கமல், ரஜினி,விஷால் அரசியலுக்கு சூர்யா வாழ்த்து

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சனவரி 4,2018 அன்று நடைபெற்றது.

இதில் சூர்யா,தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,கீர்த்தி சுரேஷ்,ரம்யா கிருஷ்ணன்,தம்பிராமையா,சுரேஷ் மேனன்,இயக்குநர் விக்னேஷ்சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்,கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் சூர்யா பேசியது :-

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லாக் கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தைத் துவங்கவிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டரும் எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே ஓவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியம். அதோடு தொழில்நுட்பக் கலைஞர்களும் முக்கியம்.நான் நடித்த 35 , 36 படங்களில் நிறைய நல்ல படங்களைக் கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாகச் சொல்ல முடியும்.

அதற்குப் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கியக் காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி. என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனைச் சந்திக்கப் போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள்.

1987-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள பாடல்கள் மிகச் சிறப்பாக அமைத்துள்ளது.

7 வருடங்களுக்குப் பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாப் படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற அறிவுரை எங்கள் படத்தில் வராது, அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது :-

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்தப் படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களைப் பார்த்துத் தான் வளர்ந்தேன். அந்தப் படம் தான் என்னைப் போன்ற பலரை சினிமாவை நோக்கிப் பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா.

சூர்யாவுக்குப் படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்திக் கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன் , கமல் ஹாசனைப் போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியது :-

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாகக் கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன். தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்தப் படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடித் தமிழ்ப் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிடப் பல மடங்கு உழைப்பை விக்கி இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ளார். கடின உழைப்பைப் போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Leave a Response