திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? – தியாகு விளக்கம்

7-4-2026 செவ்வாய் காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி அணுகவேண்டும்? யாரைத் தோற்கடிப்பது? யாருக்கு வாக்களிப்பது? ஆகியவை குறித்த தமது நிலைப்பாட்டை, தமிழ்மக்கள் உரிமை முன்னணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, ஐந்திணை மக்கள் கட்சி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாகத் தெரிவித்தன.

பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றோர்…

தியாகு, தமிழ்மக்கள் உரிமை முன்னணி,
மணி, மாநில அமைப்பாளர்,பாட்டாளி வர்க்க சமரன் அணி,
செந்தில்.ஒருங்கிணைப்பாளர்,தமிழ்த்தேச மக்கள் முன்னனி
திருச்சி செழியன்,மாநிலச் செயலாளர்,மக்கள் அதிகாரம்
சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
மதியவன் இரும்பொறை,மாநில அமைப்பாளர், தமிழ்மக்கள் உரிமை முன்னணி
ரமணி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தெய்வீகன்,மாநில இணைச்செயலாளர்,மக்கள் அதிகாரம்.

இச்சந்திப்பில் மேற்சொன்ன அமைப்புகளின் சார்பாக பின்வரும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்…

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது.ஆனால்,இந்தத் தேர்தலை ஒரு சட்டப்பேரவைக்கான தேர்தலாக மட்டும் கருதிவிடக்கூடாது என்பதுதான் முதற்பெரும் எச்சரிக்கையாகும்.

ஒன்றியஅரசில் கடந்த 12 ஆண்டுகளாக பாசக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.ஒரே தேசம்,ஒரே, மதம்,ஒரே மொழி,ஒரே சந்தை என்ற நோக்கில் இந்து,இந்தி,இந்துராஷ்டிரம் என்ற திசையில் இந்நாட்டை இழுத்துச் செல்கிறது.அம்பானி – அதானி ஆகிய இருபெரும் மேற்கு இந்திய கார்ப்பரேட்டுகளும் மோடி – அமித்ஷா ஆகிய இருவரும் உள்ளடங்கிய ஒரு சிறுகும்பலின் ஆட்சியாக இவ்வாட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம், நீதித் துறை, ஊடகம் ஆர்.பி.ஐ. நிதி ஆயோக், நிதி ஆணையம், அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ, அமைச்சரவை, மாநிலங்களவை, மக்களவை, நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற சனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டு தலைமை அமைச்சர் அலுவலகத்தில் அதிகாரம் குவிக்கப்படுகின்றன,

ஒற்றையாட்சியை நிறுவும் நோக்கில் அரைகுறைக் கூட்டாட்சி ஒழித்துக்கட்டப்படுகிறது.

அதானி – அம்பானி ஆகிய இரு பெருங்குழுமங்களின் ஏகபோகம் தலைவிரித்தாடுகிறது.மோடி அரசு அமெரிக்க வல்லரசிய அடிவருடி நிலை எடுத்து இந்நாட்டை அடகு வைப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது.இதனால் உள்நாட்டு சிறுகுறு தொழில்கள் காணாமல் போகின்ற்ன;உழவர்கள் ஓட்டாண்டி ஆக்கப்பட்டிருக்கிறார்கள்; வேலையில்லாத் திண்டாட்டமும் தகுதிக்கு ஏற்ற வேலையில்லாமையும் அதிகரித்து வருகிறது; தங்குதடையற்ற கனிமவளக் கொள்ளை, சூழலியல் பாதிப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன.

இசுலாமியர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களாக்கப்பட்டு இனவழிப்புக்கு உள்ளாக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றனர்.நடைமுறையில் (de facto) பாசிச இந்துராஷ்டிர அரசவடிவம் எடுத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாசகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து பரப்புரை செய்தோம்.பாசகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆயினும் அடுத்தடுத்து நடைபெற்ற மராட்டியம்,தில்லி,அரியானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி வாகைசூடி மோடி – அமித்ஷா தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

உக்ரைன்,பாலத்தீனம்,வெனிசுலா,ஈரான்,அமெரிக்க வல்லரசின் சதிராட்டம் உள்ளிட்ட பன்னாட்டுச் சிக்கல்களில் மோடி அரசு எடுத்து வரும் நிலைப்பாடுகள் உலகஅமைதிக்கே பெருங்கேடு செய்யும் விளைவு கொண்டவை. இந்துத்துவம் உள்நாட்டுக் கொள்கையில் மட்டுமின்றி அயலுறவுக் கொள்கையிலும் நெறி கொன்று வெறித் தாண்டவம் ஆடுகிறது.உலகம் அணுவாய்தங்கொண்ட ஒரு பேரழிவுப் போரை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்குமானால் அந்த வீழ்ச்சியை விரைவுபடுத்துவதில் மோடி தலைமையிலான இந்துத்துவ அரசும் பங்காற்றி வருகிறது.மோடி ஆட்சி தொடரக்கூடாது எனபதற்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணம்.

