாகவும், இப்படியாக 29 உயர் பதவிகளை 1905 முதல் 1920 வரை வகித்தார் ஈ.வெ. ராமசாமி.

1920ல் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக வருடத்திற்கு ரூ.20,000/- வருமானம் வரக்கூடிய வணிகத் தொழிலையும், 29 உயர் பதவிகளையும் விடுத்து காந்தியின் சீடராகி, கதராடையை தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றிடலானார். மதுவிலக்கை அமல்படுத்த மது தரும் மரங்களை வெட்ட வேண்டும் என்று காந்தியார் சொன்னபோது சேலம் தாதம்பட்டில் தன் தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் 1921ஆம் ஆண்டில்.

இதே காலகட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன் குடும்பத்தின் அன்றாட உணவுக்கு வழிகாண பார்சி மாணவர்கள் இருவருக்கு ‘டியூசன்’ சொல்லிக் கொடுத்தார். வணிகத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனைக் கூறும் ஒரு வணிக நிறுவனத்தை பொருளாதார நிபுணரான அம்பேத்கர் தொடங்கினார். அங்கும் சாதி குறுக்கிட்டு அதை மூடவைத்தது. 11.11.1918ல் பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 27.11.1919ல் சவுத்பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்துத் தன் கருத்துகளை எழுத்துமூலமாக எடுத்துரைத்தார். 31.1.1920ல் ‘மூக் நாயக்’ (ஊமைகளின் தலைவன்) என்னும் மராத்திய வார இதழைத் தொடங்கி மக்களை விழிப்புறச் செய்தார். பார்ப்பனீயத்தையும் காந்தியையும் விமர்ச்சித்து மூக் நாயக் பத்திரிகையில் எழுதினார்.

1921ல் ஈ.வெ.ரா. ஈரோட்டுக் கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். பல நூறு பேர்களோடு சிறைப்பட்டார். 1924ல் கதர் பிரச்சாரம் செய்ததற்காகச் சிறை தண்டனை அடைந்தார். சேரன் மாதேவி குருகுல ஆசிரமம் பார்ப்பனர் அல்லாதாரால் நடத்தப்பட்டும், பார்ப்பனர்க்கு உயர் தனி இடத்திலும், பார்ப்பனர் அல்லாதார்க்கு ஒதுக்குபுற இடத்திலும் உணவளிக்கப்படுவதைக் கண்டித்துப் போராடினார். பார்ப்பனீயப் பிரச்சினை பெரியாருக்கு இப்போதே புரிகிறது. 1896-ல் அம்பேத்கர் அறிந்த உண்மையை பெரியார் 1924-லேயே உணர்கிறார். 1925ல் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் “இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை” என்று கூறிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினார். 2.5.1925ல் குடியரசு பத்திரிகையைத் தொடங்கி சுயமரியாதைக் கொள்கையை விளப்பரப்படுத்தினார். 1920-ல் மூக் நாயக் இதழ் மூலம் டாக்டர் அம்பேத்கர் செய்த அறப்பணியை தந்தை பெரியார் 1925ல் குடியரசு பத்திரிகை மூலம் செய்திடலானார்.

20.7.1924ல் தீண்டப்படாத வகுப்பு மக்களின் உயர்வினுக்காகப் போராட, ‘பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபை’ என்னும் அமைப்பு டாக்டர் அம்பேத்கரால் தொடங்கப்பட்டது. அதில் காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாத மக்களின் உயர்வுக்கு உதவ மாட்டார்கள். தன்மானத்தோடு வாழ தாழ்த்தப்பட்டோர் தனி அணியாக உருவாகிப் போராட வேண்டும் என்றார். ஈ.வெ.ரா. பெரியார் காந்தியாரிடம் பெங்களூரில் ‘வருணாசிரமம் ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியும், காங்கிரஸ், இந்து மதம் பார்ப்பன ஆதிக்கம் இவைகளை ஒழிக்க வேண்டும்’ என்றார். காந்தியார் வர்ணாஸ்ரம ஆதரவாளர், சாதிமுறைகள் இருக்கவேண்டும் என்பவர். காந்தியாரையும், அவருடைய வர்ணாஸ்ரம கொள்கைகளையும் ஆரம்ப காலம் முதலே எதிர்த்து வருபவர் டாக்டர் அம்பேத்கர். தந்தை பெரியார் 1927ல் காந்தியாரைப் புரிந்துகொண்டு 1929ல் செங்கல்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டைக் கூட்டினார். கடவுள் அம்பேத்கர் காட்டிய திசையில் காந்தியைப் பிரிந்து பயணிக்கத் தொடங்கினார். இதன் பிறகே ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தந்தை பெரியார் ஆனார். அதனால்தான் தந்தை பெரியார் விடுதலையில் எழுதினார் – “மூவாயிரம் ஆண்டுகளில் நான்கு உத்தமச் சீலர்கள்தான் தோன்றியுள்ளார்கள், அவர்கள் புத்தர், ஏசு, நபிகள், டாக்டர் அம்பேத்கர்” என்று! புத்தரை வணங்குவதுபோல், ஏசுவை வணங்குவது போல், நபிகளை வணங்குவது போல் கடவுள் அம்பேத்கரை வணங்குவோம்!

