தமிழகம் மட்டுமே பேசிவந்த மாநில சுயாட்சியை வலியுறுத்தும் கர்நாடக முதல்வர்

கடந்த ஆண்டு ஜூலையில் நாங்கள் எங்களுக்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ள முடியுமா என ஆராய்வதற்காக ஒரு கமிட்டியை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு சொன்னதும் தில்லியில் உள்ள டிவி ஸ்டுடியோக்களில் இருப்பவர்கள் கொதித்துப்போனார்கள். இந்திய ஒருமைப்பாடு பற்றி கவலைப்பட்ட தொலைக்காட்சி நெறியாளர்கள், தேசியவாதம் பற்றி கர்நாடகத்திற்கு வகுப்பெடுத்தார்கள்.

இந்த ஆண்டு அந்தக் கமிட்டி, கர்நாடகத்திற்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்திருக்கிறது. அந்தக் கமிட்டியின் அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1950ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கர்நாடகத்தின் கொடியையும் கொண்டுவரும்படி மத்திய அரசிடம் எங்கள் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. அதாவது, தங்கள் மாநிலத்திற்கென ஒரு கொடியை வைத்துக்கொள்வது என்ற கன்னட மக்களின் விருப்பம், கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தங்களுடைய வாழ்வு தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டுமென நினைப்பது ஆகியவை வலிமையான தேசத்தை உருவாக்குவது என்ற லட்சியத்திற்கு முரணானதா?

1947ல் இந்தியா என்பது, பிறந்த குழந்தை. பிரிவினைவாத, பிளவுபடுத்தும் நோக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம். ஆகவே, வலிமையான மத்திய அரசைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உருவானது. சர்தார் வல்லபாய் படேல், சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தபோது, வலிமையான மத்திய அரசு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமாகவே இருந்தது. இப்போது 70 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு தேசமாக நாம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். காலத்தின் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றிருக்கிறது இந்திய அரசியல் சாஸனம். இந்தித் திணிப்பின் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டத்திலிருந்தும் பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்களின் தன்னாட்சிக் கோரிக்கைகளிலிருந்தும் பயன்தரத்தக்க பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

இப்போது ஒன்றியம் என்ற நிலையிலிருந்து மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற நிலைக்கு பரிணாமமடைந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், பிராந்தியங்களின் அடையாளங்களை ஏற்பது ஆகியவை நம்முடைய தேசம் என்ற கருத்தாக்கத்திற்கு முரணாக இருக்குமென நான் நினைக்கவில்லை.

கன்னட அடையாளத்தில் கர்நாடகத்திற்கு ஒரு பெருமிதமிருக்கிறது. ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹல்மிதியில் கிடைத்த கன்னட கல்வெட்டின் காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டு. பன்வசியைச் சேர்ந்த கடம்பர்களின் கன்னட ராஜ்ஜியம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்திருக்கிறது. பல தசாப்தங்களாக சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடியை நாங்கள் பயன்படுத்திவந்திருக்கிறோம். இருந்தபோதும், எங்களுடைய புகழ்பெற்ற கவிஞர் குவெம்பு சொன்னதைப்போல, கர்நாடகம் பாரதத்தின் குழந்தை. ஆகவே, தில்லி டிவி ஸ்டுடியோக்களில் உள்ள நெறியாளர்கள், நாங்கள் எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது குறித்து கவலைப்படத் தேவையில்லை.

இந்திய ஒன்றியத்தில், நாங்கள் உறுதியாக இணைந்திருக்கும் நிலையில் எங்களைத் தினம்தோறும் பாதிக்கும் சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை மத்திய அரசுக்குக் கூடுதலான வரிகளைச் செலுத்தி, குறைவாகத் திரும்பப் பெறுகின்றன.

மத்திய அரசின் வரி திரும்பத் தரப்படும்போது, மாநிலங்களின் பங்கு என்று ஒரு பகுதியாகவும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்று ஒரு பகுதியாகவும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி என்பது, பல்வேறு நிபந்தனைகளுடன் வருகிறது. அந்தத் திட்டங்களைக் கட்டாயம் செயல்படுத்தி, எங்கள் பங்கை நாங்கள் பெற வேண்டியுள்ளது. ஆகவே, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதோடு, கூடுதல் வரி செலுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், எங்களது தேவைக்கேற்றபடி மாற்றக்கூடியவையாக இருக்க வேண்டும்.

