ஜெ ஒரு கொள்ளைக்காரர் அவர் வழியில் ஆட்சியா? -கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சாருஹாசன்

நவம்பர் 19,2017 அன்று, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய் – இவ்வாறு கமல் எழுதியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நவம்பர் 20,2017 அன்று நிருபர்களிடம் கூறியதாவது:

டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நெஞ்சிலே நயவஞ்கத்தன்மையோடு ஜெயலலிதா அரசு மீது புழுதிவாரித் தூற்றி இருப்பது அதிமுகவில் உள்ள எந்தத் தொண்டனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கமல்ஹாசன் சொல்வது போல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் எந்தத் துறையில் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆதாரம் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அரசு மீது குற்றச்சாட்டு சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்தக் குற்றச்சாட்டுக்கு கமல்ஹாசன் பதில் சொல்லாவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலாக கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அம்மா வழியில் அம்மா ஆட்சி நடத்துகிறோம்’’ என்று சொல்கிறார். நாமும் அறுபது கோடிக்கும் குறையாமல் கொள்ளையடிப்போம் என்று சொல்கிறீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த அமைச்சருக்கு நெஞ்சில் வீரமிருந்தால், உச்ச நீதிமன்றம் அம்மா அவர்கள் தகுதிக்கு அதிகமாக அரசு ஊழியராக 60 கோடிகள் சொத்து சேர்த்தார். அதை சசிகலாவுக்கு இனாமாகக் கொடுத்தார் (அல்லது தற்காலிகமாகக் கொடுத்து வைத்தார் என்று வைத்துக்கொள்வோம்) என்றும் இருவரும் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தது. அதை மறுக்க முடியுமா?

இறந்தவர்களின் தவறுகளை மறக்கலாமே ஒழிய, மன்னிக்க முடியாது. அமைச்சரே நீர் அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று சொல்வது அரசியல் கொள்ளையை நியாயப்படுத்தும் முறையாக தெரிகிறது. கமல்ஹாசனை விட்டு விடுங்கள். ரசிகர்கள் கலகம் செய்யக்கூடும். சாருஹாசன் சொல்கிறேன். அம்மா வழியில் தான் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லும்வரை நீங்கள் வருங்கால குற்றவாளிகள் என்று தெரிகிறது. எனக்கு ரசிகர்கள் கிடையாது. ஒரு கலகமும் வராது. நான் உங்கள் அரசை நீதி மன்றத்தில் மட்டும்தான் சந்திப்பேன். என் வீட்டு வாசல் கதவும் நிலையும் லஞ்சம் வாங்கியதில்லை. உங்கள் ஆட்சி தொடுக்கும் வழக்குக்களை சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.

தொடக்கத்தில் கமலின் அரசியல் நுழைவுக்கு எதிரான கருத்துகளைக் கூறியிருந்த சாருஹாசன் இப்போது கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறார் என்பதால் அவரும் கமல் கட்சியில் இணைந்து செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response