எதிர்ப்பை காணொலி எடுத்தவர்கள் கைது – தாராபுரம் தவெகவின் பரிதாபநிலை

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார்.இவர்,கடந்த ஏப்ரல் மாதம் இதேதொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்.இப்போது,தவெக.வில் இணைந்து மீண்டும் தேர்தலை எதிர்கொள்வதால் இவர் மீது தொகுதி முழுவதும் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.

இவர்,பரப்புரைக்குச் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் ஒன்றுகூடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.வாக்கு கேட்கும் அவரிடம்,எங்கள் தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என நினைத்துதான் உங்களை வெற்றிபெறச் செய்தோம்.ஆனால்,இப்படி சுயலாபத்துக்காக ராஜினாமா செய்துவிட்டு,மீண்டும் எங்களிடமே வந்து நிற்கிறீர்களே.எந்த முகத்தை வைத்துக்கொண்டு எங்களிடம் வாக்குக் கேட்டு வருகிறீர்கள்? என நேருக்குநேர் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்து விரட்டியடித்து வருகின்றனர்.இதனால்,அவர் பரப்புரையைத் தொடர முடியாமல் நிலைகுலைந்து போயுள்ளார்.

பல இடங்களில்,பணம் வாங்கிக்கொண்டு,கட்சி மாறி விட்டு மீண்டும் எங்களிடமே வாக்குக் கேட்டு வருகிறீர்களே என ஆதங்கத்துடன் கூறி அதிமுகவினரும் விரட்டியடித்து வருகின்றனர்.

வழக்கமாக,சில வேட்பாளர்களுக்கு ஒரு இடத்தில் எதிர்ப்பு,இன்னொரு இடத்தில் வரவேற்பு என்ற நிலை இருக்கும். ஆனால்,இவருக்கு போகிற இடமெல்லாமல் மக்கள் எதிர்ப்பு என்கிற காரணத்தால்,இவர் தயாரித்த பரப்புரை சுற்றுப்பயண பட்டியலை பலமுறை மாற்றம் செய்து வருகிறார்.

வேட்பாளர் சத்யபாமா மட்டுமின்றி,அவருக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரைக்கு வரும் அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 26 ஆம் தேதி இரவு தவெக வேட்பாளர் சத்தியபாமாவுடன் ஓட்டு கேட்டுச் சென்ற அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத்குமார்,புஸ்ஸி ஆனந்த்,செங்கோட்டையன்,பிரபு,முகமது பர்வேஸ் ஆகியோரை விவசாயிகள்,பொதுமக்கள், அதிமுகவினர் விரட்டியடித்தனர்.ஓட்டு கேட்டு எங்கள் ஊருக்குள் யாரும் வரக்கூடாது என்று முழக்கம் எழுப்பியதால்,பொதுமக்கள் மற்றும் அதிமுகவினருடன் தவெகவினர் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பலர் கைபேசியில் காணொலி எடுத்தனர்.இது,சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.புதிய அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே இவ்வளவு எதிர்ப்பா? எந்த இடைத்தேர்தலிலும் இப்படி நடந்ததில்லையே என அனைவரும் விமர்சித்தனர்.

காவல்துறையினர்,காணொலி எடுத்த கல்லூரி மாணவனைத் தாக்கி கைபேசியைப் பிடுங்கி காணொலியை அழித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தட்டிக்கேட்ட அதேபகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து,குணசேகரன்,பக்தவச்சலம்,ஸ்ரீதர்,கோவிந்தராஜ், ஆறுமுகம் மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் எனத் தெரியாததால், குண்டடம் காவல் நிலையத்தை அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமாரன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.

இதேபோல பொள்ளாச்சி பாமஉ ஈஸ்வரசாமி,சமஉ ஜெயராமகிருஷ்ணன், தாராபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் தாராபுரம் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பது குறித்த தகவலை தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில்,அவர்களை விடுவிக்கக் கோரி நேற்று அதிகாலை குண்டடம் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஐர்படுத்தி தாராபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர். மாணவரை மட்டும் விடுவித்தனர்.

