பியூஸ்கோயல் சென்னை வருகிறார் எடப்பாடி தில்லி செல்கிறார் – கூட்டணியில் பெரும் குழப்பம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில்,ஒருபுறம் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இதற்குப் போட்டியாக, தேசிய சனநாயகக் கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்கான நகர்வுகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி ஓராண்டுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட நிலையில்,இன்னமும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ஏற்கெனவே இருமுறை சென்னைக்கு வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தினார். கூட்டணி கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இருப்பினும், பாஜக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், அதிமுக ஒதுக்க முன்வந்த இடங்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. குறிப்பாக, பாஜக தரப்பில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்டன.இதனால் தொகுதிப் பங்கீடு முடியாமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் தமிழ்நாடு வருகிறார். அவர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று சொல்லப்பட்டது.

இன்று இரவு பியூஷ்கோயல் சென்னை வரும் நிலையில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் டெல்லி செல்கிறார்.இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என்று சொல்லி முடிக்குமுன்பு எடப்பாடி டெல்லி செல்கிறார் என்பது அக்கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response