அவமானத்திலிருந்து அர்ஜெண்டினாவை மீட்ட மார்கோஸ் ரோஜோ

குரூப் டி பிரிவில் அர்ஜெண்டினாவும் நைஜீரியாவும் மோதிய மிக முக்கியமான போட்டி ஜூன் 26 அன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே அர்ஜெண்டினா அடுத்தச் சுற்றைப் பற்றி நினைத்தே பார்க்க முடியும் என்பதால் ஏக பரபரப்பாய் துவங்கியது போட்டி.

போட்டி துவங்கியது முதலே பந்து அர்ஜெண்டினா வீரர்கள் வசம்தான் இருந்து வந்தது. மிக நெருக்கமான பாஸிங்கில் வித்தகர்களாக இருக்கிறார்கள் அர்ஜெண்டினா வீரர்கள். நைஜீரியா வீரர்களுக்கு முதல் சில நிமிடங்கள் கண்ணைக் கட்டி காட்டில்விட்ட கதையாகத்தான் இருந்தது.

5 மற்றும் 6-வது நிமிடங்களில் அர்ஜெண்டினா கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் முடியவில்லை. 8-வது நிமிடத்தில் நைஜீரிய அணி கோல் அடிக்க முற்பட்டு தோல்வியடைந்தது.

14-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மைதானத்தின் நடுப் பகுதியில் இருந்து பாதி தூரத்தில் நின்று கொண்டிருந்த மெஸ்ஸிக்கு பந்தை தூக்கியடிக்க.. அதனை தனது இடது தொடையில் தாங்கி, இடது பாதத்தில் அடித்து.. மின்னல் வேகத்தில் உருட்டியபடியே வந்து நைஜீரிய கோல் கீப்பரையும் ஏமாற்றி கோலுக்குள் போகும் வகையில் தனது வலது காலால் ஒரு உதைவிட்டார்.

இந்த மேட்ச்சின் முதல் கோல் இப்படித்தான் பதிவானது. நிச்சயம் இது மிக அழகான கோல்தான்.

15-வது நிமிடத்தில் மீண்டும் அதேபோல் அர்ஜெண்டினா வீரர் கோல் அடிக்க வர அவரை கட்டைக் கால் கொடுத்து கவுத்தினார்கள் நைஜீரிய வீரர்கள். உடனேயே ப்ரீ கிக் கிடைத்தது. ஆனால் இந்த ப்ரீ கிக் வேலைக்கு ஆகவில்லை.

தொடர்ந்து இரு தரப்பிலும் அங்கே கொஞ்ச நேரம்.. இங்கே கொஞ்ச நேரம் என்று பந்தை கடத்திக் கொண்டே இருந்தார்கள்.

28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் தனி ஆளாக தன்னிடம் வந்த பந்தை மிக வேகமாக உருட்டிக் கொண்டு வர நைஜீரிய வீரர் முன் வந்து அந்தப் பந்தை உதைத்துவிட்டதால் பந்து வெளியேறியது.

ஆனால் போகிறபோக்கில் அர்ஜெண்டினா வீரர் நைஜீரிய கோல் கீப்பரை உதைத்துவிட அவர் காயம்பட்டு அலறியேவிட்டார்.

31-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் 11-ம் எண் வீரர் தனி மனிதனாக பந்தை உருட்டிக் கொண்டு மின்னலாய் ஓடி வர.. பின்னாலேயே ஓடி வந்த நைஜீரிய வீரர்கள் வழக்கம்போல கவட்டைக் கால் கொடுத்து ஆளை கீழே விழுக வைக்க.. மஞ்சள் கார்டு பெற்றார் நைஜீரிய வீரர்.

இதற்காக பெற்ற ப்ரீ கிக்கில் மெஸ்ஸி அடித்த பந்து மிக அழகாக அரை வட்ட வடிவத்தில் பறந்து கோல் போஸ்ட்டைத் தொட்டுவிட்டு வெளியேறியது. ஏமாற்றமானார் மெஸ்ஸி. அவர் மட்டுமா.. மொத்த அர்ஜெண்டினா ரசிகர்களும்தான்..!

40-வது நிமிடத்தில் இதேபோல் நைஜீரிய வீரரும் தனியொரு ஆளாக பந்தை உருட்டிக் கொண்டு வந்து கோல் போட எத்தனிக்க.. அர்ஜெண்டினா கோல் கீப்பர் அதைத் தடுத்து அவுட்டுக்கு அனுப்பி வைத்தார்.

