மேற்குவங்கத் தேர்தல் முடிவுகள் – விவரம்

ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில்,பாஜக 207 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது.ஆளும் திரிணாமுல் காங்கிரசு 80 இடங்களைக் கைப்பற்றி தோல்வி அடைந்தது.

அங்கு வாக்குப்பதிவில் வரலாறு காணாத வகையில் 92.17 விழுக்காடு ஓட்டுகள் பதிவாகின. நேற்று காலை எட்டுமணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பால்டா தொகுதியில் முறைகேடு குற்றச்சாட்டால் வரும் 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

முதலில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரசு, பாஜக இடையே கடும்போட்டி நிலவிய நிலையில், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கிய முதல்சுற்றில் இருந்தே பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது.

பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசு பின்னடைவைச் சந்தித்தது.முதலமைச்சர் உள்ளிட்ட 23 அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தனர்.

இதனால், பகல் 12 மணி அளவிலேயே பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களை பாஜக தாண்டியது. தொடர்ந்து முன்னிலை பெற்ற பாஜக இறுதியில், 207 தொகுதிகளில் வென்றது.

திரிணாமுல் காங்கிரசு 80 இடங்களையும், காங்கிரசு 2, ஹூமாயூன் கபீர் தலைமையிலான ஏஜேயுபி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஏஐஎஸ்எப் ஆகியன தலா 1 இடங்களில் வெற்றி பெற்றன. அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் 12 தொகுதிகளில் போட்டியிட்டு பல இடங்களில் 5 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

காங்கிரசிலிருந்து பிரிந்து 1998 இல் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியை மம்தா பானர்ஜி நிறுவினார். அதன்பின்,2001, 2006 ஆம் ஆண்டுகளில் 2 சட்டப்பேரவைத் தேர்தல்களைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரசு 2011 இல்
முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்புக் கோட்டையைத் தகர்த்து முதலமைச்சராகப் பதவியேற்ற மம்தா பானர்ஜி 2016, 2021 ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்றார். இம்முறை 4 ஆவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய திரிணாமுல் காங்கிரசு தோல்வி அடைந்ததால் மம்தாவின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி – பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி நேருக்குநேர் போட்டியிட்ட பவானிபூரில் கடும்போட்டி நிலவியது.முதல்சுற்று முடிவில் மம்தா 1,996 வாக்குகள் முன்னிலை பெற்ற நிலையில்,2 ஆவது சுற்றில் சுவேந்து அதிகாரி 1,558 வாக்குகள் முந்தினார்.பின்னர் 3 ஆவது சுற்றில் மீண்டும் முன்னிலைக்கு மாறிய மம்தா தொடர்ந்து முன்னிலை வகித்தார்.14 ஆவது சுற்று முடிவில் மம்தா 48,671 வாக்குகளுடன் 3,830 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் 16 ஆவது சுற்று முடிவில் சுவேந்து 554 வாக்குகள் முன்னிலை பெற்றார். 18 ஆவது சுற்று முடிவில் 11,000 வாக்குகள் முன்னிலை பெற்ற சுவேந்து, 20 ஆவது மற்றும் கடைசி சுற்றில் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,முதலமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இதில்,பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு வரையிலும் மேற்குவங்கத்தில் ஒற்றை இலக்கில் மட்டுமே வென்று வந்த பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.அடுத்த 5 ஆண்டுகளில் இம்முறை 206 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மேற்குவங்கத்தில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது.

பாஜகவின் வாக்கு விழுக்காடு 2021 இல் 38 விழுக்காடாக இருந்த நிலையில் இம்முறை 45 விழுக்காடாக அதிகரித்தது. திரிணாமுல் காங்கிரசின் வாக்கு விழுக்காடு 48 இல் இருந்து 40.94 விழுக்காடாகச் சரிவடைந்தது.

வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் சிலர் காளிகட் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் மம்தா வீட்டின் முன்பாக குவிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

பாஜக அமோக வெற்றி பெற்றததைத் தொடர்ந்து மேற்குவங்கம் முழுவதும் உள்ள திரிணாமுல் காங்கிரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள், தோரணங்கள் ஆகியவை நேற்று சூறையாடப்பட்டன.

பாஜக குறிப்பிடத்தக்க இடங்களில் முன்னிலை பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாருய்பூர்,கூச் பெஹாரில் உள்ள துபான்கஞ்ச்,வடக்கு 24 பர்கனாசில் உள்ள பானிஹாட்டி ஆகிய இடங்களில் தங்கள் அலுவலகங்களுக்கு வெளியே சமூகவிரோதிகள் குவிந்து சூறையாடியதாக திரிணாமுல் காங்கிரசு தொண்டர்கள் குற்றம்சாட்டினர்.அங்கிருந்த மம்தாபானர்ஜி, அபிஷேக்பானர்ஜி உள்ளிட்ட கட்சித்தலைவர்களின் படங்கள் கிழித்துத் தரையில் வீசப்பட்டன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response