பத்மாவத் படத்துக்கு எதிராக கொடிய வன்முறை – பாஜகவை அலறவைக்கும் கண்டனங்கள்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை விலக்கி உத்தரவிட்டது.

ஆனால்,குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.திரையரங்குகள் அடித்து நொறுக்கப்படுவதுடன், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு வருகின்றன.

ஹரியாணா மாநிலம் குர்கானில் பள்ளிக்குழந்தைகள் சென்ற பேருந்துக்கு கலவரக் கும்பல் தீ வைத்தது. இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது,

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வன்முறையும், வெறுப்புணர்வும் சமூகத்தை பலவீனப்படுத்தும். வன்முறை மற்றும் வெறுப்புணர்வை வளர்த்து பாஜக ஒட்டுமொத்த நாட்டையும் கொளுந்துவிட்டு எரிய வைக்கும் செயலில் ஈடுபடுகிறது எனக்கூறியுள்ளார்.

பத்மாவத் திரைப்படத்துக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்ச நீதிமன்றமே படத்தை வெளியிடத் தடையில்லை எனக் கூறிய பின்னரும் ஒரு திரைப்படத்தை முன்வைத்து சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் சச்சரவுகள் இனிமேல் வரவுள்ள மோசமான நிகழ்வுகளுக்கான அறிகுறியே. யார் இந்த கலகக்காரர்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது இங்கே. ஜனநாயகமா அல்லது குண்டர்கள் ஆட்சியா” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். ஒன்று நாட்டு மக்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தாருங்கள். உங்களால் முடியவில்லையென்றால் அதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைத்தவிர இங்கே குறை சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Response