
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் தமிழிலேயே பேசுவார்கள்.
இதேபோல இந்தத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கோலார் எம்பியுமான முனியப்பாவின் மகள் ரூபா சசிதர் போட்டியிட்டார். இவர் தமிழர்களைக் கவரும் வகையில் தமிழிலே பேசி வாக்கு சேகரித்தார். தேர்தல் வெற்றிக்கு பிறகும் தமிழிலேயே பேசி வருகிறார். இதனால் கோலாரில் உள்ள கன்னட ரக்ஷன வேதிகே, நவநிர்மாண் வேதிகே, கன்னட சேனா உள்ளிட்ட அமைப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாரில் நடந்த கூட்டுறவு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ரூபா சசிதர் தமிழிலே பேசினார். இதற்கு அங்குள்ள தமிழ் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு கன்னட அமைப்பினர் சிலர் ரூபாவிடம், “இனி பொதுக்கூட்டங்களில் தமிழில் பேசக்கூடாது” என எச்சரித்தனர்.
இதுகுறித்து கோலார் மாவட்ட கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் எம்.கே.ராகவேந்திரா கூறுகையில், “கோலார் தங்கவயல் தொகுதி ஒன்றும் தமிழ்நாட்டில் இல்லை. கர்நாடகாவில் தான் இருக்கிறது. இங்கிருக்கும் தமிழர்களுக்கு கன்னடத்தில் பேசினால் புரியும். ஆனால் ரூபா தேவையில்லாமல் தமிழில் பேசிவருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினராக உள்ள அவர் கன்னடத்தைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது. இதேபோல பொது மேடைகளில் தொடர்ந்து தமிழ் பேசிவந்தால் அந்த இடத்திலேயே அவருக்கு தக்கப்பாடம் புகட்டுவோம். வருகிற தேர்தலில் ரூபா சசிதரையும், அவரது தந்தை முனியப்பாவையும் தோற்கடிப்போம்” என்றார்.
இதுகுறித்து ரூபா சசிதர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
நான் தொடக்கத்தில் இருந்தே தமிழில் பேசி வருவதால் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய மிரட்டலுக்குப் பயப்பட மாட்டேன்.
எனக்கு ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்த தமிழ் மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ, அந்த மொழியில் தான் பேச முடியும். தமிழில் பேசுவதாலே கன்னட மொழியை புறக்கணிப்பதாக கூற முடியுமா? என்றார்.