மகாத்மா காந்தியின் உயிர்காத்தக் கடவுள் அம்பேத்கர்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நகரில் பணக்கார வைசியர் பனியா குடும்பத்தில் அக்டோபர் 2, 1868-ல் பிறந்தவர். இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்தியாவில் பிரிட்டீசாருக்கு எதிராகப் போராட்டங்கள் பல நடத்திய காந்தியார், தென்னாப்ரிக்காவில் வாழ்ந்தபோது வெள்ளையரின் வல்லாட்சிக்கு உண்மையான பக்தராகவே இருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் போராட்டங்களுக்கு எதிராக வெள்ளையருக்குத் துணையாக நின்றார். ஜுலு மக்கள் போராட்டத்தின்போதும் அவர்களுக்கு எதிராக, ஆங்கில அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இதற்காக அவருக்கு பிரிட்டீஷ் அரசால் ‘கய்சர்-ஐ-இந்த்’ என்னும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அவ்வாறே முதலாம் உலகப் போரின்போதும் ஆங்கிலேயரை அவர் ஆதரித்தார். பிரிட்டீஷ் அரசு படைப்பிரிவில் ‘சர்ஜன்ட் மேஜர்’ பதவியில் அவர் பணியாற்றினார். இது குறித்து காந்தி இப்படி குறிப்பிடுகிறார்.

“தென்னாப்பிரிக்காவில் நான் ஆற்றிய படைப்பணிகளுக்காக ஆர்டிஞ்சு பிரபு அவர்களால் ‘கய்சர்-ஐ-இந்த்’ என்னும் தங்கப்பதக்கம் அளிக்கப் பெற்றேன். இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே 1914ல் போர் மூண்டபோது இலண்டனில் ஒரு தன்னார்வலர் மருத்துவ வண்டி அணியை உருவாக்கினேன்.” இப்படி பிரிட்டீஷாருக்கு வாலாக இருந்து ஆடியவர்தான் இந்தியா வந்ததும், பிரிட்டீஷாரை எதிர்க்கும் தலையாகி குரல் கொடுத்தார். விடுதலைப் போராட்ட வீரரானார். தேசத் தந்தையானார். அவருடைய மதவாத கருத்துகளைக் காண்போம்.

