
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் நுழைவுத் தேர்வால் தனது மருத்துவர் கனவு தகர்ந்ததால் செப்டம்பர் 1-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பனிரெண்டாம்வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றபோது தான் நிச்சயமாக மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடலாம் என மிகவும் நம்பிக்கையோடும், மகிழ்வோடும் இருந்தார். ஆனால், மருத்துவப் படிப்புக்கு மட்டுமன்றி வாழ்க்கைக்கும் எமனாக வந்து நின்றது நீட் நுழைவுத் தேர்வு.
ஆனாலும் சோர்ந்துவிடாமல் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா,அதில் தோல்வி ஏற்பட்டதாலும் தனக்கு மருத்துவம் படிக்க இடம் இல்லை என்று முடிவாகிவிட்டதாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனிதா தற்கொலை எதிரொலியாக அவருடைய மரணத்துக்கு மரியாதை செய்யும் விதமாக,நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்குக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் வலுத்துக்கொண்டிருக்கின்றன.
அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என எல்லோரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழீழத்திலும் அனிதாவின் மரணத்துக்கு இரங்கல்களும் கண்டனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.
அனிதா மரணம் பற்றி ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் கூறியிருப்பதாவது,,,
தமிழகத்திலிருந்து, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தரும் செய்தி. நீட் பரீட்சையால் அநீதி இழைக்கப்பட்ட மாணவி அனிதா தற்கொலை, இந்திய தமிழக அரசுகள் எடுத்த நரபலி. ஆழ்ந்த இரங்கல். சகோதரியின் ஆத்மா சாந்தி பெறட்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