45-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா கோல் போஸ்ட் அருகில் மிக பரபரப்பாக நடைபெற்ற போராட்டத்தில் அர்ஜெண்டினா வீரர் தன் இடது காலால் மிக அழகாக பந்தை திருப்பியடித்து வெளியில் அனுப்பினார்.

ஆனால் அவர் அடித்த வேகத்தில் நைஜீரிய வீரரையும் அழுத்திப் பிடித்து அவரது முகத்தையும் லேசாக பதம் பார்த்துவிட்டார். நிச்சயம் இது பெனால்டிதான். ஆனால் நடுவர் கொடுக்கவில்லை.

எக்ஸ்ட்ரா நேரத்தின் முடிவில்கூட அர்ஜெண்டினாவுக்கு ப்ரீ கிக் கிடைத்தது. ஆனால் அடிக்கப்பட்ட பந்தை கோல் கீப்பர் மிக லாவகமாகப் பிடித்துவிட.. போட்டி இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது அர்ஜெண்டினா.

எப்போதும் இடைவேளைக்கு பின்புதான் டர்னிங் பாயிண்ட்டே நடக்கிறது என்பதால் இனி என்ன ஆகும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது..!

அதற்கேற்றாற்போல் போட்டி துவங்கிய 3-வது நிமிடத்திலேயே அர்ஜெண்டினா ரசிகர்கள் எதிர்பார்க்காத அந்தச் சம்பவம் நடந்தேறியது.

அர்ஜெண்டினாவின் கோல் போஸ்ட் பகுதியில் அடிக்கப்பட்ட கார்னர் ஷாட்டின்போது Javier Mascherano என்ற அர்ஜெண்டினா வீரர் விக்டர் மோசஸ் என்கிற நைஜீரிய வீரரை அப்படியே இறுக்கிப் பிடித்து கீழே தள்ளிவிட்டார்.

தற்செயலாக இதனை பார்த்துவிட்ட நடுவர் உடனேயே பவுல் என்றார். ஜேவியருக்கு மஞ்சள் அட்டையைக் கொடுத்த கையோடு பெனால்டி என்றார்.

திடுக்கிட்ட அர்ஜெண்டினா வீரர்கள் இல்லை என்று வாதாடிப் பார்த்தார்கள். நடுவர் அதனை மூன்றாவது நடுவருக்கு தள்ளிவிட்டார். அங்கிருந்து வந்த தகவலையடுத்து அது பெனால்டிதான் என்று உறுதியாய் சொன்னார் நடுவர்.

அர்ஜெண்டினா வீரர்கள் ஒதுங்கி நிற்க.. பெனால்டியை கச்சிதமாகப் பயன்படுத்தி முதல் கோலை போட்டார் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ். இப்போது 1-1 என்ற கோல் கணக்கில் சமமானது என்றாலும், புள்ளிகள் பட்டியலில் நைஜீரியா இரண்டாவது இடத்தைப் பிடித்ததினால் அர்ஜெண்டினா போட்டி முடிந்தவுடன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலைமை.

அர்ஜெண்டினா ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. சிலர் கண் கலங்கி அழுதனர். மாரடோனோ அப்படியே திகைத்துப் போய் அமர்ந்துவிட்டார்.

அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர் ஏற்கெனவே நடிகர் திலகமாக இருப்பவர். இதைப் பார்த்தவுடன் இன்னமும் டென்ஷன் அதிகமாகி தாறுமாறாக குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆனாலும் மெஸ்ஸியும், அவரது வீரர்களும் கோல் போடுவது ஒன்றே நமது லட்சியம் என்பதை போல மீண்டும் களத்தில் தீவிரமாக போராடத் துவங்கினார்கள்.

61 மற்றும் 65-வது நிமிடங்களில் அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடிக்க முயன்றார்கள். முடியவில்லை. நைஜீரிய கோல் கீப்பர் கச்சிதமாக அதனைப் பிடித்துவிட்டார்.

இரு தரப்பிலும் பந்தை பறிப்பதில் அதிக ஆர்வம் காட்டினாலும் இரு தரப்பு முன் கள வீரர்களை மீறி கோல் போஸ்ட்டுக்குள் நுழைவதென்பது முடியாமல் இருந்தது. அந்த அளவுக்கு பந்தை மீட்க ஒன்றுக்கு மேற்பட்டோர் முனைந்தனர். சலிக்காமல் ஆளைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு பந்தை உருட்டிக் கொண்டு சென்றனர்.