மகாத்மா காந்தி உதிர்த்தப் பொன்மொழிகள்
மிக உயர்ந்த நல்ல சமூக அமைப்புக்காக உருவாக்கப்பட்டதே வருணாசிரம சாதிமுறை.
ஒருவருக்கு மேல் ஒருவர் உயர முற்படுவது வீணான வேலை. அழிவைத் தரும் போட்டி மனப்பான்மைக்கு எதிரான கோட்பாடுதான் வருணம் என்கிற சாதியின் சட்டம்.
தன் உயிர் வாழ்க்கைக்காக தன்னுடைய முன்னோர்கள் தொழிலை மட்டுமே ஒரு மனிதன் மேற்கொள்ள வேண்டும் என்பதே சாதி உணர்த்தும் உட்பொருள்.
சூத்திரன் என்பவன் தனது மதக் கடமையாகவே உயர் சாதிக்காரர்களுக்கு ஊழியம் செய்கிறான். அவன் எந்தக் காலத்திலும் சொந்தமாக சொத்து வைத்துக்கொள்ளக்கூடாது. (சூத்திரன் என்பவன் பிற்படுத்தப்பட்டவன்)
எல்லாக் கோயில்களிலும் நுழைவதற்குரிய உரிமை சாதியிலிருந்து தள்ளப்பட்டவர்களுக்கு இல்லை. (தாழ்த்தப்பட்டவர்கள்)
சாதிப் பிரிவினையின் ஆணிவேர் பிறப்பிலேயே இருக்கிறது. சாதி என்பதன் பொருள் ஒரு மனிதனின் தொழிலை முன்கூட்டியே முடிவு செய்தல் என்பதாகும்.
ஒரு மனிதன் எந்தச் சாதியில் பிறந்தானோ அதற்கே சொந்தம் உள்ளவன் ஆவான், தனது சாதிக்கு உரிய தொழிலைச் செய்யாமல் வாழ்ந்தால் அவன் தனக்கே கொடுமை இழைப்பவன் ஆவான்.
சூத்திரர்கள் தங்கள் முன்னோர்களின் குலத்தொழிலைக் கைவிட்டு விட்டு மற்றவற்றை மேற்கொண்டால், அவர்களிடம் பேராசை கொழுந்து விட்டு எழும்பும், அவர்களது குடும்ப அமைதியும் குலைந்துபோகும்.
நான்கு சாதிகளும் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) நான்கு பருவநிலைகளும் பிறப்பினால் மட்டுமே அடையக் கூடிய பேறுகளாகும்.
ஏழைகளின் அரங்காவலர்களே முதலாளிகள், நீங்கள் விடுதலை, கூலி உயர்வு கேட்காதீர்கள், ஏனெனில் அது உங்கள் எசமானரை – முதலாளியை ஆத்திரம் அடையச் செய்யும். அவர் உங்களை இழிவாக நடத்துவார்.
படிப்பறிவு இல்லாமல் இருப்பதே அடிமை ஆகாத சுதந்திர மனிதனாக இருப்பதாகும். (முட்டாள்களாகவே கும்பிட்டு வாழவேண்டும் என்கிறார்)
சாதி காரணமாக ஒதுக்கிவைப்பதை ஒரு பாவம் என்று நான் எண்ணவில்லை.
மலம் அள்ளும் தொழிலாளி மலம் அள்ளிக்கொண்டே இருக்க வேண்டும், சட்டமன்ற உறுப்பினர் (MLA), பாராளுமன்ற உறுப்பினர் (MP), அமைச்சர்கள் ஆகக்கூடாது. விவசாயக் கூலி சாகும்வரை கூலியாகவே இருக்கவேண்டும். ஆசிரியராகவோ அமைச்சராகவோ ஆகவே கூடாது. மரமேறிகள், குழி வெட்டுவோர், முடிவெட்டுவோர், உடை வெளுப்போர் (வண்ணார்கள்), ஆடுமாடுகள் மேய்ப்போர் படிக்கக்கூடாது, பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது. முதலாளி முதலாளியாகவே வாழவேண்டும். உயர் சாதி அரசுப் பணியாளர் ஆதிக்கச் சாதியாகவே திகழவேண்டும்.

பார்ப்பனர் கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்துக்கொண்டு அரசின் உயர் பீடங்களில் அமர்ந்து அரசோச்சிக் கொண்டே இருக்க வேண்டும், சூத்திரர்களும், (பிற்படுத்தப்பட்டவர்களும்) தாழ்த்தப்பட்டவர்களும் முன்னேற முயலக் கூடாது. முயன்றால் சொத்து சேர்த்தால் அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டு வயல்கள் நாசப்படுத்தப்பட்டு அவர்கள் மன அமைதியும்-குடும்ப அமைதியும் குலைக்கப்படும். அவர்கள் வாழ்வே அழிக்கப்படும். இது சாதிமுறைகள் வகுத்தக் கட்டுப்பாடு. இதை மீறவே கூடாது. இதுவே காந்தியின் கோட்பாடு செயல்பாடு!