இந்நிலையில்தான்,தமிழ்நாடு,மேற்குவங்கம்,கேரளம்,புதுச்சேரி,அசாம் ஆகிய ஐந்து மாநிலங்கள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

மாநிலஅரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இனங்கள் மாநிலப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளன.அதிலும்கூட வெறும் 19 இனங்களில்தான் மாநிலஅரசுக்கு முழு இறைமை உண்டு.

பாசக தனித்தோ அல்லது கூட்டணிக் கட்சிகளுடனோ ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதாவது அவர்களின் கூற்றுப்படி டபுள் இன்ஜின் அரசாங்கங்களில் மாநில அதிகாரமும் பாசகவின் கைக்குப் போய்விடுகின்றன.அதனால் விளைந்த் கேடுகளை உத்தரபிரதேசத்திலும் மணிப்பூரிலும் குஜராத்திலும் காசுமீரத்திலும் கண்டோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித் ஷா சிறுகும்பலாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பாடாற்றிய சனநாயக ஆற்றல்களும்கூட நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொருத்தமான நிலைப்பாடு எடுக்கவும் அதன் பொருட்டு செயல்படவும் தயங்குவதையும் மயங்குவதையும் கண்டு வருகிறோம். சட்டப்பேரவைத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் அதாவது மாநிலஅரசையும் ஒன்றிய அரசையும் முற்றிலும் தொடர்பற்ற ஒன்றாகப் பார்க்கும் கண்ணோட்டம் இது.

ஒரு சாரார் ஒன்றிய அரசுக்கு இந்நாட்டின் அரசியல் பொருளியல் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பாத்திரம் இல்லை என்பது போலவும் மாநிலஅரசே முழுஅதிகாரம் படைத்த அரசென்றும் கருதுகின்றனர்.இதனால்,மாநிலஅரசுக்கான தேர்தலை அணுகுவதில் ஆட்சியில் இருக்கும் திமுகவை மையமிட்டு சிந்தித்து முடிவு எடுக்கின்றனர்.இன்னொரு சாராரோ,மாநிலஅரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை,ஒன்றிய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் இருக்கிறது.எனவே,மாநில சட்டப்பேரவைக்காக நடைபெறும் தேர்தலில் ஏனோ தானோ என்று முடிவு எடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

பாசகவோ மாநிலத் தேர்தல்களை ஒன்றிய அரசதிகாரத்தில் இருந்து துண்டித்த ஒன்றாகக் கருதுவதில்லை. மாநிலங்களின் அதிகாரத்தை மென்மேலும் பறிப்பதன் வழியாகவும் மாநில சட்டப்பேரவைகளைக் கைப்பற்றுவதன் மூலமாகவும் பாசிச அதிகாரத்தை ஆழ ஊன்றச் செய்து,விரிவாக்கி,உறுதியாக்குவதற்கான களமாக சட்டப்பேரவை தேர்தல்களைப் பாவிக்கிறது.இதனை முழுமையாகப் புரிந்துகொண்டு பாசிச எதிர்ப்பு நோக்கில் ஒவ்வொரு தேர்தலையும் அணுகவேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாசக வெற்றி பெறுவது என்பது பாசிச பாசக அரசை மேலும் வலுப்படுத்த உதவுமே ஒழிய தமிழ்நாட்டு மக்களின் சன்நாயகத்திற்கு உதவப்போவதே இல்லை;ஒரே தேசம்,ஒரே தேர்தல்,ஒரே கட்சி என்ற பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்குத் வழிவகுக்கும்;வடமாநிலங்களில் பாசக ஆளும் மாநிலங்களில் நடக்கும் இசுலாமிய வெறுப்பு அரசியல் – புல்டோசர் ராஜ்ஜியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்நாட்டிலும் அரங்கேறும்.

பாசிச பாசக – அதிமுக –கூட்டணியின் ஆட்சி அமைவது என்பது பாசிச ஆட்சியை வலுப்படுத்திவிடும் என்பதே முதற்பெரும் கவலையாகும்.

