டிடிவி.தினகரன் அழைப்பு ஓபிஎஸ் மறுப்பு – ஏன்?

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

எனது ஒற்றைக் கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணையவேண்டும்.இதன்மூலம் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்பதுதான்.

மீண்டும் ஒன்றிணைவது பற்றி ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய சனநாயகக் கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை.கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவால் 3 முறை முதலமைச்சரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.தமிழ்நாட்டில் நல்லாட்சி ஏற்பட ஓரணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அவரும் நல்லமுடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில்,ஓபிஎஸ் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு வினாக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் இந்தக் கூட்டணிக்கு வருவதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லையா?, கூட்டணிக்குள் வருவதற்கு ஓபிஎஸ் விதிக்கும் நிபந்தனைகள் காரணமா? கூட்டணியில் இணைந்தால் எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்கிற கேள்வியால் சிக்கலா? உள்ளிட்ட வினாக்கள் இருக்கின்றன.

இந்த வினாக்களுக்கு தெளிவான விடை இல்லை என்பதால் ஓபிஎஸ் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்றும் டிடிவி.தினகரனின் வெளிப்படையான அழைப்பால் மற்ற இடங்களில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதால் இப்படிச் சொல்கிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் யூகிக்கின்றனர்.

Leave a Response