இதைச் சொன்னதோடு நிற்கவில்லை. காந்தி-செயலிலும் மெய்ப்பித்தார். மத்திய மாகாணத்தில் டாக்டர் கரே என்பவர் தனது அமைச்சவையில் பட்டப்படிப்பும் தகுதியும் உள்ள ஒரு தாழ்த்தப்பட்டவரை அமைச்சராக நியமித்து விட்டார். வருணாசிரம முறைக்கு மாறாகத் தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பதவி கொடுத்துவிட்டார் என்று கூறி அந்த அமைச்சரவையையே கலைக்கச்செய்துவிட்டார் காந்தி. அந்தத் தாழ்த்தப்பட்டவரை நீக்கிய பின்னரே புதிய அமைச்சரவையை பதவி ஏற்றிட செய்தார் மகா ஆத்மா?!

அறப்போராளி – ஓர் உயிரையும் கொல்லாதவர் காந்தி என்கிறார்கள். அது உண்மையா? தன் கரத்தால் கொல்வது மட்டும் கொலையல்ல “மற்றவரைக் கொன்றுவிட்டு வா” என்று கூறுவதும் கொலைச் செயலே.

“இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு இந்தியாவில் உள்ள எல்லா ஆங்கிலேயர்களும் கொல்லப்பட்டு விடவேண்டும்” என்று பேசினார் காந்தி. இதன் தாக்கமே ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றது.

ஒரு சனாதன மனிதன் என்று என்னை நானே அழைத்துக் கொள்கிறேன். எனது அரசியல் மதம் சார்ந்தது என்று கூறியதோடு, இந்து முஸ்லிம் கலவரத்தின் போது “உங்களால் மற்றவர்களை (முஸ்லிம்களை) தாக்க முடியுமென்றால் பிறகு உங்களை எதிர்க்க வேறு எவராலும் ஒரு விரலைக் கூட அசைக்க முடியாது.” “கல்கத்தா நகரம் முழுவதுமே குருதி வெள்ளதிலே நீச்சல் அடித்தாலும் அந்தக் கலவரம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தாது” என்று எழுதிப் பேசிய அகிம்சாவாதியே மகா ஆத்மா காந்தி. காந்தி என்பது அவருடைய சாதியின் பெயர் என்பதை மறந்து விடாதீர்கள். மிஸ்டர் காந்தி என்றால் சாதியின் தலைவரே என்றாகும்.

