என் பாட்டனும், தந்தையும் தொட்டுப் புழங்கிய பொருள் – வெற்றியாளர் வி.கே.டி.பாலனின் நெகிழ்ச்சி

வெற்றியாளர் வி.கே.டி.பாலன் அவர்களைப் பற்றி அறியப்படாத நிகழ்வைத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அருணகிரி. இது தனிமனிதரின் கதை மட்டுமல்ல தமிழினப் பெருவாழ்வைக் கண்முன் நிறுத்தும் ஒரு கதை என்றும் சொல்லலாம்.

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ஒரு தமிழரால் நடத்தப்படுகின்ற பயண நிறுவனங்களுள் சிறந்த இடத்தைப் பெற்று இருக்கின்றது.

அதன் உரிமையாளர் வி.கே.டி. பாலன் அவர்களுடைய வாழ்க்கை, இன்றைய தொழில் முனைவோராகிய இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி ஆகும். இன்று, தமிழக பயண முகவர்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருக்கின்றார். மதுரா டிராவல்ஸ் பயண வழிகாட்டிப் புத்தகம், தமிழகத்தில் அனைத்துப் பயண முகவர்களுக்கும் பயன்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதை ஆண்டுதோறும் தொடர்ந்து புதுப்பித்து வருகின்றார். தமிழகத்திற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுகின்ற வகையில், ஆங்கிலத்திலும் இப்புத்தகம் வெளிவருகின்றது.

ஐயா அவர்களுடைய தொடக்க கால வாழ்க்கை, இன்றைய இளைஞர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம். சிறு குறிப்பாக இங்கே தருகிறேன்.

ஐயா பாலன் அவர்கள், எழுபதுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்த நாளில் அவருக்கு இங்கே யாரையும் தெரியாது. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் கூட்டத்தோடு படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். இரவு நேரக் காவலர்கள் வந்து தட்டி எழுப்பினர். காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அச்சத்தோடு நடுங்கியவாறு நின்றுகொண்டு இருந்தார்.

திடீரென அவருடன் நின்று கொண்டு இருந்த மற்றொருவர் ஓட்டம் பிடித்தார். பாலனும் ஓடத் தொடங்கினார். காவலர்கள் விடவில்லை. விரட்டிக் கொண்டே வந்தனர்.

எங்கே? அண்ணா சாலை தேவி திரையரங்கம் வரையிலும் விரட்டிக்கொண்டே வந்தனர். அதன்பிறகு அவர்களைக் காணவில்லை.

பாலன் ஐயா அப்படியே நடந்து செல்கிறார். ஒரு இடத்தில் நடைமேடையில் பலர் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்தோடு இவரும் சேர்ந்து கொள்கிறார். காலையில் அவரை ஒருவர் தட்டி எழுப்புகிறார்.

தம்பி, இந்த இடத்தை எனக்கு விட்டுக் கொடு. உனக்கு இரண்டு ரூபாய் தருகிறேன் என்கிறார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை. சரி: இரண்டு ரூபாய் கிடைக்கிறதே என்று வாங்கிக் கொண்டு நகர்கிறார். மறுநாளும் அதே இடத்தில் வந்து படுத்துக் கொள்கிறார். அடுத்த நாள் காலையில் மற்றொருவர் வந்து பணம் தருகிறார். இதே வழக்கமாக ஆயிற்று.

அப்படி அவர் படுத்துக் கிடந்த இடம், அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அமைந்து உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக உள்ள நடைமேடை.

அந்த நாள்களில் அமெரிக்கா செல்ல விரும்புபவர்கள், முதல் நாள் இரவே அங்கே வந்து படுத்துக் கிடப்பார்கள். அந்த வரிசையில்தான் பாலன் ஐயா படுத்துக் கிடந்து இருக்கின்றார். அதுவே அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக ஆயிற்று.