வரலாற்று ரீதியாகவே, தென்னிந்திய மாநிலங்கள் வட இந்திய மாநிலங்களுக்கு தங்கள் செல்வத்தைப் பகிர்ந்துவந்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே உள்ள ஆறு மாநிலங்களும் கூடுதலான வரியைச் செலுத்தி, குறைவாகத் திரும்பப் பெறுகின்றன. உதாரணமாக, உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாயை வரியாகச் செலுத்தினால், அதற்கு 1.79 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. கர்நாடகம் ஒரு ரூபாய் செலுத்தினால், வெறும் 47 காசுகளே திரும்பக் கிடைக்கின்றன. பிராந்திய ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைக் களைய வேண்டிய தேவை இருப்பது உண்மைதான். ஆனால், வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே? தென்னிந்திய மாநிலங்களில், இறப்பு விகிதமும் பிறப்பு விகிதமும் சரிசமமாகிவிட்டன. இருந்தபோதும், மக்கள் தொகையை வைத்து வரி பகிரப்படுகிறது. மக்கள் தொகையை அதிகரித்துச் செல்வதற்காக, அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு கூடுதலாக நிதி தரப்போகிறோம்?

இந்திய வர்த்தகத்தை பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மாநிலங்களையும் பாதிக்கும். ஆனால், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. உதாரணமாக, தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி, வியட்நாமிலிருந்து இலங்கை வழியாக குறைந்த விலையில் மிளகை இறக்குமதி செய்யலாம். ஆனால், அது கேரளாவிலும் கர்நாடகத்திலும் உள்ள மிளகு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

மத்திய அரசின் வர்த்தகக் கொள்கையானது விவசாய இறக்குமதியை ஆதரிக்கிறது. உபரியாக உற்பத்தி செய்திருக்கும் எங்கள் விவசாயிகளின் லாபத்தை இந்தக் கொள்கை கடுமையாகப் பாதிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை மாநிலங்களால் மட்டும் சரிசெய்ய முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் இருப்பதைப் போல, வர்த்தகக் கொள்கைகளை வகுப்பதற்கும் விவசாயப் பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் ஒரு அமைப்பு தேவை. அப்படி இருந்தால்தான், விவசாயிகளைப் பாதிக்கும் கொள்கைகளின் மீது எங்களால் தாக்கம் செலுத்த முடியும்.

நிதி ஆயோக் மூலம் முன்பிருந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கலைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குப் பதிலாக கலந்தாலோசனை செய்யக்கூடிய எந்தவிதமான அமைப்பும் உருவாக்கப்படவில்லை. நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் மாநிலங்களின் குரல்களுக்கு அதிக பங்கு அளிக்கும் ஒரு அமைப்பு உடனடியாகத் தேவை.

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைவிட கர்நாடகம் பெரியது. பெரும்பாலான இந்திய மாநிலங்கள் அப்படித்தான். இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமென்றால், அதில் உள்ள மாநிலங்கள் வளர்ந்து, வளமுடன் இருக்க வேண்டும்.

மாநிலங்கள் தங்கள் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற வகையில் வளர அனுமதிக்கும் நிலையை நாம் எட்டிவிட்டோம். மாநிலங்கள் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்துவது தொடர்பாக எந்தவிதமான கற்பனையான பயமும் தேவையில்லை. தங்கள் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் அவர்களுக்கு கூடுதல் சுதந்திரம் தேவை. தங்கள் தகுதிக்கேற்ப, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற அனுமதிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திராமல் தாங்கள் விரும்பிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக்கொள்ள முடிய வேண்டும். தாங்கள் விரும்பிய திட்டங்களை வகுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இந்திய மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் அமைந்தவைதான். இந்திய அடையாளம் உருவாவதற்கு முன்பாகவே இங்குள்ள மாநிலங்களின் மொழியும் கலாச்சாரமும் உருவாகிவிட்டன. இருந்தபோதும், இந்தியர்களாகிய நாம் பொதுவான வரலாறு, பொதுவான நாகரீகம், பொதுவான விதியால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நான் ஒரு கன்னடன் என்ற என்னுடைய பெருமிதம், நான் ஒரு இந்தியன் என்ற பெருமிதத்துடன் எவ்வகையிலும் முரண்படவில்லை.

கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டுமெனப் பேசும்போது, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக வாதிடும்போது, மாநிலக் கொடியை உருவாக்கும்போது, வலுவான இந்தியாவை உருவாக்க நாங்கள் பங்களிப்புச் செய்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காரணம், தன்னம்பிக்கை மிகுந்த இந்தியா என்பது, தன் குழந்தைகளின் தனி அடையாளங்களை மதிக்கும்.

—————————–

கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தியா, ஒரு கூட்டாட்சியாக வளர வேண்டியதன் அவசியம் குறித்தும் மாநிலங்களின் தனி அடையாளம் குறித்தும் அந்தக் கட்டுரை சிறப்பாகப் பேசியது. மாநில சுயாட்சி குறித்த மிக முக்கியமான கட்டுரை அது. அதன் தமிழாக்கம்தான் மேலே. (மனிதர், காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்த்தாலும் கருத்துக்களில் பழுதில்லை). இந்தக் கட்டுரைக்கு தமிழர்கள் பலர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தாங்கள் இத்தனை ஆண்டுகளாகக் கூறிவந்ததை இப்போதாவது இன்னொருவர் புரிந்துகொள்கிறாரே என்ற மகிழ்ச்சியின் அடையாளம் அது!!

– கா.முரளிதரன்

Leave a Response