இனி காந்தியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.
நாக்கிலே கடவுள் பெயரையும், கக்கத்திலே வாளையும் கொண்ட ஒரு மனிதர் ‘மகாத்மா’ என்னும் சிறப்புப் பட்டத்துக்குத் தகுதியானவர்தான் என்றால் பிறகு மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியும் “மகாத்மா”தான்.
தீண்டப்படாதவர்களின் உரிமைக் கோரிக்கைகளுக்கு உறுதியான எதிர்ப்பாளராகவே காந்தி இருந்து வந்தார்.
காந்தியின் பூனா ஒப்பந்தம், சாகும்வரை உண்ணாவிரதம் என்பவை எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு எதிரான போர் அறிவிப்பே தவிர தீண்டாமைக்கு எதிரான போர் அறிவிப்பு இல்லை.
காந்தி சாதிமுறையை எப்போதுமே எதிர்க்கவில்லை. அவர் ஒரு சாதி மனிதராகவே வாழ்ந்தார், மடிந்தார்.
காந்தி ஒரு கழுத்தறுப்பாளர் என்று தீண்டப்படாதவர்கள் அழைத்தால் அது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்டக் கூற்றோ கட்டுக்கதையோ ஆகாது.
தீண்டப்படாதவர்களின் முதல் எதிரி காந்திதான். ஆகையால் காந்தியைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.
நம்பிக்கை துரோகமும் மோசடி வேலையும் உறுதியற்ற ஊசலாட்டக் காரர்களின் கருவிகள் ஆகும். இந்தக் கருவிகளைத் தீண்டப்படாதவர் களுக்கு எதிராக எப்போதுமே பயன்படுத்தி வந்திருக்கிறார் காந்தி.
தீண்டப்படாதவர்களுக்கு உதவுகின்ற இந்துக்கள் அல்லாதார் (முஸ்லிம்-கிருத்துவர்) எல்லாரையும் வெளிப்படையாக எதிர்த்து வந்திருப்பவரே காந்தி. இந்துக்கள் அல்லாதாருக்கு இந்துக்கள் உதவலாம். ஆனால் ஒருவருமே தீண்டப்படாதவருக்கு உதவவே கூடாது. இதுவே காந்தியின் தர்க்கவாதம். காந்தி எத்தனையோ தடவைகள் எத்தனையோ காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் ஒருமுறைக்கூட தீண்டாமை ஒழிப்புக்காகவோ, தீண்டப்படாதவர்களின் முன்னேற்றத்திற் காகவோ அவர் உண்ணாநோன்பு இருந்ததில்லை.
இந்து சமயத்தின் உறுப்பாக எந்தக் காலத்திலும் இருந்திராத தீண்டப்படாதவர்கள் வலுக்கட்டாயமாக இந்து சமயத்துடன் இணைக்கப் பட்டனர். இதுதான் காந்தியின் மிகப்பெரிய தொண்டு. தீண்டப்படாதவர் களுக்கு பிரிட்டீஷ் அரசால் வழங்கப்பட்ட தீண்டப்படாதவர்களின் பிரதிநிதிகளை தீண்டப்படாதவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒதுக்கீடு உரிமைக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு பூனா ஒப்பந்தத்தின் மூலம் அதைத் தட்டிப் பறித்தவரே காந்தி.
நீதி உணர்வே இல்லாத பாவியாகத்தான் இருந்தார் காந்தி. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வஞ்சகமான கோழைத்தனமான ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்கிற கருவியைப் பயன்படுத்தினாரே அல்லாமல் அறிவுக்கூர்மையை அவர் பயன்படுத்தவில்லை. இதன் மூலம் இந்துக்களின் நிலையான அடிமைகளாகத் தீண்டப்படாதவர்களை ஆகும்படி செய்தார்.
இந்தியாவின் பணக்கார மனிதர்களே ஏழைகளின் அறங்காவலர்கள் என்றார் காந்தி. அந்த நிலையிலேயே இந்தியாவின் செல்வங்களை யெல்லாம் ஏழைகளின் அறங்காவலர்கள் என்ற முறையில் அவர்கள் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் பொருளாதார சமநிலைக்காக காந்தி அழைப்பு விடுத்ததே இல்லை. வறுமை ஒழிப்புக்காக இயக்கம் நடத்தவும் இல்லை.
காந்தி தீண்டப்படாதவரைப் பலிகொடுத்து இந்து மதத்தைக் காப்பாற்றியவர்.
காந்தி நூற்றுக்கு எண்பத்தைந்து விழுக்காடு இந்தியர்களுக்கு ‘இந்தியாவின் தந்தை’ ஆகமுடியாது. பதினைந்து விழுக்காடாக உள்ள ‘உயர்சாதி மக்களின் தந்தை’ என்கிற பட்டத்தையே அவர் பெற முடியும்.
காந்தியார் கூறிய கருத்துகளும், அவற்றிற்கு டாக்டர் அம்பேத்கர் கூறிய மறுப்புகளும் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றை எழுதிட இச்சிறு நூலில் இடமின்மையால் விடுபட்டுள்ளது. இதுபோன்றக் கருத்து மோதல்கள் 1920 முதலே காந்திக்கும் டாக்டர் அம்பேத்கருக்குமிடையே ஏற்பட்டுவிடுகிறது. இக்கருத்து மோதல்களின் படிப்பினையே பெரியார் காந்தியை விட்டு வெளியேறக் காரணம்.

தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போது வெள்ளை அரசுக்கு செல்லப் பிள்ளையாக இருந்த காந்தியார் இந்தியா வந்ததும் வெள்ளையர் அரசுக்குத் தீவிர எதிர்ப்பாளரானார். அதற்குக் காரணம் தீண்டப்படாதவர்களுக்கு பிரிட்டீஷ் அரசினர் டாக்டர் அம்பேத்கரின் வேண்டுகோளுக்கிணங்க சில பல நன்மைகளைச் செய்திருந்தனர். கிருத்துவ மதத்தில் சேர்ந்திருந்த தீண்டப் படாதார் ஆசிரியர்களாகவும், போதகர்களாகவும் ஆகியிருந்தனர். இதைக் காண பொறுக்கவில்லை காந்தியாருக்கு. ஆங்கிலேயரை கண்மூடித்தனமாக எதிர்க்கலானார்.

