
எட்டாண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிற தமிழ்நாட்டு மருமகள் ஜோதிகா படம் முழுக்க நிறைந்திருக்கிறார், படம் முடியும் போது மனம் முழுக்க நிரம்பிவிடுகிறார்.
வேலைகேட்டுப் போன இடத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டு அசிரத்தையாக உட்கார்ந்திருக்கும் ஜோதிகா படம் முழுக்க, தான் ஏற்றிருக்கும் வசந்தி பாத்திரத்தில் மிகஅக்கறையாக நடித்திருக்கிறார். ஒரு சோம்பேறியாக, கணவன் மற்றும் குழந்தைக்குப் பணிவிடை செய்வதையே பெருமையாகக் கருதும் குடும்பத்தலைவியாக, அலுவலகத்தின் சகஊழியர்களைப் பற்றி புறம் பேசுபவராக, குடியரசுத்தலைவரைப் பார்த்ததும் மயங்கிவிழும் அப்பாவியாக என எல்லா இடங்களிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் ஜோதிகா.
என் பொண்ணும் வசந்தி மாதிரி ஆகிவிடக்கூடாது என்று கணவன் ரகுமான் சொன்னதற்காக தோழியிடம் வந்து, ‘அப்படின்னா இவ்வளவு வருசமா நான் என்னவா? இருந்தேன்’ என்று கேட்டுக் கண்ணீர்விடும் காட்சியில் கலங்கவைத்துவிடுகிறார்.
உன்னை இன்ஸ்பிரேசனா வச்சுத்தான் நான் இந்தஅளவுக்கு வளர்ந்திருக்கேன், எதைக்கண்டும் பயப்படாமல் போராடுகிற அந்த வசந்தி எங்கே? என்று அபிராமி கேட்கும்போது, தெரியல, குனிஞ்சு குனிஞ்சு உடைஞ்சே போயிட்டேன் என்று கலங்கும்போதும் கடைசியில் அபிராமியோடு தெம்பாகக் கைபேசியில் பேசும் காட்சியும் நன்று.
நமக்குன்னு இந்த உலகத்துல ஒருத்தர் இருக்கிறாங்க என்கிற நம்பிக்கை ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும் அப்படி ஒருத்தரும் இருக்கணும், நான் தனியா பொறந்தவங்கிற குறை எனக்கில்ல ஏன்னா ஐ’ம் பார்ன் வித் பெய்ன்’, கல்யாணத்துக்குப் பிறகு பெண்களின் கனவுகள் காலாவதியாவது ஏன்? என்பது உட்பட படத்தில் பெரும்பாலான இடங்களில் விஜியின் வசனங்கள் பலமாக அமைந்திருக்கின்றன. பல இடங்களில் காட்சிகளில் விவரிக்கவேண்டிய விசயங்களும் வசனங்களில் கடந்துபோகின்றன.
சந்தோஷ்நாராயணின் இசை படத்துக்குப் பலம். வாடி ராசாத்தி மற்றும் நாலு கழுதை வயசாச்சி ஆகிய பாடல்கள் நல்லவரவேற்பைப் பெறும்.
இந்தப்படத்தில் எழுப்பப்படுகிற, பெண்களின் கனவுகளுக்குக் காலாவதித் தேதி குறிப்பவர்கள் யார்? என்கிற கேள்வி மிக முக்கியமான கேள்வி.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்தப்படம் அவருக்கும் ஜோதிகாவுக்கும் மட்டுமின்றி பெண்களின் உரிமைகளுக்காக உலகத்தில் இதுவரை யாரும் இப்படிப் பேசியதில்லை என்கிற பெருமைக்குரிய பெரியார் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்கிற படம்.