நாள்தோறும் இவர் இப்படிப் படுத்து இடம் பிடிப்பதைப் பார்த்த ஒரு பயண முகவர், தம்பி நான் ஐந்து ரூபாய் தருகிறேன். நீ தினமும் இங்கே படுத்துக் கொள். பகலில் என் அலுவலகத்திற்கு வந்து வேலை பார் என்று சொல்லி இருக்கின்றார். உணவும் கிடைத்தது. இதற்கு இடையில் ஆறு மாதங்களாக மாற்றுச் சட்டை கூடக் கிடையாது. ஒரே சட்டைதான்.

பிறகு அந்தப் பயண முகவர் அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். படிப்படியாக சுற்றுலாத் தொழிலின் விவரங்கள் அவருக்குப் புரிந்தன. எண்பதுகளின் தொடக்கத்தில் தனியாகவே மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்குத் தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கின்றார்.

என்னை அண்ணா சாலை வரையிலும் விரட்டிக் கொண்டு வந்த அந்தக் காவல்காரருக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன் என்று சொல்லுவார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா பாலன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றேன். அடிக்கடி சந்திக்கின்றேன். கடந்த சனிக்கிழமை அன்று அவரது அலுவலகத்திற்குச் சென்று இருந்தபோது, நுழைவாயிலில் புதிய பெட்டி ஒன்று கண்ணைக் கவர்ந்தது. அதைப் பற்றி அவரிடம் கேட்டேன்.

பெட்டியின் கதையைக் கூறினார்:

என் சொந்த ஊர் திருச்செந்தூர் கிராமம். இப்போது அது சற்றுப் பெரிய ஊர். என் தாத்தா பெயர் வீர சங்கிலி. அப்பா பெயர் கண்ணையா. இந்தப் பெட்டி ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரைச் சொத்து. எங்கள் முன்னோரிடம் இருந்து என் தாத்தாவுக்குக் கிடைத்தது.

எங்கள் வீடு என்பது ஒரு சிறிய குடிசை வீடுதான். எனவே, பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு வசதியும் கிடையாது. அதற்காகத்தான் இந்தப் பெட்டி பயன்பட்டது. அப்போது பெரும்பாலும் எல்லாக் குடிசை வீடுகளிலும் இப்படி ஒரு பெட்டகம் உண்டு. பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் செல்லும்போது, இதில் கம்பைச் சொருகி, இரண்டு பேர் தூளில் தூக்கிக் கொண்டு செல்வார்கள். அப்படி ஊர் ஊராகச் செல்வார்கள். இந்தப் பெட்டியில் காசு, பணம் எல்லாம் பெரிதாக இருக்காது. அப்போது வீட்டில் உயர்ந்த பொருட்களாக இருந்த பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள்தான் இருக்கும். இந்தப் பெட்டியை வைத்து இருப்பவர்கள், சாவியைத் தங்களிடமே வைத்து இருப்பார்கள். வேறு எவரிடமும் தர மாட்டார்கள். அவ்வப்போது தாத்தா திறந்து பார்த்து விட்டு மூடி விடுவார். உள்ளே என்ன இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது.

என் தாத்தா என் தந்தையிடம் கொடுத்தார். அவர் என்னிடம் கொடுத்தார். 1975 ஆம் ஆண்டுதான் முதன்முறையாக நான் திறந்து பார்த்தேன். பஞ்சமுக பித்தளை விளக்கு, பெரிய பித்தளைச் சட்டிகள், செம்புப் பாத்திரங்களுடன், கடிதக் கொத்து, வங்கிக் கணக்குப் புத்தகம் ஒன்றும் இருந்தது. என் அப்பா, தாத்தாவுக்கு எழுதிய கடிதம்; உறவினர்கள் எழுதிய கடிதங்கள் எல்லாம் இருந்தன.

என் வாழ்க்கைச் சூழ்நிலையால் நான் சென்னைக்குப் பிழைக்கப் போகலாம் என்று புறப்பட்டேன். அப்போது என் பெரியப்பாவிடம் இந்தப் பெட்டியைக் கொடுத்து விட்டு வந்தேன். ‘பின்னால் வந்து எடுத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். என் வீட்டையும் பெரியப்பா மகனிடமே விற்றேன்; வயலை மற்றொரு அண்ணனுக்கு விற்றேன். அந்தப் பணத்தில் என் தந்தைக்கு ஒரு சமாதி கட்டினேன்.

