
மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரசுக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான அஜித்பவார், சனவரி 28,2026 ஆம் தேதியன்று மும்பையில் இருந்து பாராமதிக்குச் சென்றபோது விமான விபத்தில் பலியானார்.
அதனைத் தொடர்ந்து அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதலமைச்சரானார்.
அதோடு, அஜித் பவார் வகித்த தேசியவாத காங்கிரசுக் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கும் அவர் மனைவியே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பிப்ரவரி 16 திங்கட்கிழமை நடந்த கட்சிக் கூட்டத்தில் சுனேத்ரா,கட்சியின் தேசியத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.வரும் 26 ஆம் தேதி சுனேத்ரா முறைப்படி கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பை ஏற்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே அஜித்பவார் விமான விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி துணை முதலமைச்சர் சுனேத்ரா பவார் மற்றும் தேசியவாத காங்கிரசுக் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் பட்நவிசை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் பேசிய கட்சியின் மூத்த தலைவர் சுனில் தட்கரே,
எங்களது கோரிக்கை தொடர்பான ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் பேசுவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். அரசாங்கம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கி உள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளது. ஒன்றிய அமைப்பு விசாரணை நடத்தினால் சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார்.
மாநில அரசில் துணை முதலமைச்சராக இருந்து கொண்டே,மாநில அரசின் விசாரணையை நம்பாமல் ஒன்றிய அரசின் விசாரணையைக் கோரியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வு,ஆட்சியில் இணைந்திருந்தாலும் மனசுக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள்.


