தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் – விவரம்

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

மொத்தம் 97.37 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன. நீக்கப்பட்ட 97.37 இலட்சம் பெயர்களில், உயிரிழந்த வாக்காளர்கள் 26 இலட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 இலட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என கணக்கிடப்பட்டது.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் கோரி 27.85 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி பிப்ரவரி 10 ஆம தேதி நிறைவடைந்தது.

இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அவர், இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, 2026ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 27.10.2025 முதல் 23.2.2026 வரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப்பணிகள் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

27.10.2025 தேதியின் நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம், 2026ன் கீழ் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது, அதை தொடர்ந்து, 19.12.2025 முதல் 30.1.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுரைப்புரைகளுக்கான காலத்தில், பார்ம் 6 படிவத்தில் 27,85,195 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 27,53,796 பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.

இதேபோல், ஆட்சேபனை தெரிவித்து பார்ம் 7ல் 4,38,425 விண்ணப்பங்கள் வந்திருந்தது. இதில், 4,23,172 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 4.23 லட்சம் தகுதிபெறாத நபர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்களை கொண்ட 2026ன் இறுதி வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 23.2.2026 (நேற்று) நிலவரப்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 இலட்சத்து 07 ஆயிரத்து 380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர், மூன்றாம் பாலினம் 7,617 பேர் ஆகும். இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 இலட்சம், மாற்றுத்திறனாளிகள் என குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 இலட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 இலட்சம் பேர் உள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621; பெண்கள் 2,74,254; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75).

வாக்காளர் பட்டியலினை, தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பதிவு அலுவலரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் செய்யலாம். முதல் மேல்முறையீட்டு தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response