டிராக்டர் நல்லாத்தான் உழும் ஆனால் சாணி போடாதே -நம்மாழ்வார் நினைவு நாள் இன்று

கோ.நம்மாழ்வார் (06 ஏப்ரல் 1938 – 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்)மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

அவரைப் பற்றிய சில் குறிப்புகள்…

இலட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.

பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.

நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் எதிர்த்தார்.

கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.

ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே!

1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல… மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.

நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.

விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.

1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!

காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

Leave a Response