
மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….
ஒன்றிய பாஜக அரசின் நீட்தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும்,தமிழகத்தில் தொடரும் நீட்தேர்வு தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட்தேர்வை முற்றிலுமாக இரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் போராட்டம் நடைபெற்றது.
இந்தப்போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை ஒன்றுசேரவிடாமல் ஆங்காங்கே கைது செய்தும், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியும் தமிழக காவல்துறையினர் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சனநாயக விரோத நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
காவல் துறையினர் நடத்திய இந்தக் கொடூரதாக்குதலில் ஒரு மாணவரின் தோள்பட்டை இறங்கியுள்ளது.அதைவிட அநாகரீகமாக மாணவிகளை ஆண்காவலர்கள் தகாதமுறையில் ஆடையைப் பிடித்து இழுத்தும்,தள்ளியும், அடித்தும் கைது செய்துள்ளனர்.மேலும் சட்டத்திற்குப் புறம்பாக காவலர்கள் தங்களது சீருடையில் பெயர் வில்லைகளை அணியாமல் தங்களின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சனநாயக உரிமைகளைக் காலில்போட்டு மிதிக்கும்வகையில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்திய சட்டங்கள் படியும் (பி.என்.எஸ்.தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல் படியும்) இவை குற்றங்களாகும்.மேலும்,அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் கண்ணியத்துக்கு எதிரானதாகும்.
எனவே,நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு,மாணவியர்களை தகாதமுறையில் நடத்திய ஆண் காவலர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்,சனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு உரியமுறையில் அனுமதி வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழகஅரசை வலியுறுத்துகிறது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


