தொப்பி சின்னத்துடன் ஆர்கேநகர் மக்களைச் சந்திப்பேன் – தெம்பாய்ப் பேசும் தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12- தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை ஆணையம் செய்து வந்தது. இதனிடையே, முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்புக்கு நேற்று (வியாழக்கிழமை) இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து எதிர்பார்த்தபடியே தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. அதன்படி, டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவும் டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் திருப்பூரில் நடந்தது. அக்கூட்டத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் மீண்டும் போட்டியிட செய்ய முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தினகரன் கூறியதாவது:

இரட்டை இலையை மீட்க இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சூழ்நிலை, துரோகத்தால் ஏற்பட்டுள்ளது. துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு தொடர்பாக வரும் 27-ம் தேதி சென்னை, டெல்லி உயர் நீதிமன்றங்களையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ நாட உள்ளோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். தொப்பி சின்னத்துடன் ஆர்.கே.நகர் மக்களைச் சந்திப்பேன். வரும்
29-ம் தேதி சசிகலாவை பெங்களூருவில் சந்திக்க உள்ளேன். அவர் ஏற்கனவே என்னை ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கட்சியின் சின்னம் அவர்களிடம் இருக்கலாம். வாள், வீரர் கையில் இருக்க வேண்டும். கோழை கையில் இருக்கக்கூடாது. எங்கள் சின்னத்தை மீட்க, எங்கள் சின்னத்துக்கு எதிராகப் போட்டியிட வேண்டிய வித்தியாசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சசிகலாவின் புகைப்படமிட்டுத்தான் ஆர்.கே.நகரில் கடந்த முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அவரது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தாமல் இல்லை. பயன்படுத்தினோம். இந்தமுறையும் நிச்சயம் பயன்படுத்துவோம்.

ஆர்.கே.நகரில் கடந்தமுறை பணப்பட்டுவாடா புகார் யாரால் எழுந்தது? எவ்வளவு பணம் கொடுத்தாலும், மக்கள் துரோகத்தை மறக்கமாட்டார்கள். அதிமுகவின் கொடியைப் பயன்படுத்துவோம். அது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் வரவில்லை.

இவ்வாறு பேசினார் டிடிவி தினகரன்.

Leave a Response