விவசாயிகளை அம்மணமாக்கிய மோடியை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்

டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 28 ஆம் நாளான இன்று (ஏப்ரல் 10- திங்கட்கிழமை) அவர்களில் 8 பேரை பிரதமரிடம் சந்திக்க வைப்பதாகக் கூறி மந்திர் மார்க் காவல் நிலைய காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

இதற்காக அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் இருந்து எட்டு பேரும் பிரதமரிடம் அளிக்க வேண்டிய மனுவுடன் ஆவலாகச் சென்றனர். அங்கு பிரதமரின் அலுவலகத்தில் அவர்களிடம் இருந்து மனு பெறப்பட்டது.

பிரதமர் நாடாளுமன்ற கூட்டத்திற்குச் சென்றிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகளை மீண்டும் காவலர்கள் வாகனத்தில் ஏற்றி ஜந்தர் மந்தருக்கு கொண்டு சென்றனர். பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள ராஜ்பாத் சாலையில் இருந்து வாகனம் புறப்பட்ட போது, திடீரென அதிலிருந்து மூன்று விவசாயிகள் கீழே இறங்கினர். பிறகு தங்களுடைய ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்று, ‘தேஷ்கா கிசான்கோ பச்சாவ்(நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்)’ என ஆவேசமாக இந்தியில் கோஷமிடத் துவங்கினர்.

பிறகு ராஜ்பாத் சாலையின் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக தரையில் உருளத் துவங்கினர். இதனால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அய்யாகண்ணு கூறுகையில், ‘பிரதமரை சந்திக்க வைப்பதாகக் கூறி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர். எங்களை சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார். நாங்கள் இந்த நாட்டின் அடிமைகளாகி விட்டோம். இதுதான் எங்கள் பரிதாபநிலை. இந்த நாட்டின் விவசாயிகள் பரிதாபத்துக்குறியவர்கள் ஆகி விட்டனர்.’ எனத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம் உட்பட மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் கொண்டு நார்த் பிளாக், சவுத் பிளாக் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையும் அங்கு அமைந்துள்ளது. இதை வெளியில் இருந்து அன்றாடம் காண வரும் சுற்றுலாவாசிகள், பொதுமக்கள் மற்றும் மத்திய அரசின் அலுவலர்களும் இதைக் கண்டு திகைத்து நின்றனர். சில நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் விவசாயிகளை சமாதானப்படுத்திய காவலர்கள், அவர்கள் ஆடைகளை அணிய வைத்து மீண்டும் ஜந்தர் மந்தர் கொண்டு வந்து விட்டுள்ளனர். இவர்களில், நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 13 முதல் துவங்கி நடைபெற்று வரும் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, வங்கிக்கடன் இரத்து, நதிகள் இணைப்பு, வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் எனப் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகக் கடும்கண்டங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தற்சார்பு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்ஹ்டிக்குறிப்பில்,

டெல்லியில் தமிழக விவசாயிகளை பார்க்காமல்அவமதித்த பிரதமர் மோடியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு மாத காலமாக டெல்லியில் ஜந்தர்மந்தர் வீதியில் அமர்ந்து தமிழக விவசாயிகள்அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில்
போராடி வருகின்றனர்.விவசாயிகளின் கோரிக்கை சட்டப்படியானது, ஜனநாயக முறையிலானது.டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் ஆதரித்துப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏழு கோடிமக்களின்பிரதிநிதிகளாக உள்ள உழவர் பெருமக்களை பிரதமர் அலுவலகம் வரை அழைத்துச் சென்று ஏமாற்றியதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் முழு அம்மணமாக பிரதமர்அலுவலகம் முன் படுத்து உருண்டு போராடி
உள்ளனர்.

இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது பிரதமரின் இந்த இழிவு படுத்தும் செயலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
10-04-2017

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response