ஹீரோவாக இருந்தாலும், இயக்குனராக இருந்தாலும் அவர்களது வாரிசுகளின் குறிக்கோள் என்னவோ நடிகனாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.. அந்தவகையில் அடுத்த வாரிசு ஹீரோவாக களம் இறங்க இருப்பவர் விக்ரம் மகன் துருவ். இவர் முறைப்படி நடனம், சண்டை, நடிப்பு கற்று சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
துருவ் சில குறும்படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். துருவை ஷங்கர் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்கள் மூலமாகத் தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விக்ரம் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் தேவரகண்டா நடித்த கேரக்டரில் துருவ் நடிக்கிறார்.
காதலிலும், படிப்பிலும் தோல்வி அடைந்த ஒருவன் குடிக்கு அடிமையாகி அதிலிருந்து மீள்கிற மாதிரியான கதை. கதை சிம்பிளாக இருந்தாலும் அதன் வியக்க வைக்கும் திரைக்கதை மற்றும் வசனத்தால் பெரிய வெற்றி பெற்ற படம். இதன் ரீமேக் உரிமையாக வாங்க கடும் போட்டி இருந்தது.
தற்போது தமிழ் ரீமேக் உரிமத்தை இ4 என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. தன் மகன் நடிக்கும் விபரத்தை விக்ரம் தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டார். ஹீரோயின், இயக்குனர் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.