பலூன் – திரைப்பட விமர்சனம்

கதை இல்லை லாஜிக் இல்லை கருப்பு ட்ரெஸ்ல பெருசா ரொமான்ஸ் இல்லை மரத்தை சுத்தி டூயட் இல்லை…. அட திகிலும் இல்லை ….ஆனா அப்படியும் ஒரு திருப்திப் படுத்துற மாதிரி படம் குடுக்க முடியுமானா… முடியும் … பலூன் இருக்கே…

சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்யும் ஜெய். அவரின் ஜோடி அஞ்சலி.

சமூக வலைத்தளம் மூலம் நண்பன் அனுப்பிய பேய் வீடு பற்றிய ஆய்வுக்காக, மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, உதவி இயக்குநர்களான யோகி பாபு-கார்த்திக் யோகி என ஒரு டீமாக ஊட்டிக்குச் செல்கிறார் ஜெய்.

அங்கு சிறுவன் பப்புவுக்கு மட்டும் ஒரு ஆவி சிறுமி தெரிய அவளுடன் நட்பாகிறான் பப்பு. ஒரு கட்டத்தில் பப்பு உடம்புக்குள் அந்தச் சிறுமியின் ஆவியும், அஞ்சலி உடம்புக்குள் அவளின் தாய் ஆவியும் புகுந்து கதை நீளுகிறது. அவர்களுக்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம் என்பதே கதைன்னு சொல்லலாம்.

குட்டி, சார்லி என இரு கதாபாத்திரங்களில் ஜெய் நடிக்க ,,, சார்லிக்கு ஒரு ஃபிளாஷ்பேக். அதில் அவருக்கு ஜோடி ஜனனி . ஃபிளாஸ்பேக் காட்சியில் வரும் ஜனனி மனதில் நிற்கிறார். மதம் கடந்து திருமணம் செய்யும் நாயகனின் பெயரை ஜீவானந்தம் என வைத்தது,(`கத்தி’ பட ரெஃபரென்ஸ்)…. கொலை செய்யச் செல்லும் வாகனத்தின் முகப்பில் ‘வாழ்க வளமுடன்’ என எழுதியிருப்பது போன்ற இடங்களில் குறியீடாக இயக்குநர் சினிஷ் சமூகத்துக்கு ஏதோ சொல்ல வருகிறார் என்றே தெரிகிறது.

பப்புவின் நகைச்சுவைக் காட்சிகள் அருமை. அதிலும் யோகிபாபுவைப் பார்த்து ‘‘வர வர உன்னைப் பார்க்கவே முடியலை” என்றதும், யோகிபாபு, ‘‘ஆமா, கொஞ்சம் பிஸியாகிட்டேன்’’ என்பார். உடனே பப்பு, ‘‘நான் உன் மூஞ்சியைச் சொன்னேன்” என டைமிங்கில் அடிப்பது அமர்க்களம்.

‘ஃபாதர் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார்’’ என்றதும், ‘‘பிளாக் தண்டர் போயிருக்காரா?” என கேட்பது தொடங்கி படத்தில் எது இருக்கோ இல்லையோ யோகிபாபுவின் டைமிங் நகைசுவை சற்று சுவையைக் கூட்டி இருக்கு. இது ஒரு புறம் என்றால் யுவன் ஷங்கர் ராஜா மிச்சத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

இந்த பலூனி’ன் ஹீலியம் வாயு என்னும் நாம் இருக்கும் வரை பலூன் மேலே மிதந்து கொண்டு தானிருக்கும்.

படத்தின் பலவீனம் : அஞ்சலியும் ஜெய்யும் ஏதோ நாடகத்து ஸ்க்ரிப்ட்டை மனப்பாடம் செஞ்சி ஒப்பிச்சா மாதிரி இருந்தது படத்தின் டயலாக் முழுவதும்.

அங்காடித்தெரு அஞ்சலியே நல்லா தான் இருந்தது . இன்னோசென்ட் வேற , இன்னோசென்ட் மாதிரி நடிக்கிறது வேற .. அஞ்சலிக்கு இன்னொசென்ஸ் ஓட்டலை. ஜெய் சற்று வளர்ந்த நடிகர் . இன்னமும் ஆரம்பக் கால கட்டத்தில் நடித்த மாதிரியே திக்கித் திணறிப் பேசுவது ஒட்டாமல் இருக்கு,

கதை இல்லை என்றாலும் , நடிகர்கள் சொதப்பியுள்ளார்கள் என்றாலும் காற்று நிறைந்த பலூன் மேலே பறக்கிறது.

– பிரியாகுருநாதன்

Leave a Response