பிக்பாஸ் இறுதிநாளில் இதையெல்லாம் செய்திருக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாளில் பிக்பாஸ்ஸின் ‘குரல்’ பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்துவார்கள் என்று ஒரு கணம் ஆர்வமாகத் தோன்றியது. ஆனால் அது வெளிப்படுத்தக்கூடாதது என்கிற சமநிலையும் உடனே வந்தது.

ஏனெனில் அது குரல் மட்டும் அல்ல. அதை ஒரு நபராக கருதிக் கொள்ள வேண்டாம். அதிகாரத்தின் வலிமையான குறியீடு. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 நாவல்தான் இந்த நிகழ்ச்சி உருவாக ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருந்தது என்கிற தகவலின் பின்னணியை உணர்ந்தால் இந்தக் குரலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த ரகசியத்தை நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடாதது. மேலும் அடுத்தடுத்த பாகங்களுக்காக இந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டே தீர வேண்டும்.

சரி, நடைமுறையில் இந்தக் குரலின் பின்னணியைப் புரிந்து கொள்ள முயன்றேன். இது நிச்சயமாக மனிதனின் குரலை, மென்பொருளின் வழியாக மாற்றி இயந்திரக்குரலாக ஆக்கிய விஷயம் என்று யூகிக்கிறேன். ஏனெனில் ஒரே மனிதரே நடைமுறையில் 24 மணிநேரமும் அந்த வீட்டைக் கண்காணித்து உரையாடிக் கொண்டிருக்க முடியாது. இயந்திரக்குரலாக இருந்தாலும் எவர் வேண்டுமானாலும் அல்லது அந்தக் குரலுக்கு நிகரான எவரும் பேசிவிட முடியும். சமயங்களில் அந்தக் குரலில் தெரிந்த நுண்ணிய மாற்றங்களைக் கவனித்திருந்தால் இந்த ரகசியத்தை உணர முடியும். இவையெல்லாம் என் யூகம் மட்டுமே.

இதன் இறுதிநாளில் இதற்குப் பின்னால் உழைத்த நுட்பக்கலைஞர்களைப் பற்றிய அறிமுகத்தை செய்வார்கள் என எதிர்பார்த்தேன். குறிப்பாக எடிட்டிங் டீம். அத்தனை கேமராக்களில் 24 மணி நேரம் பதிவாகும் ஃபுட்டேஜ்களை வைத்து ஒரு மணி நேரத்திற்கான சுவாரசியமான தொகுப்பாக சுருக்குவது என்பது குப்பையில் ஊசிகள் தேடுவதைப் போன்ற uphill task. மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட சர்ச்சையை அல்லது உரையாடலை அதன் தொடர்ச்சியுடன் ஒரு கதையாடலாக உருவாக்கித் தர வேண்டும். எனவே தினமும் ராட்சசதனமாக உழைக்க வேண்டியிருந்த எடிட்டிங் டீமின் முக்கியஸ்தர்களையும் அவர்கள் பணிபுரியும் சில காட்சிகளையும் காண்பித்திருக்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ச்சியாக எழுதியவரின் பதிவு

Leave a Response