
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர் ,காவல்துறை உயரதிகாரிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
சென்னையில், ‘குட்கா’ வியாபாரிகளிடம், 2016 ஜூலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஒரு டைரியில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பெயர் இருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்தது.
அது தொடர்பான ஆவணங்களை, தமிழக அரசிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, குட்கா ஊழல் குறித்த லஞ்ச ஒழிப்பு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பல அதிகாரிகள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அப்போது தான் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்க வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக போதிய விளம்பரம் அளித்து மக்களின் தகவல்களை பெற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
என் கோரிக்கை நியாயமானது என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று மகிழ்கிறார் ஜெ.அன்பழகன்.