‘இந்துவாகப் பிறந்துவிட்ட நான் இந்துவாக இறக்க மாட்டேன்’ என இயோலா மாநாட்டில் 13.10.1935ல் அறிவித்த டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு நீங்கி மற்றோர் மதத்தில் சேரப்போவதாக அறிவித்தார். டாக்டர் அம்பேத்கரை இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும், சீக்கியர்களும் தங்கள் தங்கள் மதத்திற்கு வரும்படியும், அதற்காக பலகோடி ரூபாயை தீண்டப்படாதாரின் முன்னேற்றத்திற்குச் செலவிடுவதாகவும் கூறினார்கள். டாக்டர் அம்பேத்கர் அமைதியாக எந்த மதத்தில் சேருவது என்பதை பின்னர் அறிவிக்கிறேன் என்று கூறி அனுப்பியதோடு, தங்கள் மக்களின் இழிவைப் போக்கி உயர்த்திடும் எந்த மதத்தையும் தீண்டப்படாத மக்கள் ஏற்றுக் கொள்ளலாம். இந்து மதத்திலிருந்துக்கொண்டு சாதி ஏற்றத்தாழ்வு தீண்டாமைக் கொடுமையை அகற்றவே முடியாது. காந்தியும் இதற்கு உறுதுணையாக உள்ளார். எனவே விரும்பும் மதத்தில் சேர்ந்து சுயமரியாதையோடு வாழும் வழி காணுங்கள் என்றமையால் தீண்டப்படாதோர் பல்லாயிரமவர் கிருத்துவராகவும் முஸ்லிமாகவும், சீக்கியராகவும் மாறி வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்திடலாயினர்.

இதைக் காணப்பொறாத காந்தியார் பிரிட்டீஷ் அரசை எதிர்த்தார். அரசியல் ரீதியாக எதிர்த்தார் என்பதைவிட மத உணர்வு மிகுதியாலும், தீண்டப்படாதாருக்கு பிரிட்டீஷ் அரசு உதவிகள் செய்கிறது என்பதாலேயே “வெள்ளையனே வெளியேறு”” என்றும், “வெள்ளையர்களைக் கொல்லுங்கள்” என்றும் கூக்குரலிட்டார்.

பிரிட்டீஷ் அரசு தீண்டப்படாத மக்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் வேண்டுகோள்படி தீண்டப்படாதார் பிரதிநிதிகளை தீண்டப்படாதவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள ஒரு வாக்கும், பொதுத் தொகுதியில் நிற்கும் மற்றவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் என இரண்டு வாக்குகள் வழங்கி ஆணைப் பிறப்பித்தனர். இதை எதிர்த்தே காந்தி பூனா எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆக தீண்டப்படாதாரை வாழவைக்க காந்தியார் போராட்டம் நடத்தவில்லை. தீண்டப்படாதார் வாழ்வுரிமையைப் பறித்திடவே காந்தியார் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அன்றைய பிரிட்டன் நாட்டுப் பிரதமர் திரு.ஜே.இராம்சே மக்டொனால்டு 1932 செப்டம்பர் 8ம் நாள், காந்திக்கு இப்படி எழுதினார்.

‘எத்தனையோ நூற்றாண்டுகளாக திட்டமிடப்பட்ட இழிநிலைக்குத் தீண்டப்படாதவர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்சாதி இந்துக்களால் விற்பனைப் பொருள்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை – பார்க்கப்போனால் சிறியதுதான் என்பது தெரியவரும். ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை முழுமைக்குமாகப் பொருந்தக்கூடிய எண்ணிக்கை அளவுக்கேற்ப, பங்கு ஒதுக்கீடும் நிர்ணயம் செய்யப்படவும் இல்லை. ஆயினும் சட்டமன்ற, நாடாளுமன்றப் பேரவைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடங்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு என்று ஒரு குறைந்த அளவு எண்ணிக்கையையாவது பெறவேண்டும் என்பதற்காகவே இந்த தனி தொகுதிகளின் எண்ணிக்கை வரையறுக்கப் பட்டுள்ளது. எல்லா இடங்களிலுமே ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகைக்கு உரிய நூறு பங்கு விழுக்காட்டுக்கு மிகவும் கீழேதான் அவர்களது தனித் தொகுதிகளுக்கு உரிய பங்கு அமைந்துள்ளது.