சென்னைக்கு வந்தபிறகு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்ற வரையிலும், பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஊர்ப் பக்கமே போகவில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை.

கொஞ்சம் வசதி வந்த பிறகு, 1990 ஆம் ஆண்டில்தான் திருச்செந்தூர் கோவிலுக்குப் போய்ப் பார்த்து விட்டு வருவோம் என்று புறப்பட்டுப் போனேன். பெட்டி நினைவுக்கு வந்தது. அதை அண்ணனிடம் கேட்டுப் பார்ப்போம் என்று போனேன். அவன் ஒரு போலீஸ்காரன்.

‘என்னைப் பார்த்தவுடன், ஏலே நீ உயிரோடதான் இருக்கியா. இங்க எல்லாரும் நீ செத்துப் போயிட்டேன்னுல்ல நெனச்சுக்கிட்டிருக்கோம். இப்ப எதுக்குலே வந்தே? என்றான். அவன் எப்போதும் அப்படித்தான் பேசுவான்.

‘என் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போகலாமுன்னு வந்தேன்’ என்றேன்.

‘பெட்டி கிட்டின்னு பேசினே, கொன்னு புதைச்சுப்புடுவேன். நீ வீட்டைக் குடுத்துட்டுப் போகும்போதே அதையும் சேர்த்துத்தான் குடுத்துட்டுப் போனே. அது எங்க பெட்டி. நீ வீட்டுக்கு உள்ளேயே வராத. இப்படியே போயிரு’ என்றான். நான் திரும்பி வந்து விட்டேன்.

பிறகு கொஞ்சம் வசதிகள் வந்தபோது, அடிக்கடி ஊருக்குப் போய் வந்தேன். அப்பா சமாதிக்குப் போவேன். ஓட்டலில் தங்குவேன். சொந்தக்காரர்கள் 100, 150 பேர் வந்து பார்ப்பார்கள். மூன்று நாள்கள் இருப்பேன். எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன். ஏதாவது உதவிகள் செய்வேன். கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனாலும், அந்தப் பெட்டியைப் பற்றியே கவலையாக இருந்தது. அதை எப்படி அவனிடம் இருந்து வாங்குவது? பலமுறை கேட்டுக் கேட்டுப் பார்த்தேன். சொந்தக்காரங்க மூலமாகவும் பஞ்சாயத்து வைத்துப் பார்த்தேன். ஒரே வார்த்தை, ‘அவனைக் கொன்னு புதைச்சுருவேன்’ இப்படித்தான் சொல்லிக்கிட்டே இருந்தான்.

ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் இறந்து போனான். அடுத்து எங்கள் அண்ணியிடம் போய்க் கேட்டு வாங்கி விடலாம் என்று போனேன். அவர்,‘எந்தப் பெட்டி?’ என்று கேட்டார். என்னை வீட்டுக்கு உள்ளே வா என்று சொல்லவில்லை. உள்ளே போனால் அந்தப் பெட்டியைப் பார்த்து விடுவேன் என்பதால் கூப்பிடவே இல்லை. அண்ணன் பிள்ளைகளிடமும் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் இல்லை என்றே சொன்னார்கள். அப்புறம்தான் கேள்விப்பட்டேன். மகளைத் திருமணம் செய்து கொடுத்தபோது, இந்தப் பெட்டிக்கு உள்ளே இருந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து, அதில் இருந்த என் அப்பா, அம்மா பெயர்களை எல்லாம் அழித்து விட்டுத் தன் பெயரைப் பொறித்துக் கொண்டான். நல்லா பாலிஷ் போட்டு, பொண்ணுக்குச் சீதனமாகக் கொடுத்து விட்டான் என்பதை அறிந்தேன்.

இப்போது பெட்டியை என்னிடம் கொடுத்தால், உள்ளே இருந்த பாத்திரங்கள், விளக்கு எல்லாவற்றையும் நான் கேட்டு விடுவேன் என்பதால்தான் அவன் இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். குடும்பமே சேர்த்து மறைத்து விட்டது.

