கடைசிப் பந்தில் எட்டிய வெற்றி – மும்பையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்

இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.

ஐதராபாத்தில் நடந்த போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியுடன், ஐதராபாத் அணி மோதிய போட்டி ஏப்ரல் 12 அன்று நடந்தது.

ஐதராபாத் அணித் தலைவர் வில்லியம்சன், மும்பை அணியை பேட்டிங் செய்யப் பணித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா 11 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

எவின் லெவிஸ் 29, இஷான் கிஷான் 9, சூர்யகுமார் யாதவ் 28, பாண்ட்யா 15, பொல்லார்டு 28, பென் கட்டிங் 9, என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சகா மற்றும் தவான் ஆகியோர் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆட்டத்தின் 6.5 ஓவரில் சகா (22 ஓட்டங்கள்) எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அணியின் தலைவர் வில்லியம்சன் 6 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, தவானும் (45 ஓட்டங்கள்) மார்கண்டே பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் சகிப் அல்ஹசன் ஆகியோர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 13 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

இதன் பிறகு தீபக் ஹூண்டா வுடன் யூசூஃப் பதான் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நிதானமான ஆட்டத்தினை வெளிபடுத்தினர்.

இருப்பினும் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 17 வது ஓவரின் 4 ஆவது மற்றும் 5 வது பந்தில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை (பதான், ரஷீத் கான்) வீழ்த்தி அசத்தினார்.

அடுத்த ஓவரை வீசிய முஷ்டஃபிஸூர் ரஹ்மான் வெறும் 1 ஓட்டத்தை கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ஹைதராபாத் அணியின் விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்திருந்த ஹைதராபாத் அணிக்கு கடைசி 6 பந்துகளில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது, ஹூண்டாவுடன் இணைந்த ஸ்டான்லேக் இறுதிப் பந்து வரை வெற்றிக்கு போராடினர்.

கடைசி 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் இறுதிப்பந்தை எதிர்கொண்ட ஸ்டான்லேக் ஒரு ரன் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இறுதிவரை வெற்றிக்குப் போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Leave a Response