70-வது நிமிடத்தில் நைஜீரியாவுக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அடிக்கப்பட்ட பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே பறந்து சென்றது.

72-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா கோல் அடிக்கும் முயற்சியில் முன்னேறி வந்து அடிக்க.. பந்தை கோல் கீப்பரின் டச்சுடன் வெளியில் பறந்து சென்றது.

75-வது நிமிடத்தில் மிகப் பெரிய கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றது. அர்ஜெண்டினாவின் கோல் போஸ்ட் பகுதியில் கார்னர் ஷாட்டை அடித்தனர் நைஜீரிய வீரர்கள். அந்தப் பந்தை அர்ஜெண்டினாவின் வீரர் தன் முகத்தில் வாங்கி பின் கையாலும் தடுத்தார்.

இதனை பெனால்டியாக அறிவிக்கும்படி வற்புறுத்தினார்கள் நைஜீரிய வீரர்கள்.
நடுவர் வழக்கம்போல மூன்றாவது நடுவரிடம் கை காட்டிவிட்டு நின்றார். அங்கேயும் குழப்பமான பதில் வரவே..

தானே டிவி பாக்ஸுக்கு போய் பார்த்துவிட்டு வந்து பந்து முகத்தில் பட்ட பின்புதான் கையில் பட்டது. எனவே பெனால்டி இல்லை என்று அறிவித்தார். இதில் பெனால்டி கொடுத்திருந்தால் கதையே மாறியிருக்கும்.

79-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர்கள் மீண்டும் வந்து நைஜீரியா கோல் பகுதியை முற்றுகையிட அப்போது அடிக்கப்பட்ட பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலை பறந்து சென்று ஏமாற்றமளித்தது.

83-வது நிமிடத்தில் நடந்த சில தள்ளுமுள்ளுகளுக்காக நைஜீரிய அணிக்கு ப்ரீ கிக் கிடைத்தது. ஆனால் அதனை அவர்களால் கோலாக்க முடியவில்லை.

84-ம் நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி கிடைப்பதுபோல நைஜீரிய வீரர்கள் ஒரு வீரரை கீழே தள்ளிவிட்டார்கள். இதற்காக நடு மைதானம்வரையிலும் நடுவரின் பின்னாலேயே போய் நியாயம் கேட்டார்கள் அர்ஜெண்டினா வீரர்கள். ம்ஹூம்.. நடுவர் மனம் இரங்கவில்லை.

ஆனால் இதற்கான தீர்ப்பு அடுத்த நிமிடமே கிடைத்தது.

தொலை தூரத்தில் இருந்து நைஜீரிய அணியின் கோல் பகுதியில் வலது பகுதியில் இருந்த அர்ஜெண்டினா வீரருக்கு பந்து பறந்து வர.. அதை அவர் மிக அழகாக கோல் பகுதியின் வெளிவட்டத்தில் நின்றிருந்த மார்கோஸ் ரோஜோ என்கிற வீரரின் கால்களை அடைய.. அவரோ அத்தனை தூரத்தில் இருந்தும் ஷாட் அடிக்கலாமே என்கிற எண்ணத்தில் அடிக்க.. பந்து அனைவரையும் ஏமாற்றிவிட்டு கோலுக்குள் நுழைய.. ஒட்டு மொத்த ஸ்டேடியமும் அதிர்ந்தது.

இந்த மேஜிக் கோலை போட்ட மார்கோஸ் ரோஜாதான் இன்றைக்கு அர்ஜெண்டினாவின் ஒரே குரல். இன்று இரவு முழுவதும் அர்ஜெண்டினா மக்களை தூங்கவிடாமல் வைக்க இருப்பவரும் இவர்தான்.

இந்த கோலுக்கு முந்திய நொடிவரையிலும் அடுத்தச் சுற்றுக்கு 4 புள்ளிகளுடன் தகுதி பெற்று தயாராய் காத்திருந்தது நைஜீரியா. இந்த ஒரே கோல் நைஜீரியாவை துரத்திவிட்டு அடுத்த சுற்றுக்கு அர்ஜெண்டினாவை நகர்த்தியிருக்கிறது.

– சரவணன்

Leave a Response