இருப்பதைக் கைவிட்டு பறப்பதைப் பிடிக்க முயற்சி – நிதின்கட்கரிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இருப்பதைக் கைவிட்டு பறப்பதைப் பிடிக்க முயற்சி மத்திய அமைச்சருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

கோதாவரி, இந்திராவதி ஆகிய நதிகளில் உள்ள மிகை நீரை கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக காவிரியுடன் இணைப்பதின் மூலம் தமிழ்நாட்டின் நீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் திட்டத்தை ஆராய்ந்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார்.

மேலும் கருநாடகத்தின் ஒப்புதல் தேவையில்லாமல் மகாராஷ்ட்டிரா, சட்டீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஒப்புதலோடு இத்திட்டத்தை நிறைவேற்றும் வழிவகை குறித்துத் திட்டம் வகுக்கத் தொழில்நுட்ப அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான்கு மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று இத்திட்டத்தை அவர் நிறைவேற்றுவாரானால் அவரைத் தமிழக மக்கள் பாராட்டுவார்கள்.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு தனது ஆணையை மதிக்காதப் போக்கை கருநாடக அரசு தொடர்ந்துக் கடைப்பிடித்தால் இறுதியில் சட்டத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தது.

ஆனால், இதுவரை இந்த ஆணையை கருநாடக அரசு மதிக்கவில்லை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரை அமைக்க முன்வரவில்லை.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு சூலை 28ஆம் நாள் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துமாறும், பேபி அணையின் மராமத்துப் பணிகள் முடிந்தபிறகு 152 அடிக்கு நீர் மட்டத்தை உயர்த்தலாம் என ஆணைப் பிறப்பித்தது.

ஆனால், பேபி அணையின் மராமத்துப் பணிகளை செய்வதற்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
ஆனால், கேரள அரசைக் கண்டித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை.

ஆனால், கோதாவரி, இந்திராவதி ஆறுகளின் மிகை நீரை காவிரியோடு இணைப்பதற்கு ஆவன செய்யப்போவதாக மத்திய அமைச்சர் கூறுவது “இருப்பதைக் கைவிட்டுப் பறப்பதைப் பிடிக்கும் முயற்சிக்கு” ஒப்பானதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response