எடப்பாடியின் பதட்டத்துக்குக் காரணம் செங்கோட்டையன் – அதிமுக பரபரப்பு

கரூர் கொடுந்துயரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று திமுக-அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணிக்கு ஆள் தேடிக் கொண்டு இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பதட்டமானார். அதனால், அமைச்சர் சிவசங்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்களை தர்ணாவில் ஈடுபட வைத்தார். அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களை அழைத்ததும், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவையின் 2 ஆவது நாள் கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இடது கையில் கறுப்புப் பட்டை அணிந்து வந்தனர்.

இதுகுறித்த தகவல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்குச் சொல்லப்படவில்லையாம்.ஆனாலும் தகவலறிந்து அவரும் கறுப்புப் பட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றார். எதிர்க்கட்சியினர் முன்வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பின்னால் திரும்பிப் பார்த்தார்.
அப்போது செங்கோட்டையனும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து இருப்பதைப் பார்த்துச் சிரித்தார். ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அதேசமயம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு உறுப்பினர்கள் கறுப்புப் பட்டை அணிந்து வரவில்லை. வழக்கம் போலவே வந்தனர்.

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கறுப்புப் பட்டை அணிந்து வந்ததாக கூறினாலும் செங்கோட்டையன் கறுப்புப் பட்டை அணியாமல் வந்தால் அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைத்திருந்த எடப்பாடியின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டதால் அவர் பதட்டம் ஆனார் என்றும் மேலும் அவையில் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் கோபமானார் என்றும் சொல்கிறார்கள்.இந்நிகழ்வு அதிமுக மேல்மட்டத்தினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Leave a Response