ஓவியா உள்ளே இருக்கிறாரா? அல்லது வெளியில் உள்ளாரா?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்கில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திரைப்பட நடிகை ஓவியா நேற்று மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை, அவர் சற்று மனஅழுத்தத்தில் உள்ளதாகவும், அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓவியா உள்ளே இருக்கிறாரா என்று பார்க்க முடியுமா? என்று காவல்துறையினர் கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, நடிகை ஓவியா படப்பிடிப்பு தளத்தில் உள்ளாரா? அல்லது வெளியில் உள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஆரவ் என்பவர் ஓவியாவை காதலிக்கவில்லை என்றும், நட்புடனேயே பழகியதாகவும் கூறியுள்ளார். இதனால் சில நாட்களாக ஓவியா மன அழுத்தத்தில் இருப்பது போலவும், அவருடன் மற்றவர்கள் பேச மறுத்துவருவது போலவும் காட்சிகள் வெளியிடப்பட்டது.

எனவே இந்த மன உளைச்சலில் அவர் ஏதாவது தற்கொலை முயற்சி செய்தாரா? அல்லது ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக ரகளை ஏதும் செய்தாரா? அல்லது யாராவது வதந்தியை பரப்பினார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது.

Leave a Response