திமுக ஆட்சி தொடரவேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல இந்தத் தேர்தலின் மையக் கேள்வி.இந்தத் தேர்தலின் மையக்கேள்வி என்பது பாசிச பாசக – அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதா? கூடாதா? அல்லது பாசிசம் வலுப்பெறுவதா? வலுக்குன்றுவதா? என்பதே ஆகும்.இந்தத் தேர்தலில் நமது முதல் பெரும் அறைகூவல் என்பது பாசிச பாசக – அதிமுக கூட்டணி நேரடியாகவோ மறைமுகமாகவோ தனித்தோ கூட்டாகவோ ஆட்சியில் பங்குபெற்றுவிடக் கூடாது என்பதால் அக்கூட்டணி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.

யாருக்கு வாக்களிப்பது? என்பது எது சரியான கொள்கை உடைய அணி,எது சமரசமற்ற அணி என்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை.சமரசப் போக்குடன் குறைந்தபட்ச பாசிச எதிர்ப்புக் கொண்ட அணிதான் வலிமையாக இருக்கிறது என்றால் அதைத்தான் ஆதரித்தாக வேண்டும் என்ற கள யதார்த்ததில் இருக்கிறோம்.அவ்வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் பாசக அணியைத் தோற்கடிக்கும் வலிமையைக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியின் மீது பல்வேறு திறனாய்வுகள் இருப்பினும் பாசிச பாசக – அதிமுக அணியைத் தோற்கடித்து மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திமுக அணியைத் தவிர்த்த பிறிதொரு வலிமையும் குறைந்தபட்ச பாசிச எதிர்ப்புக் கொள்கையும் கொண்ட அணி களத்தில் இல்லை என்பதால் பாசிசத்திற்கு வழிவகுத்த அரசியல் பொருளியல் கொள்கைகளைக் கொண்ட காங்கிரசு – திமுக அணியை ஆதரிக்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு மக்கள் இருக்கிறார்கள்.

திமுக – காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாசிச எதிர்ப்பு செயலுத்தி,போராட்ட உத்திகளை வகுப்பதில் குழப்பத்தையும் கொள்கைத் தெளிவின்மையையும் வெளிப்படுத்தி வருகின்றன.பாசகவை தோற்கடிப்பதற்கு அடுத்த மக்களவைத் தேர்தல்வரை காத்திருப்போம் என்று இருக்கிறார்கள்.பாசிச எதிர்ப்பு அடிப்படையில் எதிர்க்கட்சிகள் தமக்கிடையிலான குறைந்தபட்ச பொதுத்திட்டம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள மறுக்கின்றன.இவ்வளவு நெருக்கடிக்குப் பின்பும்கூட தொகுதிப் பங்கீடு என்ற அளவிலேயே கூட்டணி பேணப்படுகிறது.வெகுமக்கள் முன்பு பாசிச எதிர்ப்புப் பொதுத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டிய கடமையைப் புறந்தள்ளுகின்றன.குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தம்மைக் கொள்கைக் கூட்டணி என்று அறிவித்துக் கொள்ளும் அதேவேளையில் ஒரு பொது வேலைத்திட்டத்தை மக்களிடம் முன் வைக்காமல் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இனியாவது அத்தகைய குறைந்தபட்ச வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கி, ம்ககளிடம் முன் வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசகவையும் ஏனைய கட்சிகளையும் சமப்படுத்துவது பாசிச பாசகவுக்குச் சேவை செய்யக்கூடிய போக்காகும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.அவ்வகையில் பாசகவையும் ஏனைய கட்சிகளையும் சமப்படுத்தும் தவெக,நாதக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு பாசக எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் நிலைப்பாடு ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களின் முதன்மை இலக்கு என்ன?

தமிழ்நாட்டில் பாசகவின் இருப்புக்கு மிக முக்கிய அளவுகோலாக இருப்பது சட்டப்பேவையில் அவர்களின் இருப்பாகும்.இன்றளவில் அவர்களில் 4 பேர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருக்கிறார்கள்.பாசகவின் இடங்கள் 4 இல் இருந்து உயரப்போகிறதா? குறையப்போகிறதா? என்பது பாசிச எதிர்ப்பு நோக்கு நிலையில் முகன்மையான கேள்வியாகும்.

தமிழ்நாட்டு மக்கள் பாசகவினருக்கு சட்டப்பேரவைக்குள் இடம் கொடுக்கவில்லை,முழுவதுமாக கதவடைத்துவிட்டார்கள் என்ற தேர்தல் முடிவை அடைவதுதான் பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்களின் முதன்மை இலக்காக இருக்கவேண்டும்.

ஆகவே,நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் பாசிச எதிர்ப்புப் போராட்டக் களத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இதன் முடிவுகள் பாசிச எதிர்ப்புக் களத்தின் அடுத்தடுத்த போராட்டக் களங்களைத் தீர்மானிக்க வல்லவை என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

பாசிச பாசக – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம்!!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response