‘… தனித்தொகுதிகளைப் பற்றிய மிகவும் நேர்மையான எச்சரிக்கையான திட்டங்களைப் பொறுத்து நீங்கள் எடுத்துள்ள உண்ணாவிரத முடிவுக்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. உண்மையான நடைமுறை நிலவரங்களைப் பற்றிய தவறான கருத்துடன்தான் இந்த முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்று மட்டுமே என்னால் எண்ணத் தோன்றுகிறது’ என்று பிரிட்டீஷ் பிரதமர் இராம்சே மெக் டொனால்டு எழுதுகிறார்.

ஆனாலும் காந்தியார் விடாப்பிடியாக தீண்டப்படாதவர்களுக்கான தனித் தொகுதி ஒதுக்கீட்டு முறையை நிறைவேற்றக்கூடாது என்று உண்ணா விரதத்தைத் தொடர்கிறார். பிரிட்டீஷ் பிரதமர் உறுதியாகக் கூறிவிடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதிமுறை அனைத்து வகையிலும் நியாயமானது. பிரிட்டீஷ் அரசு ஆணையை மாற்ற விரும்பவில்லை. டாக்டர் அம்பேத்கரிடம் பேசி இதற்கோர் முடிவு காணுங்கள் என்று கூறிவிட்டனர். அதன் பின்னரே அனைவரும் டாக்டர் அம்பேத்கரை அணுகி காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டி கையேந்துகின்றனர். டாக்டர் அம்பேத்கரும் மற்றத் தலைவர்களும் எரவாடா சிறையிலிருந்த காந்தியை சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொள்கின்றனர். மத வெறி பிடித்த காந்தியால் தீண்டப்படாத மக்களின் வாழ்வுரிமையைக் காத்திட மனம் வரவில்லை. இந்து மதத்துக்குள் தீண்டப்படாதாரை அடிமட்ட அடிமை மக்களாக வைத்து மகிழவே காந்தி விரும்பினார்.

தீண்டப்படாதவர்களுக்கு காந்தியார் “கடவுளின் குழந்தைகள்” ஹரிஜன் எனப் பெயரிட்டார். டாக்டர் அம்பேத்கர் வினவினார் “நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் நீங்கள் பேய் பிசாசுகளின் குழந்தைகளா” எனக் கேட்டார். காந்தியிடமிருந்து இதற்கு பதிலில்லை. ‘ஹரிஜன்’ என்றால் அப்பன் பெயர் தெரியாத பிள்ளை – அதாவது யார் யாருக்கோ பிறந்த வேசி மக்கள் என்பதாகும்.
ஹரியின் கோவிலுக்கு வணங்க வரும் ஹரிபக்தர்கள் ஹரியை வணங்கிவிட்டு அன்றிரவு கோயில் விடுதிகளில் தங்கும்போது அங்குள்ள தாசிகளின் வீடுகளில் சரச சல்லாபத்தில் ஈடுபடுவார்கள். பொழுது விடிந்ததும் போய்விடுவார்கள். இத்தகைய நிலையில் அந்தத் தாசிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யாரை அப்பன் என்று கூறவியலும். எனவே ஹரியை வணங்க வந்த யாரோ ஒருவனுக்குப் பிறந்த பிள்ளை, ‘ஹரிஜன்’ என்னும் பெயரை காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வைத்து மகிழ்ந்தார். பச்சையாக-பெரியார் பாணியில் கூறுவதானால் “தெவடியாப்பசங்க” என்பதுதான் இதன் பொருள்.

இந்து மதத்திலும் சூத்திரர்கள் என்றால் என்ன பொருள் என்று பெரியாரிடம் கேட்டபோது அவர் வெளிப்படையாகக் கூறியது ‘தெவடியாப்பசங்க’ என்பதுதான் பொருள் என்றார். என்னையும் தெவடியாப்பயல், உன்னையும் தெவடியாப்பயல் என்கிற மனுதர்மத்தை எரிக்கவேண்டும் எனக் கூறி எரித்தவர் தந்தை பெரியார்.

