
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி அரிச்சந்திரா மைதானத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி‘நெஞ்சுரம் கொண்ட முதலமைச்சர் நிகரற்ற கொள்கைத் தலைவர்’ எனும் தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நடிகர் நாசர்,நடிகர் வடிவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் நாசர் பேசுகையில்….
கட்சிக்கு என்று ஒரு கொள்கை வேண்டும்.ஆனால் இப்போது வெறும் பிரபலமாக இருப்பதால் மட்டுமே கட்சி ஆரம்பிக்கலாம் என ஒருகட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.கொள்கையை அறிவிக்காமல் திட்டங்களை அறிவிக்கின்றனர். திட்டங்கள் என்றுமே கொள்கை ஆகாது.
எந்தக் கொள்கையில் நீங்கள் அரசை நடத்தப்போகிறீர்கள் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இப்போதுள்ள தமிழ்நாடு அரசு ஒரு கொள்கையோடு செயல்பட்டு பல சாதனைகளைப் படைத்து வருகிறது.திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ளது.அதில் பல தியாகங்கள்,பல வரலாறு என அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல பல உள்ளன.நான் கட்சி சாராதவன்,அனைவருக்கும் பொதுவானவன்,நமக்குத் தேவை கல்வி,பொருளாதாரம்,சுயமரியாதை,இவை அனைத்தும் ஒருங்கே இருக்கும் இடம் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.கடலில் பல அலைகள் வரும் போகும்.ஆனால் பல அலைகளைத் தாங்கி நிற்கும் பாறை எப்போதும் நிலைத்து இருக்கும்.அதுபோல நமது முதலமைச்சர் உள்ளார்
இவ்வாறு அவர் பேசினார்.
வாழ்த்தரங்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசுகையில்….
முதலமைச்சரின் தொகுதியில் நின்று பேசுவதற்கு மிகுந்த பெருமையாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது.அவருக்கு 73 வயது போன்று தெரியவில்லை.37 வயது இளைஞரைப்போல் செயல்படுகிறார்.கடந்த இருநாட்களாக பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல் பங்க்குகளில் பரபரப்பாக உள்ளனர்.இந்த நிலைமையைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார்.ஆனால் இந்த விவகாரத்தில் மக்களுக்காக பாஜகவில் இருந்து ஒருவர்கூடக் குரல் கொடுக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் திமுகவை அழிக்கவேண்டும்,திமுகவை அழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்,ஆனால் முதலில் இந்த பிரச்னையால் மக்கள் அழியாமல் இருக்க ஆவண செய்யவேண்டும்.யார் யாரெல்லாம் திமுகவை அழிக்கவேண்டும் என்று சொன்னார்களோ அவர்கள் ஆள் தெரியாமல் சென்று விடுகின்றனர்.திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தஞ்சாவூர் கோபுரம்போல வரலாறு உண்டு.இந்தக்கட்சியைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதனால் அது நிமிர்ந்து நிற்கிறது.இந்தக்கட்சியைப் போன்று வேறு எந்தக்கட்சிக்கும் வரலாறு என்பது கிடையாது. சமீபத்தில் முதலமைச்சர் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.5 ஆயிரம் கொடுத்து மக்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்தார்.
இதைவிட இன்னும் நிறைய இருக்குடி மாப்ள.முதல்வர சாதாரண ஆளுன்னு நினைச்சுட்டு இருக்காங்க.நீ பேசு. வசனம்லாம் மேடையில்தான் பேசமுடியும்.நீ பேசு…இந்தக் கட்சியும் முதலமைச்சரும் இருப்பதால் மட்டுமே தமிழ்நாட்டிற்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு.வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று நமது தலைவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார்.பொதுமக்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டனர். அதை யாராலும் மாற்றமுடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.


