விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்துவதா? – அமைச்சர் கோபம்


தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்து விட்டு அவர்களைப் புகழ்ந்து எழுதிய சிலர் இப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி வருவதாக வடக்குமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதனின் நீந்திக் கடந்த நெருப்பாறு-பூநகரியிலிருந்து புதுமாத்தளன் வரை என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இது எமது இனத்தின் சாபக்கேடாகும். நா.யோகேந்திரநாதனது நீந்திக் கடந்த நெருப்பாறு எமது இனத்தின் ஒரு காலத்தின் சிறந்த பதிவாகவே காணப்படுகின்றது.

இப்படியான படைப்புகள் எமது இனத்தின் வரலாற்றைக் கூறவல்ல சிறந்தவையாகக் காணப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியவர்களாக இருந்து அவர்களது ஆட்சி நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் புகழ்ந்தும் நியாயப்படுத்தியும் எழுதியவர்கள் சிலர் இப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி எழுதிவருகின்றார்கள்.

இப்படியானவர்களால் எமது இனத்திற்கே சாபக்கேடாகும். இப்படியானவர்கள் எந்த மன்னர்கள் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு அவர்களைப் புகழ்பாடி சகலதையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக, அரசவைக் கவிஞர்களாகவே மாறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே காணப்படுகின்றார்கள்.

இவர்களுக்குக் கொள்கை என்பதே கிடையாது. படைப்பாளி நா.யோகேந்திரநாதன் அவர்கள் எவருக்கும் புகழ் பாடி வாழாது உள்ளதை உள்ளபடியே படைக்கின்ற ஒரு சிறந்த எழுத்தாளராக இவரது நீந்திக் கடந்த நெருப்பாறு பாகம் ஒன்றினைப் படித்த போதே அறிந்துகொண்டேன்.

தமிழர்களாகிய எமது வாழ்வியல் சூழலை மையமாக வைத்தே இவரது படைகப்புக்கள் அமைந்து காணப்படுகின்றன.

இவரது படைப்பாற்றல் பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல எமது இனத்தினது முக்கியமான காலத்தின் வரலாற்றினைக் கூறும் பொக்கிசமாகவும் பேணப்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Response