
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அங்கு, சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கடந்த புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
அடுத்த ஒரு வாரத்தில் இடைக் கால அறிக்கையும், ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை யும் தாக்கல் செய்ய வேண்டும் என இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக அரசின் உத்தரவையும் மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததால் ரூபா இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சத்தியநாராயண ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சசிகலா பற்றிக் குற்றம் சொன்ன காரணத்தால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது போலச் செய்திகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அரசின் உத்தரவை மீறி ஊடகங்களிடம் பேசியதாலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு ஊழியராக இருந்து கொண்டு அரசு உத்தரவை மீறியதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கர்நாடக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
