திருமாவளவன்,அன்புமணி பற்றி விமர்சனம் கூடாது – கட்சியினருக்கு சீமான் கட்டளை

நாம்தமிழர்கட்சியின் இணையதளப் பாசறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்….

நாம் தமிழர் கட்சியின் இணையத் தள உறவுகளுக்கு வணக்கம்.

சமூக வலைதளங்களில் இயங்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த உறவுகளின் நேர்த்திச் செயல்பாடுகளுக்காக
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டலில் கீழ் காணும் நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.

1. எப்பொழுதும் இல்லாத வகையில் தமிழக அரசியலில் தமிழர் இன அரசியலின் தேவை அதிகரித்திருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். நமது செயல்பாடுகள், கருத்துக்கள் ஆகியவை கட்சி வளர்ச்சி சார்ந்தே அமைய வேண்டும். அதுவே நம்மை வெல்ல வைக்கும். ஆனால் சமீபகாலமாக நாம் தமிழர் என்ற போர்வையில் அண்ணன்கள் தொல்.திருமாவளவன்,மருத்துவர்.அன்புமணி இராமதாசு மற்றும் சக தமிழ் அமைப்புகளின் தலைவர்களை இழிவான வார்த்தைகளில் தரம்தாழ்ந்து விமர்சனம் வைப்பதை சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பதையும் அதனால் நமது அடிப்படை நோக்கம் சிதறி கட்சிக்கு வீண் பழி ஏற்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. இனி அவற்றை அனுமதிக்க முடியாது. அத்தகைய நபர்களைச் சரியாக அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க இணையம் வழி இயங்கும் நம் உறவுகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. தனது கருத்துக்களைக் கட்சியின் கருத்து போலத் திரித்து எழுதுபவர்கள், உட்கட்சி விஷயங்களைப் பொதுவெளியில் எழுதி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்துபவர்கள்,கட்சியின் கருத்தினை வைத்துப் பொதுத் தளத்தில் விவாதிப்பவர்கள் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்க இணையத் தளக் கண்காணிப்புக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்களுடன் அக்குழு மேற்கண்டவாறு செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யும்.

3. நம் அமைப்பில் இருப்பது போல் காட்டிக்கொண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கருத்தியலுக்கு மாற்றாகத் தனிநபர் மீதான வன்ம பதிவுகள், அரசியல் விமர்சனங்கள் என்ற பெயரில் கீழ்த்தரமான வார்த்தைகளில் பதில்கள், ஊடகவியலாளர்கள் மீதான உண்மையற்ற குற்றச்சாட்டுக்கள், மதிப்பிற்குரிய தலைவர்கள் பற்றியதான தாக்குதல் பதிவுகள் போன்றவற்றைப் பதிவிடும் பதிவாளர்கள் அடையாளம் காட்டிட நம் உறவுகள் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4.நம் அமைப்பின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில்.. நம் உறவுகளின் செயல்பாடுகள் மற்றும் பதிவுகள் அமைய வேண்டுமென இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மணி செந்தில், பாக்கியராசன் சே,
இணையத் தளப் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள்.
நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response