
தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழக உழவர் சங்கங்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கூட்டம் 27-4-2017 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை சேப்பாக்கம், தமிழ்நாடு செய்தியாளர்கள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட போராட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
1.கடந்த 48 ஆண்டு காலமாக நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் போராடிப் பெற்ற உரிமைகளை இம்முடிவு அடியோடு இழக்க செய்யும். காவிரிப் பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் இட்ட ஆணையைச் செல்லாததாக்கவே புதிதாக ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதற்கு மத்திய பா.ச.க. அரசு முற்படுவதையும் காவிரிப் படுகைப் பகுதியில் மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதித்து, அதைப் பாழ்படுத்தத் திட்டமிடுவதையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2.பள்ளிக்கூடங்களில் தொடங்கி, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றம் வரை எங்கும் எதிலும் இந்தி என நிலை நாட்டுவதற்கு பிரதமர் மோடியின் அரசு செய்கிற முயற்சிகள் இந்தி பேசாத பெரும்பான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிக் காட்டி இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
3. மதுரைக்கு அருகே கீழடியில் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர்ப்புற நாகரிகத்தின் தடயங்களைக் கண்டறிந்து, தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்த அகழ்வாராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் மத்திய பா.ச.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது என்பது மூடி மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய அரசு இவ்வாறு செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
4.இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். வைகை ஆற்றின் கரையோரம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர் நாகரிக தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டிருந்த மத்திய தொல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களை தமிழக தொல் ஆராய்ச்சித் துறைக்கு மாற்றும்படி மத்திய அரசை வற்புறுத்திப் பெற்று அவர் தலைமையில் தமிழக அரசே இந்தத் தொல்லாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என வற்புறுத்துகிறது.
5.தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான மேற்கண்டவற்றில் இந்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்து அதன் மூலம் தமிழ் இனப்பகையரசாகத் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளதை கண்டிக்கும் வகையில் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத் திற்கு முன் மே மாதம் 29, 30, 31 ஆகிய நாட்களில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விவரம்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்களின் முன்னணியின் செயலாளர் பொழிலன், வளமான தமிழகம் கட்சியின் தலைவர் சரவணராசன், தமிழர் முன்னணியின் அமைப்பாளர் செயப்பிரகாசு நாராயணன், தமிழர் கூட்டணியின் அமைப்பாளர் பொய்யாமொழி, தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கப் பொதுச் செயலாளர் சிவ. காளிதாசன், தமிழக இளைஞர் முன்னணியின் செயலாளர் க. வெற்றித்தமிழன், தமிழர் எழுச்சிப் பேரவையின் செயலாளர் க. இளங்கோவன், தமிழர் விடுதலைக் கழகச் செயலாளர் செள. சுந்தரமூர்த்தி, மே பதினேழு இயக்கம் சார்பில் பன்னீர், உலகத் தமிழ்க் கழகச் செயலாளர் தா. அன்புவாணன், தமிழக மக்கள் முன்னணியின் செயலாளர் பாவேந்தன், பத்மநாபன், ஓவியர் வீரசந்தானம், புலவர் கி.த. பச்சையப்பன், புலவர் இரத்தினவேலன், ப. இறையெழிலன், முத்தமிழ்மணி, மரு. பாரதிசெல்வன், ஆவல் கணேசன், அயனாபுரம் சி. முருகசேன், அய்யநாதன், கெளதமன், இலாரான்சு, தியாகு, செஞ்சி சாய்ரா, மோ. லில்லிமேரி, ச. கலைச்செல்வம், அ. ஜோசப் ஜெரால்டின், சக்கரவர்த்தி, ஏ. இரமணிகாந்தன், ஆ.சி. சின்னப்பா தமிழர், தமிழ்நெறியன், பவா சமத்துவன்,
நா. சண்முகநாதன், மரு.வ.வே. சரத்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் தமிழர் தமிழக நலன்களுக்காக 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள் பழ.நெடுமாறன் தலைமையில் ஒருங்கிணைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்நிகழ்வு ஆளும் வர்க்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