காந்தியின் உயிரைக் காத்திட வேண்டி காங்கிரஸ் தலைவர்களோடு காந்தியின் துணைவியார் கஸ்தூரிபாயும், மகன் தேவதாஸ் காந்தியும் டாக்டர் அம்பேத்கரிடம் உயிர் பிச்சைக் கேட்டார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் மக்களின் வாழ்வா, காந்தியின் உயிரா என்னும் போராட்டத்தில் இரண்டொரு நாள் தவித்து ஒரு முடிவுக்கு வந்தார். உயிரினும் மேலான தனித்தொகுதி ஒதுக்கீட்டு உரிமையை விட்டுக்கொடுத்து காந்தியின் உயிரைக் காப்பாற்றிய கடவுளானார் அம்பேத்கர்.

காந்தியின் உயிரை மட்டுமல்ல, தம்மின மக்கள் பல லட்சம்பேரின் உயிரையும் காப்பாற்றியவரானார் கடவுள் அம்பேத்கர். காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் இந்து மத வெறிகொண்ட கும்பல் தங்கள் மக்களை குடிசைகளோடு கொளுத்திவிடுவார்கள், கொன்று குவித்துவிடுவார்கள் என்று அஞ்சியே அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஒரே ஒரு கையெழுத்தால் காந்தியின் உயிரையும், பல லட்சம் தாழ்த்தப்பட்டோரின் உயிரையும் காப்பாற்றிய கடவுள் அம்பேத்கரை கைகூப்பி வணங்குவோம்.

காந்தியின் உயிரை அவர் போற்றி வணங்கும் ராமர் காப்பாற்றவில்லை. விநாயக் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனன் – இந்து மத வெறியன் பிர்லா மாளிகையில் பிரார்த்தனையிலிருந்த காந்தியை துப்பாக்கியால் மூன்று முறைச் சுட்டுக் கொன்றபோது “ஹேராம்” என்று விழுந்து இறந்தாரே அப்போது அவர் உயிரைக் காப்பாற்ற இராமர் வரவில்லை!

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஒரு கூட்டத்தில் பேசும்போது கூறினார், “இந்து மதத்தில் மிக உயர்ந்த குலம் எனக் கூறப்படும் பிராமணர் குலத்திற்கு நான் ஒருநாள் மருமகனாவேன்” என்று அறைகூவல் விடுத்தார். அதன்படியே அவர் சட்டம் எழுதி முடித்தபோது உடல்நிலைக் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்குத் துணையாக ஒரு ‘நர்ஸ்’ உடனிருக்க வேண்டும் என்னும் நிலை ஏற்பட்டபோது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த ‘சவீதா கபீரே’ உடனிருப்பதாக மனமுவந்து ஏற்றமையினால் பாபாசாகேப் அம்பேத்கர் பிராமண குலத்தின் மருமகன் ஆனார்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இயோலா மாநாட்டில் அறிவித்ததைப்போல் மதம் மாறினார். 1956 அக்டோபர் 14ம் நாளில் வைசாகப் பவுர்ணமியில் பவுத்தம் தழுவினார். பகுத்தறிவாளர் புத்தரை தன் வழிகாட்டியாக ஏற்றார். அவரைத் தொடர்ந்து நாகபுரியில் பல லட்சம் மக்கள் பவுத்தம் தழுவினர். இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து பவுத்த சமய மாற்றத்துக்குத் திட்டமிட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கரை இந்து மதத்தினர் இல்லாமல் செய்து விட்டனர். இதை வெளிப்படையாகக் கூறியவர் தந்தை பெரியார். “இவ்வுலகில் மூவாயிரம் ஆண்டுகளில் நான்கு உத்தமச் சீலர்கள் தோன்றினார்கள். அவர்கள் புத்தர், ஏசு, நபிகள், டாக்டர் அம்பேத்கர். பாவிகள் அவரைக் கொன்றுவிட்டனர்” என்று எழுதினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் போராடி வாழ்வுரிமை தந்ததோடு இந்திய மக்களுக்கெல்லாம் பொதுவான ஓர் சட்டத்தை – மநுதர்மத்துக்கு மாற்றான சட்டத்தை எழுதி முறை செய்து காப்பாற்றிய இறைவனை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த கடவுள் அம்பேத்கருக்கு நாடெங்கும் கோயில் எழுப்பி கடவுளாக வணங்குவோம்!!

– தமிழ்மறையான்.

Leave a Response