
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியில் அவருக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் 54 ஆம் ஆண்டையொட்டி கோபியில் எம்ஜிஆர் சிலையின் இருபுறமும் எடப்பாடி ஆதரவாளர்கள் பதாகைகள் வைத்திருந்தனர். இதனை அகற்ற செங்கோட்டையன் தரப்பினர் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். பதாகைகளை அகற்ற எடப்பாடி ஆதரவாளர்கள் மறுக்கவே, செங்கோட்டையன் ஆதரவாளர்களும் சிலை முன்பு பதாகை வைக்கத் திரண்டனர்.
இதனால், இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.பதாகைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி கோபி நகராட்சி அதிகாரிகள் எடப்பாடி தரப்பினர் வைத்து இருந்த 2 பதாகைகளையும் அகற்றினர். இதனால் கோபியில் நேற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க எம்ஜிஆர் சிலை முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை எம்ஜிஆர் சிலைக்கு முதலில் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கும் அவர் மாலை அணிவித்தார். பின்னர் அவர் புறப்ப்ட்டுச் சென்றார்.அவ சென்றதும் அவருடைய ஆதரவாளர்களும் கலைந்து சென்றனர்.
அவர்கள் போன சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வந்து எம்ஜிஆர் சிலைக்குக் கீழே செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வைத்திருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையும், அலங்காரங்களையும் அகற்றினர். பின்னர் சிலைக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றனர்.
அதிமுகவின் 54 ஆவது ஆண்டு தொடக்கவிழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை எடப்பாடி ஆதரவாளர்கள் அகற்றியதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.


