ஜூலை 15 இல் காமராசரை மட்டுமல்ல இவரையும் தமிழர்கள் நினைவிற் கொள்ளவேண்டும்

‘தனித் தமிழியக்கத் தந்தை’
மறைமலையடிகளார் பிறந்த நாள்.15.7.1876

1916ஆம் ஆண்டில் நீதிக்கட்சியும், தனித்தமிழ் இயக்கமும் ஒரே கால கட்டத்தில் பிறந்தவை. திராவிட இயக்கங்கள் நீதிக்கட்சியை உயர்த்திச் சொல்லுமளவிற்கு தனித்தமிழ் இயக்கத்தை உயர்த்திச் சொல்வதில்லை. நீதிக்கட்சியினர் பிராமணர்களுக்கு இணையாக பதவி கேட்டுப் போராடினார்கள். ஆனால் பிராமணீய புரோகிதச் சடங்கு மறுப்பு, வைதீக மறுப்பு, வடமொழி எதிர்ப்பு ஆகிய கொள்கை கொண்டவர்களல்ல. தமிழையும், தமிழினத்தையும் தடைக்கற்களாகவே கருதினர்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த சைவ மதமும், தனித்தமிழ் இயக்கமும் நீதிக்கட்சியைப் போல எவற்றோடும் சமரசம் செய்து கொள்ள வில்லை.

1866-க்குப் பின்னர் தோன்றிய ஆரிய சமாஜமும், பிரம்ம சமாஜமும் ஆரியத்தின் வேதாந்தக் கொள்கையை மக்களிடம் பரப்பி வந்தன. அதனை தமிழர்களிடம் பற்றுக் கொள்ள விடாது தடுத்த பெருமை மறைமலையடிகளுக்கே உண்டு.
1905ஆம் ஆண்டில் “சைவ சித்தாந்த மகா சமாஜம்” எனும் அமைப்பை ஞானியார் அடிகளோடு இணைந்து ஏற்படுத்தினார். ஆரிய வேதாந்தத்திற்கு எதிரானது சைவ சித்தாந்தம் என்று பிரகடனப்படுத்தினார். ஆரிய பிராமண மதத்திடமிருந்து தமிழர் மதமாகிய சைவ மதத்தை மீட்டெடுக்க அறை கூவல் விடுத்தார். 1906இல் ஆரியருக்கு தமிழர் கடமைப் பட்டிருக்க வில்லை.என்றும், அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றும், “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்” எனும் நூலில் எழுதினார்.

1913இல் சாதி எதிர்ப்புக் கருத்துகளை வெளிப்படுத்தும் ” சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்” எனும் நூலினை வெளியிட்டார்.
அதில், ” ஐயோ! இந்து மக்களே, ஓ! போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே, நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடாரியாய்ச் சாதி வேற்றுமை இருப்பதுணராது அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதமை” என்றார்.
மேலும் அந்நூலிலே, சாதியின் பேரால் மறுக்கப்படும் காதல் திருமணம் பற்றி கூறுங்கால், ” சாதி வேற்றுமை என்னும் கொடிய தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது” என்றார்.

1916ஆம் ஆண்டில் ஆரியர் எதிர்ப்பில் ஊன்றி நின்ற மறைமலையடிகளார் ஆரியரின் மொழியாகிய வடமொழி எதிர்ப்பில் கவனம் செலுத்தினார். வள்ளலார் பாடல்களில் மனமுருகியவர் அப்பாடலில் ‘தேகம்’ என்னும் வடசொல் இருப்பதை கண்டறிந்தார். பிறகு அதனை ‘யாக்கை’ என்று தனித் தமிழில் மாற்றினார். வடமொழி மிகுதியால் தமிழ் தாழ்வுறுவதைக் காணச் சகிக்காது அன்றே தனித் தமிழ் இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு முதற்படியாக ‘சுவாமி வேதாசலம்’ என்றுள்ள தனது வடமொழிப் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றம் செய்தார்.

1942இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உரை நிகழ்த்திய போது அவரின் தனித் தமிழ்ப்பேச்சு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு படித்த மாணவர்களான நாராயணசாமி- நெடுஞ்செழியன் என்றும், இராமையா- அன்பழகன் என்றும், திருஞானம்- நன்னன் என்றும், கிருஷ்ணன் -நெடுமாறன் என்றும் அழகு தமிழில் பெயர் மாற்றிக் கொண்டனர். தி.க.விலிருந்து பிரிந்த தி.மு.க. மொழி உணர்ச்சியை தனித்தமிழ் இயக்கத்திடமிருந்து தான் கற்றுக் கொண்டது. அதனால் தான் அண்ணா ஆங்கிலத்தை ஆதரித்த நிலையிலும் பெரியாரைப் போல தமிழைப் பழிக்க வில்லை.

1938இல் இராசாசி ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழறிஞர்களுக்கு தலைமை தாங்கி அப்போராட்டத்தை நடத்தினார். அந்தப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை முன் மொழிந்து மறைமலையடிகள் பேசினார். அதை வழி மொழிந்து பேசியவர்கள் ஈ.வெ.இராமசாமி, சோமசுந்த பாரதியார் ஆகியோர் ஆவார். (நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய ‘தி.மு.க.வரலாறு’ எனும் நூலில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.)

மறைமலையடிகள் தமது குடும்பத்தாரையும் தமிழ் காக்கும் போரில் ஈடுபடுத்தவும் தவறவில்லை. மகன்கள் திருநாவுக்கரசு, மாணிக்கவாசகம், மருமகள்கள் ஞானம்மாள் தன் கைக்குழந்தையோடும், சரோஜினி தன் மகனுடோடும் சிறை ஏகினர். மகள் நீலாம்பிகையோ இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

1900ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை விழாக்கள், மாநாடுகள், போராட்டங்கள் எவற்றிலுமே மறைமலையடிகளை தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன.

வடமொழி ஆதிக்கத்திலிருந்து அவர் மீட்டெடுத்த தமிழ்மொழி இன்று அந்நிய மொழிகளான சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்றவற்றுக்கு ஆட்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தமிழுக்குத் தன்னை ஒப்படைத்துப் போராடிய மறைமலையடிகள் வழி நின்று அந்நிய ஆதிக்க மொழிகளை வேரறுக்க இந்நாளில் உறுதியேற்போம்!

Leave a Response