நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்க – ஒன்றிய அரசுக்கு விஜய் கோரிக்கை

முதல்வர் விஜய் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தேசியத் தேர்வு முகமை மூலம் தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி 2026),கடந்த மே மாதம் 3 ஆம் தேதி 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. 1.4 இலட்சம் தமிழக மாணவ, மாணவியர் உள்பட 22 இலட்சத்து 5 ஆயிரத்து 35 மாணவ மாணவியர் இத்தேர்வில் பங்கேற்றனர்.

வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை இரத்து செய்துள்ளது.

மேலும்,இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த இரத்து நடவடிக்கை,நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு மாணவ மாணவியரின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில்,முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவின் சீர்திருத்தப் பரிந்துரைகளை மீறி,இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு,நீட்தேர்வும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும்,கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே,தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது.நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள்,அரசுப் பள்ளிகள், தமிழ்வழிப் பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக,பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே,தமிழ்நாடு அரசின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்யவும், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயூஷ் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response