நீட் எதிர்ப்பில் பின்வாங்கமாட்டோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

பிப்ரவரி 19 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்,காணொலி வாயிலாக, கோவை மாவட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” என்ற முழக்கத்தோடு நாம் தேர்தலைச் சந்திக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கும் எதிர்காலத்துக்கும் திமுக ஆட்சி அமைந்தால் தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் வாக்களித்தார்கள்.

பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை வீழ்த்தி நம்மைத் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வைத்தார்கள். ஒரு ஆட்சி என்பது ஐந்தாண்டு காலம். அந்த ஐந்தாண்டு காலத்துக்குள் பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும். இதுதான் நல்லாட்சியின் இலக்கணம். ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓராண்டு காலம் கூட நிறைவடைவதற்கு முன்னரே, கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியைத் தலைசிறந்த ஆட்சி என்றுதானே சொல்ல முடியும். அத்தகைய தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நமது திமுக ஆட்சி நடந்து வருகிறது.

பெரும்பான்மை பலத்தால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். அந்த எண்ணத்தோடுதான் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.

கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது. தமிழ்நாட்டு உழவர் வாழ்வுக்காகவும்-உரிமைக்காகவும் தனது வாழ்நாளின் இறுதி வரையிலும் உழைத்தவர்தான் ‘உத்தமத் தியாகி’ நாராயணசாமி நாயுடு. அவரது பிறந்தநாளான இன்று(நேற்று), இந்தக் கூட்டம் நடப்பது பொருத்தமானது. நாராயணசாமி நாயுடு முன்னெடுத்த போராட்டத்துக்கு மதிப்பளித்து 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தமிழகத்தின் முதல்வராக ஆனபிறகு, உழவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தில் சலுகை என்று அறிவிக்காமல், இனிக் கட்டணமே செலுத்தத் தேவையில்லை என்கிற நிலையை உருவாக்கினார். உழவர்களுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தார் கலைஞர்.

நாராயணசாமி நாயுடுவின் நான்கு கோரிக்கைகளான கட்டணம் இல்லாமல் மின்சாரம், உழவர்களின் வங்கிக் கடன் தள்ளுபடி என்பதுதான். 1989 ஆட்சியாக இருந்தாலும்-1996 ஆட்சியாக இருந்தாலும்-2006 ஆட்சிக் காலமாக இருந்தாலும்-இப்போதும் – உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்த ஆட்சிதான் நம்முடைய திமுக ஆட்சியாகும். வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவரது மூன்றாவது முழக்கம். அதற்காகத்தான் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை நாம் கடுமையாக எதிர்த்தோம். அந்தக் கோரிக்கையை இறுதி வரை வலியுறுத்தினோம்.

வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அவரது நான்காவது முழக்கம். தொழிலாக மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கைமுறையாக – பண்பாடாக மாற்றுவதற்காகத்தான் வேளாண்மைத் துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை நாம் தாக்கல் செய்துள்ளோம். வேளாண் துறையைப் பொறுத்தவரையில் ‘உத்தமத் தியாகி’ நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாகத்தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவருக்கு நான் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒன்றிய அரசிடமும் நம்முடைய தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் போராடியும் வாதாடியும் பெறுகிற இயக்கமாக-ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டின் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக நீட் தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியரை நாம் இழந்தோம். நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்டு, சில பத்தாண்டுகளாகத்தான் பலரும் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். படித்தால் தானாகத் தகுதி வந்து வாழ்க்கையில முன்னேறி விடுவார்கள். ஆனால் படிப்பதற்கே உனக்குத் தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் நீட்.

அதனால்தான் நாம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். நீட் தேர்வை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அதன் முகமூடியைக் கழட்டிப் பார்க்க வேண்டும். வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை. மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ. அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே நீட் தேர்வை வைத்துத்தான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நீட் தேர்வு என்பதே 2016 ஆம் ஆண்டு பாஜ. அரசாங்கத்தால் திணிக்கப்பட்டது தான். அந்தத் தேர்வுக்கு 2016 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனால் 2016-17 ஆம் ஆண்டுக்கான தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தது; நான் மறுக்கவில்லை. இதே எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி இருந்தால் தேர்வை நடத்தாமல் விட்டிருப்பார்கள். ஆனால், அடிமை அதிமுக அரசாங்கம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். இதோ இப்போது நாம் துணிச்சலோடு, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்புல பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கிற திமுக அரசாங்கம் மாநில ஆட்சியை நடத்தி வரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால்-கோட்டையில் இருந்து உருவாக்கும் அனைத்துத் திட்டங்களும் – அனைத்து கிராமங்களுக்கும் – நகரங்களுக்கும் செல்லும். அனைத்து வீதிகளுக்கும் வீடுகளுக்கும் போய்ச் சேரும். விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும். எனவே திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் வாக்களிப்பீர். இந்தப் பொற்கால ஆட்சிக்கு, உங்களது பொன்னான வாக்குகளை வாரி வாரி வழங்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response