எனக்கு விவரம் தெரிய வந்தபோது, ‘கடைசியில் நான் போலீஸ்
ஸ்டேசனில் புகார் கொடுக்கப் போகிறேன். பிரச்சினை அங்கே சென்றால், பெட்டிக்கு உள்ளே இருந்த பாத்திரங்கள் எல்லாவற்றையும் தர வேண்டியது இருக்கும். அவளும் என் மகள்தான். எனக்கு அந்தப் பாத்திரங்கள் எல்லாம் வேண்டாம். பெட்டியையும், அதில் இருந்து கடிதங்களையும் மட்டும் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

இப்படிச் சொன்னபிறகு, இன்னொரு அண்ணன் மகன் வந்து சண்டை போட்டு வாங்கித் தந்தான். கடிதங்களையும் கொடுத்து விட்டார்கள. சின்னச் சின்னத் தாள்களில் எழுதப்பட்ட குறிப்புகள், இன்லேண்ட் கவர்கள், போஸ்ட் கார்டுகள், சில பத்திரங்கள் எல்லாம் இருந்தன.

‘ஆடைப் பார்த்துக்கோடா, வயலைப் பார்த்துக்கோடா, வரப்பு இப்படி இருக்கணும்டா, அவன் நெல்லுப் பணம் தரலையேடா, அவனுக்குக் கொடுக்க வேண்டிய காசை நீ கொடுத்துட்டியாடா’ என இப்படி ஒரு கிராமத்திற்குள் நடக்கின்ற சர்ச்சைகள் விசாரணைகள்தாம் அந்தக் கடிதங்களில் அடங்கி இருக்கின்றன. அதை எல்லாம் படித்துப் பார்த்தேன். ஏதோ ஒரு புதையல் கிடைத்தது போல இருந்தது.

ஆனால், பெட்டியின் ஒரு கால் உடைந்து போயிருந்தது. அதற்கு செங்கல்லை அடுக்கி வைத்து இருந்தார்கள். பெட்டி மிகவும் பழையதாக, கருப்பாக ஆகி விட்டது. பல துண்டுகளாக உடைந்து போய்க் கிடந்தது. அதை அப்படியே அள்ளிச் சென்னைக்கு எடுத்துக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்தவர்கள், இதைப் போய்த் தூக்கிக் கொண்டு வந்து இருக்கின்றானே என்று நினைத்தார்கள். ஆனால், அது வெறும் பெட்டி அல்ல. எனக்கு அது ஒரு கருñலம். பரம்பரைச் சொத்து. என் பாட்டனும், என் தந்தையும் தொட்டுப் புழங்கிய ஒரு பொருள் அது. அது வெறும் பலகை என்று நான் தூக்கி வீசிவிட முடியாது. அதை நான் தொடும்போதெல்லாம் அவர்களைத் தொடுவதாக நினைத்துக் கொள்வேன்.

ஒரு தச்சு ஆசாரியை அழைத்து, பெட்டியைப் புதுப்பித்துத் தரச் சொன்னேன். அவன் இப்படி உருவாக்கிக் கொடுத்தான். இதை என் குடும்பச் சொத்தாக என் மகனுக்குக் கொடுத்து இருக்கின்றேன். இதற்குள் என் குடும்ப ஆவணங்களோடு, இன்னொன்றையும் சேர்த்து வைத்து இருக்கின்றேன்.

அது என்ன தெரியுமா?

டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு வந்து எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, சோறு தண்ணி இல்லாமல் அலைந்த நாள்களில் ஒரு மன நோயாளியாகத்தான் வாழ்ந்தேன். தாடி வளர்ந்து இருந்தது. மழிக்கக் காசு கிடையாது. பசியும் தெரியாது. நடைமேடைகளில்தான் படுத்துக் கிடந்தேன். ஆறு மாதங்கள் வரையிலும் ஒரே சட்டைதான். அதுவும் ஆயிரம் கிழிசல்களோடு. அந்தச் சட்டையைத்தான், இப்போது இந்தப் பெட்டிக்குள் வைத்து இருக்கின்றேன்.

அதுதான் நான் மகனுக்குக் கொடுக்கின்ற சொத்து!

Leave a Response