குண்டடம் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்,ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகக் கூறி,காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது,வேட்பாளர் கட்சி மாறிச் சென்றால்,எதற்காக இப்படிக் கட்சி தாவிச் சென்றீர்கள் என வாக்களித்த நாங்கள்,கேள்வி கேட்கத்தான் செய்வோம்.அப்படி சத்தியபாமாவை கேள்வி கேட்டால்,உடனே கைது செய்வீர்களா? இந்த சம்பவத்தை காணொலி எடுத்தாலும் கைது செய்வீர்களா? என மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்த காணொலியும் வேகமாகப் பரவிவருகிறது.

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் தாய் மற்றும் உறவினர் கூறுகையில்,காணொலி எடுத்ததற்காகப் போனைப் பறித்த காவல்துறையினரிடம், என் மகனின் செல்போனை ஏன் பிடுங்குகிறீர்கள் என கேள்வி கேட்ட தந்தை மற்றும் உறவினர்களையும் சேர்த்துப் பலவந்தமாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கேள்வி கேட்டவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.வாக்களித்து வெற்றிபெற வைத்த பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தைக் கேள்வியாக கேட்கும்போது,தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அதற்காக பொறுப்பான பதிலை பொதுமக்களுக்கு கூறவேண்டும்.அதற்குப் பதிலளிக்காமல்,வாக்கு கேட்க சுமார் 200 காவல்துறையினருடன் வந்து மக்களை அச்சுறுத்துவதும்,கைது செய்வதும் நியாயமற்றது என்றனர்.

சத்தியபாமாவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்த தவெகவினரிடம் பெண் ஒருவர் கேள்வி கேட்கும் காணொலி சமூகவலைதளங்களில் பரவுகிறது.

அதில்,

நான் எந்தக் கட்சியையும் சாராதவர்.தற்போது இந்த இடைத்தேர்தல் தேவைதானா? ஏற்கனவே இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தவெக வேட்பாளருக்கு மீண்டும் ஏன் சீட் வழங்கவில்லை.அவர் பாவம் இல்லையா? ஆனால்,அதிமுகவில் இருந்து தவெகவுக்கு கட்சி தாவியவருக்கு சீட் வழங்கி உள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் சீட் வழங்குவதாக இருந்தால், உங்கள் கட்சி சார்பில் இத்தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு மூன்றாவது இடத்துக்குச் சென்ற அந்த வேட்பாளருக்குத்தான் சீட் வழங்கியிருக்க வேண்டும்.

அதிமுகவிலிருந்து ஓடிப்போன அவர்,போதுமான அளவுக்கு பணம் வாங்கிவிட்டார்.அதை வைத்துக்கொண்டு, வீட்டில் பத்திரமாக இருக்கட்டும்.பணம் இருந்தால்,யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுப்பீர்களா?.உங்களது கட்சியின் உண்மையான தொண்டர்களில் யாராவது ஒருவருக்கு சீட் வழங்கவேண்டியதுதானே? கட்சி மாறியவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படுகிறது? முழுக்க முழுக்க பணம் கைமாறி,மீண்டும் சத்யபாமாவிற்கு சீட் வழங்கி உள்ளீர்கள்.நாங்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டோம்.நோட்டாவுக்கு வாக்களித்தாலும் வாக்களிப்போமே தவிர,சத்யபாமாமாவுக்கு இன்னொருமுறை வாக்களிக்க மாட்டோம் என்கின்றனர்.

எங்கு சென்றாலும் கடும் எதிர்ப்பு நிலவுவதால் தவெக வேட்பாளர் சத்யபாமா திட்டமிட்டபடி பல இடங்களில் பரப்புரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அவர்,கடந்த ஒரேவாரத்தில் இரண்டுமுறை பரப்புரையை இரத்து செய்துள்ளார்.ஒருமுறை காய்ச்சல் எனக்கூறி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.குணமாகி வந்த பிறகும் அவரால் பரப்புரைக்குச் செல்ல முடியவில்லை.அந்த அளவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்நிலையில்,நேற்று காலை மூலனூர் பகுதியில் பரப்புரைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.ஆனால்,நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் பரப்புரைக்குச் சென்ற தவெக நிர்வாகிகள் பலரும் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.இதனால் தானும் அந்தப்பகுதிக்குச் சென்று,வாக்கு சேகரித்தால் விரட்டியடிக்கப்படுவோம் என்று எண்ணிய அவர்,திடீரென நேற்று காலை மூலனூர் பகுதி பரப்புரை இரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். பரப்புரைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.

Leave a Response