
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் 16.02.2018 அன்று தூத்துக்குடியில் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே. பத்மநாபன், மத்தியக்கு ழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
காவிரி நீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயாமனதல்ல
உச்சநீதிமன்றம் காவிரி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் தமிழகத்திற்குரிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி. ஆக குறைத்திருப்பது தமிழகத்திற்கு பாதகமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கருதுகிறது.
டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் 10 டி.எம்.சி. இருப்பதை கணக்கில் கொண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி. என்றும், இறுதி தீர்ப்பில் 192 டி.எம்.சி.யிலிருந்தும் தற்போது 14.75 டி.எம்.சி. நீரை குறைத்திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நியாயமானதல்ல.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் கணிசமான பகுதி கடலோரமாகவும், உப்புநீர் நிறைந்ததாகவும் உள்ள நிலையில் நிலத்தடி நீரை விவசாயத்திற்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட இந்த தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், கர்நாடக மாநில அரசும் தீர்ப்பை அமல்படுத்த முன்வர வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழக அரசு குறைக்கப்பட்டுள்ள தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்


